வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்
கே.குமார சிவாச்சாரியார்
கே.குமார சிவாச்சாரியார்
'அதிர்ஷ்டசாலி சார் நீங்க! இவ்வளவு அமைப்பான வீடு கிடைக்க யோகம் செஞ்சிருக்கணும்...’
'அவரு யோகக்காரரு! மகனும் மருமகளும் தங்கத் தாம்பாளத்துல வெச்சுத் தாங்காத குறையா அவரை நல்லா கவனிச்சுக்கறாங்க!’
- இப்படியான உரையாடல்களுக்கு உரியவராக இருக்கத்தான் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம், இல்லையா!
யோகம், ராசி, ஐஸ்வர்யம், சௌபாக்யம் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, நம் மனத்தில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி உருவா கிறது. சில தருணங்களில் இப்படியான மகிழ்ச்சி தடைப்படவும் வாய்ப்பு உண்டு! அப்போது சிலர், 'அது இஷ்டத்துக்கு வர்றதுதான்யா அதிர்ஷ்டம்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.
வட இந்தியர்களும், சீனர்களும், மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில பிரிவினரும் அதிர்ஷ்ட தேவதை என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகின்றனர். வீடுகளில் பஞ்ச பூதங்களையும் ஒவ்வோர் இடத்தில் நிறுத்தி, பென்சுயி அல்லது வாஸ்து முறையில் அதிர்ஷ்ட சக்தியை நிலை நிறுத்தமுடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை. இந்தியாவில் சில பிரிவினர், அக்னி பூஜை செய்வதால் அதிர்ஷ்டதேவியின் அருளைப் பெறலாம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். வட மாநிலங்களில் 'லக்கி மா’ என்ற பெயரில் அதிர்ஷ்ட தேவியை வழிபடுகிறார்கள்.
திருமந்திரம் தந்த திருமூலரும், 'நம் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திட, அன்னை நவாக்கரி தேவி எங்கும் நீக்கமற நிறைந்து, பர வெளியில் யோக சக்தியாக வலம் வருகிறாள்’ என்கிறார்.
தெய்வ அனுக்கிரகத்தால் கைகூடும் வரமாக இருந்தாலும், அதோடு அதிர்ஷ்டமும் நமக்குத் துணை புரிந்து, நம் வாழ்க்கை வளமாக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
* அதிகாலையில் எழுந்திருக்கப் பழக வேண்டும். இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுவார்கள். வீடு மங்களகரமாக உள்ள தென்று, பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்துவிடுவாளாம். மனிதர்களின் மனம் சஞ்சலமின்றி இருக்கும் நேரம் இது.
* தொழிலதிபர்கள், கலைவிற்பன்னர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், டாக்டர்கள்... இன்னும் வாழ்க்கையில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர் யாரை வேண்டுமானாலும் பாருங்கள்... அதிகாலையில் எழுந்து கடமையாற்றத் தொடங்குபவர்களாகவே இருப்பார்கள். இல்லங்களில் பிரம்ம முகூர்த்த காலத்தில் புதுமனை புகுதலைச் செய்துவிடுகிறார்களே, ஏன்? அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும் என்பதால்தான்.
* வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* அசுப வார்த்தைகளால் எவரையும் திட்டாமல் இருக்கப் பழக வேண்டும்.
* வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று, இயன்ற அளவு அவர்களை உபசரித்து, உணவிட்டு, வழியனுப்ப வேண்டும்.
* வீட்டில் வீண் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். அமைதியுடன் மிகச் சாந்தமாக வழிபாட்டைத் தொடர்ந்தால், அதிர்ஷ்ட தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
நமது ஞானநூல்கள் சில, அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை விவரிக்கின்றன.
அதிர்ஷ்ட தேவி பூஜை முறை...
பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும். நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முதலில், விநாயகர் துதி! அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும். அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.
கருத்து: தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, செந்தாமரை மீது அமர்ந்தவளாக, வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி. தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.
- அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும். அடுத்து, காமாட்சி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
26 திருநாமங்கள்: தாராயை, வித்யாயை, முநின்யை சரத்தாயை, ஜராயை, மேதாயை, ஸ்வதாயை, ஸ்வஸ்தியை, வர்மின்யை, பாலின்யை, ஜ்வாலின்யை, க்ருஷ்ணாயை, ஸ்மிருத்யை, காமாயை, உன்மத்யை, ப்ரஜாயை, சிந்தாயை, க்ரியாயை, க்ஷ£ந்த்யை, சாந்த்யை, தாந்த்யை, தயாயை, ஸ்வஸ்திதாயை, தூத்யை, கத்யாயை, ஓம் அதிர்ஷ்ட கலாயை நம:
ஒவ்வொரு திருநாமத்தின் முன்பு ஓம்ஸ்ரீம் என்றும், திருநாமத்தின் முடிவில் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும் (உதாரணத்துக்கு... 'ஓம் ஸ்ரீம் தாராயை நம:’).
நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து, 'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே கமல ஹஸ்தாய தீமஹி தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’ என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி, ஆரத்தி செய்ய வேண்டும். அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து, 'ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’ என்று 108 முறை ஜெபம் செய்வது விசேஷம்!
சரி! அதிர்ஷ்ட தேவியை வழிபடுவதால் மட்டுமே ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிட்டிவிடுமா? அவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து விடுமா?
உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், இன்முகப் பேச்சும் இருந்தால்... அதுவே, அதிர்ஷ்டதேவி நம் வீட்டுக்கு வரும் தெய்வீகப் படிகளாகும். லண்டன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சூதாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தி, அமெரிக்கக் கோடீஸ்வரர் ஒருவரை, ''அதிர்ஷ்டம் அழைக்கிறது, வாருங்கள்!'' என்று அழைத்தாளாம். ''என் உழைப்பாலும், சரியான நேரத்தில் என் கடமையைச் செய்வதாலும், அதிர்ஷ்டம் எனது மேசைக்கே வந்துவிட்டது. எனவே, உன் அதிர்ஷ்டத்தை நீயே வைத்துக்கொள்!'' என்றாராம் அவர்.
ஆம்! அதிர்ஷ்ட தேவையை வணங்குகிறபோதும், நம் தலையாய பணிகளையும் காலத்தில் செய்துவிட வேண்டும்.
வழிபடுவோம்...
யாருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம்?
'நந்தி வாக்கியம்’ என்ற ஞானநூலின் செய்யுள் இதற்கு விளக்கம் தருகிறது. சுக்கிரன் விருச்சிகத்தில் நின்று சுபர்களின் பார்வை பெற்றால், அரச போகமும் அதிர்ஷ்ட வாழ்வும் உறுதி என்கிறது.
படை சத்துரு ஜெயிப்பான் சுக்கிரன் பற்றியே நிற்பாராகில்
குடை யோகங் களத்திரத்தால் கூடிய செல்வ முண்டாம்
துடை ரோகமுடையன் நந்தை சொத்தெல்லாம்
விரயந் செய்வான் திடமிலான் மனைகளினஞ் செய்குவன் சிறப்பில்லானே...!
குடை யோகங் களத்திரத்தால் கூடிய செல்வ முண்டாம்
துடை ரோகமுடையன் நந்தை சொத்தெல்லாம்
விரயந் செய்வான் திடமிலான் மனைகளினஞ் செய்குவன் சிறப்பில்லானே...!
* அதிர்ஷ்டத்தைத் தரும் ஸ்தானங்கள் என 1, 5, 9-ஐக் கூறுவர். ஒரு மனிதனின் சொத்தையும், அதிர்ஷ்ட வாழ்வு நிலையையும் கூறும் பாவங்களாக இவை உள்ளன.
* உபஜெய ஸ்தானங்களாகிய 3, 6, 11-க்கு உடையவர்கள் பாவர்களாக இருந்தால், உழைப்பின் மூலம் யோகம் கிடைக்கும்.உபஜெய ஸ்தானாதிபதிகள், தங்களின் இடத்திலேயே இருந்தால் வசுமதி யோகத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
* சூரியன், சந்திரனுக்கு கேந்திரங்களில் சுப கிரகங்கள் வாய்த்தால், அரசாளும் அளவுக்கு அதிர்ஷ்டம் உண்டாகக்கூடும்.
* சந்திரன், குரு, சுக்கிரன், புதன் ஆகியோரில் ஒருவர் திரிகோணத்தில் அமைந்து ஆட்சி அல்லது உச்சம் பெறுவதாலும், 10-ஆம் அதிபதி உச்சம் பெறுவதாலும் அதிர்ஷ்ட யோகம் உருவாகும்.
* லக்னாதிபதி இருந்த வீட்டுக்கு உடையவர்கள் உச்சம் பெறுவதும், லக்னாதிபதி 9-ல் நல்ல அமைப்பில் இருப்பதும், 2, 9, 11-க்கு உரியவர்கள் ஒன்றுகூடுவதும் அதிர்ஷ்ட வாழ்க்கைக்கான அடிப்படையாக அமையும்.
* ராஜயோகம் தரும் கிரஹங்களாகிய குரு, சூரியன், செவ்வாய், சனி இவர்களில் யாரேனும் இருவர் பலம் பெற்றால், இவர்களின் தசை காலங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
* சுபர்கள் திரிகோணத்திலும், பாவர்கள் கேந்திரத்திலும் அமர்வது யோகமாகும். யோகம் தரும் ராஜ கிரஹங்கள் ஆட்சி, உச்சம், ஷட்பலம், அஷ்டவர்க்கம் இதில் எந்த வகையிலாவது பலம் பெற்றால், ஜாதகர் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்கள்.
* லக்னாதிபதி, பூர்வ புண்ணிய அதிபதி, பாக்ய ஸ்தானாதிபதி ஆகியோர் சுபமாக அமர்ந்தாலும், சூரியன் சந்திரன் கேந்திர கோணங்களில் நன்றாக அமர்ந்தாலும், அந்த ஜாதகருக்கு அதிர்ஷ்டதேவியின் அருள் வாய்க்கும்.
* கால சர்ப்ப தோஷம் என்று சொல்லக்கூடிய நிலையில், ராகு- கேதுவுக்குள், சந்திரனுக்கு 7-ல் லக்னாதிபதி, 10-ல் சுக்கிரன் அமர்ந்தால் பெரிய யோக பலன் உண்டு என்கிறது மணிகண்ட கேரளம் என்கிற நூல்.
Post a Comment