GuidePedia

0
மனித மனம் உலகியலையேச் சார்ந்து உதவாக்கரை இன்பங்களிலேயே மூழ்கி, இறக்கும்வரை இன்னல்பட்ட இடர்பாடுகளைத் தந்து இன்றைய அனுபவத்தை நாளைக்குத் திணித்து விடும் அவலத்திலிருந்து மீட்பதே உண்மையான மீட்பர் செயலாகும்.  

  மனிதன் ஏதேனும் ஒன்றைப் பிடித்துக் கொள்கிறான். அதற்காகவே நேரத்தைச் செலவிட்டு அதிலேயே மடிந்து விடுகிறான். சர்க்கரைப் பாகுவில் விழுந்து செத்துப் போன எறும்பைக் கண்டும் அடுத்தடுத்த எறும்புகள் அதிலேயே விழுந்து மாண்டு போவது போல, தனக்கு வழிகாட்டியாக இருந்த குரு நோய்வாய்ப்பட்டு இறந்தபிறகும், தானும் அதுபோல இறக்க நினைப்பது என்ன நியாயம்? உலகின் பல போலிகள் தொடர்ந்து தொழிலை லாபகரமாக நடத்துவதற்கு மனதின் இந்த மடமையே காரணம். பயிற்சியின் மூலம் கிடைக்கும் பயனை விட விசுவாசம் என்ற பெயரில் உண்டாகும் அடிமைத்தனம் ஆராய்தல் என்கிற பண்பைக் கொன்றுவிடுகிறது இது பற்றி விரிவாக அறிவோம். 


      மனித மனம் அறிவின் மீது வைக்கும் விசுவாசத்தை விட ஐம்புலன் மீது வைக்கும் விசுவாசம் அதிகமானது. எனவே புலன் இச்சையிலேயே நேரத்தை செலவிட்டு நிம்மதியை இழக்கும் குணாதிசயம் நமது மனதிற்கு உண்டு. நமது மனம் புருவ மத்தியில்  புறப்பட்டு கீழ் நோக்கியே பயணம் செய்யும்போது புலன் இன்பம் உருவாகிறது. இது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் உண்டான நிலையாகும். இதே மனம் மேல்நோக்கிய வான்கலத்தின் இழுவிசையால் உந்தப்பட்டு புருவமத்தியிளிருந்து மேல்நோக்கி பயணம் செய்தால் அருள் வல்லபமாக மாறிவிடும். மனதின் கீழ்நோக்கிய உணர்வு காம சக்தியாக மாறும். மேல்நோக்கிய உணர்வு அருள்வல்லபமாக மாறும். அருள் வல்லபத்தால் மூப்பு, பிணி வெல்லப்படுகிறது. காம உணர்வால் பிணி, மூப்பு விரைவில் உண்டாகிறது. 


   மனதை மேல்நோக்கிய உணர்விலேயே வைக்க தவத்தில் சிறந்த தவசீலர்கள்  தொடர்பை மேம்படுத்த வேண்டும். இதற்கு தகர வித்தை, முக்கோண சக்கரத் தியானம் பெரிதும் பயன்படும். இதனை தகுந்த குருமார்களிடம் கற்றுத் தேரவேண்டும். மனதை ஒருநிலைப் படுத்தி விட்டால் பெரிய நன்மைகள் கிடைத்து விடும் என்று பலரும் பகல் கனவு காண்கிறார்கள். இது முற்றிலும் தவறு. மனதிற்கு ஒருநிலைப்பாடு என்பதே கிடையாது.  மனதின் சுழற்சி வேகம் குறைந்து இரண்டாவது மனம் முதல் மனதை அறியாமல் இருக்கின்ற மந்தநிலையை சிலர் மன ஒருநிலைப்பாடு என்கிறார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. கட்டிப் போட்ட நாயை கட்டவிழ்த்து விட்டால் மீண்டும் பழைய செயல்களையே தொடரும். எனவே இதிலிருந்து சித்தர்களின் தவநெறி முற்றிலும் வேறுபட்டது. 



       மனம் என்கிற நாய்க்கு நல்ல போதனைக் கூறி நெறிப்படுத்தவும் முடியாது. இதனை பட்டினி போட்டு அலையவிடாமல் அமைதியாக்கவும் முடியாது. எனவே மனம் என்ற நாயை சாகடிப்பதே சரியான வழியாகும். இதனாலேயே சித்தர்கள் 


"சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே "  என்பார்கள். 


   மனதிற்கு அனுபோக உரிமை வழங்காது விட்டுவிட்டால் காலப் போக்கில் மனம் இறந்துவிடும். ஒருமனம் இறந்து அடுத்த மனம் உற்பத்தி ஆவதற்கு உள்ள இடைவெளியில் உள்ள வெற்றிடத்தில் நிரம்பி நிற்கும் ஆத்ம  சக்தியே அருள் வல்லபம் என்பதாகும். இதுதான் மனித குலத்திற்கு பயன்படுமே தவிர மனதை ஒருநிளையாக்கி பயன்பெறவே முடியாது. கஞ்சா சாப்பிடுபவனுக்குக்  கூட மனம் மூடமாகி ஒருநிளையிலேயே  ஒருநிலையிலேயே நிற்கும். இதனால் சூழ்நிலையை மறந்து வாழலாமே தவிர வேறு பயன்கள் விளையாது. மனதை நெறிப்படுத்த பல குருமார்கள் பல நூல்களை எழுதிவிட்டார்கள். பல்வேறு பயிற்சிகளும் கொடுத்துவிட்டார்கள். ஆனால்  விளைவு எந்த நன்மையாகவும் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விபரீதம் அந்தப் பயிற்சியை தலை மீது சுமந்து ஆரவாரம் செய்வதும், காணாதவன் கண்டவன் போல புலம்புவதும் அடுத்த சந்ததியும் அறிவார்ந்த பயணம் செய்ய முடியாதபடி  பரப்புரை   செய்து பாவிகளாக்கும் மடமையைத் தொடர்ந்து இப்புவி கண்டுவருகிறது.


     ஒரு குருவானவர் வயோதிகத்தை தள்ளி வைத்தாரா?  பிணியை நிறுத்திக் காட்டினாரா? மரணத்திலிருந்து தப்பி வந்தாரா? இதெல்லாம் நடைபெறாத போது அந்த வித்தை எதற்குப் பயன்படும்? எதற்காக வீணாக நேரத்தை செலவிட வேண்டும்? மனதை சாகடிப்பத்தின் மூலம் உடம்பின் அதிர்வுகள் கட்டுப் படுத்தப்படுகிறது.  அப்புறம் உற்பத்தியாகும் புதுமனம் பழையபடியே புலன் உணர்வு இச்சையில் நாட்டம் கொள்வது  இல்லை. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்கிற ஞான சம்பந்தர்  வாக்குப்படி சிறப்பான வாழ்விற்கு அழைத்து செல்லப்படுகிறது. 


     கற்பனை அற்ற கனல் வழியே சென்று சிற்பரனை தொழுது  வருவதே உண்மையான யோக சாதனை எனப்படும். இதை தவசீலர்கள் மட்டுமே போதிக்க முடியும். பலபேர்கள் வைக்கோல் போரைப் பதப்படுத்த பயன்படுத்தும் புனையல் மாடுகளைப் போல, சுற்றி சுற்றி வருவதும், சார்ந்துள்ள இயக்கத்தையும், சேர்ந்திருக்கும் குருமார்களுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதும், இப்படியாக வாழ்வியலைக் கடத்திவிட்டு சுடுகாட்டை நிரப்புவது வாடிக்கையான செயலாகிவிட்டது.


    வில்லில் இலக்கு எய்திய விற்குறி போல மனதை சரியான திசையில் பயணம் செய்யவிட்டு கடைசியாக இறந்து பட்டுப் போகிற மனதாக மாற்றம் செய்ய வேண்டும். ஒருமனம் இறந்தால் அடுத்த மனம் தோன்றும்போதே ஆற்றலுடன் பிறக்கும் இப்படி தோன்றிய மனம் 108 ம் இறந்துவிட்டால் இறையாற்றல் கலந்த அருள்மனமாக மாறிவிடும். இதையே 108 உருபோடுதல் என்கிறார்கள். தொடர்ந்து சரியான வழியில் சிந்தியுங்கள், சரியான நெறி புலப்படும்.  ஆழ்ந்து சிந்தியுங்கள் அருள்மனம் அடைவது நிச்சயம்.   
[/b][/b][/b]

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...