சென்னை நகரில் போரூர் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறப்பான திருக்கோயில் இராம பிரான் வழிபட்ட இராமநாத ஈசுவரர் திருக்கோயில் “உத்திர ராமேசுவரம்’ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
புராண வரலாறு: இராமபிரான் சீதாபிராட்டியைத் தேடி வரும்பொழுது இலுப்பை மரங்கள் அடர்ந்த போரூர் காட்டுப்பகுதிக்கு வருகிறார். ஓரிடத்தில் நெல்லி மரத்தின் வேர் அவர் காலை இடறிவிட்டது. வேருக்கு அடியில் சிவலிங்
கம் இருப்பதை உணர்ந்தார். தன் கால்பட்டதற்கு வருந்தி, நெல்லிக்கனியை மட்டும் உணவாகக் கொண்டு தவமிருந்தார்.
48 நாட்கள் கழித்து, அவரது தவத்தைப் பாராட்டி சிவபெருமான் தோன்றினார். அன்பின் மிகுதியால் ராமபிரான் சிவபெருமானை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த இடத்தில் அமிர்தலிங்கமாக இறைவன் தோன்றினார். சீதை இருக்குமிடம் பற்றி விசாரித்தபொழுது தெற்கே செல்லக் கூறினார்.
சிவபெருமான் குருவாக இருந்து வழிகாட்டியதால் இத்தலம் குருஸ்தலமாகவும், அன்பர்களின் குறைகளைப் போக்கும் உத்திர ராமேசுவரம் எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ராமேசுவரம் செல்ல இயலாதவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்யலாம். இராமபிரான் அன்பினால் சிவபெருமானைக் கட்டி அணைத்துக் கொண்டதால் சிவபெருமான் திருமேனி மீது அம்பின் வடிவம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இராமபிரான் வழிபட்ட தலங்கள் என தஞ்சை – பாபநாசம் 108 சிவாலயம், ராமேசுவரம் போன்ற தலங்கள் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இராமர் வழிபட்ட அமிர்தலிங்கமாகிய சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாகவும், சடாரியும் பக்தர்களுக்கு அளிக்கப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும். கோயில் திருச்சுற்றினுள் அமைந்துள்ள நெல்லி மரத்தின் கீழ் இராமபிரான் தவமியற்றியதற்கு அடையாளமாக இரு பாதங்கள்
பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது.
திருக்கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில். பல்லவர் காலத்திலேயே இங்கு கோயில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இங்கு வழிபடப்பெறும் சண்டிகேசுவரர் திருமேனி பல்லவர் கால கலை அம்சத்துடன் விளங்குகிறது.
பிறகு சோழர் காலத்தில் கருங்கற் திருப்பணியாக இக்கோயில் அமைக்கப்பட்டது. இங்கு காணப்படும் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கல்வெட்டில் இக்கோயில் “திருப்பெருங்கோயில்’ என அழைக்கப்பட்டதை அறிகிறோம்.
தொண்டை நாட்டுக்கே உரியதான கஜபிருஷ்டதூங்கானை மாட வடிவத்துடன், உயர்ந்த பீடத்தின் மீது கருவறை அமைந்துள்ளது. கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் வணங்கப்படுகின்றன. கோயில்,
கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது.
மகாமண்டபம் 16 கால் மண்டபமாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இம்மண்டபத்தின் விதானப்பகுதியில் சித்தர்கள், சைவ சமயம் போற்றும் நால்வர், திருமால் வடிவங்கள், ஜோதிர்லிங்க வடிவங்கள் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அழகிய சுதை சிற்பங்கள் அழகு செய்கின்றன.
மேலும் விதானத்தில் ராசி சக்கரம் அழகாகக் காணப்படுகிறது. மேலும் மண்டபத்தில் சுற்றுச் சுவரின் வெளிப்பகுதிகளிலும் அழகிய சுதை சிற்பங்கள் அழகு செய்கின்றன. திருச்சுற்றில் வேம்பு, நெல்லி, மாமரம் மற்றும் ஒன்பது வில்வ மரங்கள் நிறைந்து பசுமையாக விளங்குகின்றன. திருச்சுற்றினில் விநாயகர், முருகன் தேவியருடன், பைரவர், வாகனம் மற்றும் தேவியர்களுடன் காட்சி தரும் நவக்கிரகங்கள், சனீசுவர பகவான் சந்நிதி
போன்றவை மக்களால் போற்றி வணங்கப்படுகின்றன.
சிவன் சந்நிதி எதிரே நந்தி பகவான் எழுந்தருளியுள்ளார். பிரதோஷ வழிபாடு இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. நந்தி, பலிபீடத்திற்கு அருகில் தெற்கு நோக்கி அம்பாள் சிவகாமசுந்தரி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். மேலிரு கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், முன்னிரு கரங்களில் அபய – வரத முத்திரை தாங்கி அருள்புரியும் அற்புதக் கோலத்தைக் கண்டு வணங்கலாம்.
தலச் சிறப்பு:
1. சென்னையில் உள்ள கொளப்பாக்கம் (சூரியன்), சோமங்கலம் (சந்திரன்), பூந்தமல்லி (அங்காரகன்), கோவூர் (புதன்), போரூர் (குரு), மாங்காடு (சுக்கிரன்), பொழிச்சலூர்
(சனி), குன்றத்தூர் (ராகு), கெருகம்பாக்கம் (கேது),தொண்டை மண்டல நவக்கிரகத் தலங்களில் குருஸ்தலமாக போரூர் விளங்குகிறது.
2. வைணவக் கோயில் போன்று தீர்த்தமும், சடாரியும் வழங்கப்படுகிறது.
3. புத்தி சுவாதீனம் – நினைவு சக்தி குறைந்தவர்கள் – மன வேதனையால் துன்பப்படுவோர் இத்தலத்து சண்டி
கேசுவரருக்கு காய்கறி மாலை அணிவித்து பன்னீர் அபிஷேகம் செய்து நலமடைகின்றனர்.
4.அம்பாள் சிவகாமசுந்தரி காளியின் அம்சமாகத் திகழ்வதால் திருமணம் – குழந்தைப்பேறு வேண்டி பலன் அடைகின்றனர்.
சிறப்பு நிகழ்வுகள்:
இக்கோயிலில் சித்திரை மாதத்தில் நிறைகனி அலங்காரம், ஆடி மாதம் வளைகாப்பு, தை மாதம் வருஷாபிஷேகம், சிவராத்திரி விழா போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.
இராமபிரான் வழிபட்ட அமிர்தலிங்கமாகிய ராமநாத ஈசுவரர் எப்பொழுதும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைபோக்கும் வள்ளலாக விளங்கி வருகிறார்.
தொடர்புக்கு: 98844 79836