GuidePedia

0
தமிழகத் தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் வடபழநியாண்டவர், தன்னை தரிசிப்பவர்களின் வாழ்வு வளம் பெற அருள்பாலிக்கிறார். தைப்பூச நன்னாளில் அவரை வணங்கி நல்வாழ்வு பெறுவோம். தல வரலாறு: வடபழநியாண்டவர் கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர் அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு "பாவாடம்' என்று பெயர். ஒரு சிறிய கீற்றுக் கொட்டகையில், பழநி ஆண்டவர் படத்தை வைத்து பூஜை செய்தார். அவ்வாறு வழிபட்ட இடமே வடபழநி கோயிலாக பிற்காலத்தில் மாறியது. அவர் வழிபட்ட பழநி முருகன் படம் இன்றும் சந்நிதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது.

ரத்தினசாமி தம்பிரான்: இவரும் முருகனுக்காக பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர். இவர் காலத்தில் தான் இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அண்ணாசாமி தம்பிரான், வாழ்ந்த காலத்தில் பக்தர்களுக்கு குறிசொல்லி வந்தார். அவர் அமர்ந்திருந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவரே.

பாக்கியலிங்க தம்பிரான்:

 இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகத்தை அமைத்தும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்று கருங்கல் திருப்பணியையும் செய்தவர் பாக்கியலிங்க தம்பிரான். இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் புகழ் பெறத் தொடங்கியது. மூவரின் சமாதியும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சிறிது தூரத்தில் உள்ளன. (மூவருக்கும் கோயிலுக்குள் சந்நிதியும் உள்ளது. இவர்களுக்கு நெற்குன்றம் செல்லும் பாதையில் தனித்தனி கோயிலும் உள்ளது). வடபழநி கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. 

செவ்வாய் சந்நிதி: இங்கு மூலவர் வடபழநி யாண்டவர் என்று அழைக்கப்படுகிறார். இவர் தாமரைப் பீடத்தின் மீது இருப்பதும், தனது வலது பாதத்தை முன் வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முருகன் பாத ரட்சையுடன்(காலணி) காட்சி தருவது தனிச்சிறப்பு. தங்கத்தேர் அமைந்த கோயில்களில் இதுவும் ஒன்று. முருகனின் துணைவியரான வள்ளி, தெய்வானை தனி சந்நிதியில் வீற்றிருக்கின்றனர். தல விருட்சம் அத்தி. பூஜைகள் சிவாகம முறைப்படி நடத்தப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் தனி சந்நிதியில் இருக்கிறார். இவரை செவ்வாயன்று வழிபட,தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். 

சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் என்பதால், சக்தி மிக்கதாக விளங்குகிறது. இங்குள்ள ராஜகோபுரம் 72 அடி உயரம் கொண்டது. பழநி செல்ல இயலாதவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர். 
திறக்கும் நேரம்: காலை 6.00 - பகல் 12.00 மாலை 4.00- இரவு 9.00.
போன்: 044 2483 6903

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...