GuidePedia

0
ஆவுடையார் கோவில்

49 கோடி பொன்னை தனது கருவூலத்திலிருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரை யிலுள்ள மீமிசல்; மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர் களில் வயதில் இளையவரான திருவாதவூரருக்கு உத்தரவிடுகிறார் முதலாம் வரகுணபாண்டியன்.

கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந் துள்ள சிவத் திருத்தலம் திருவாதவூர். அங்கு அமாத்திய பிராமண குலத்தைச் சேர்ந்த சம்பு ஆசுருதர், சிவக்ஞானரதா என்னும் தம்பதி யருக்கு மகனாகப் பிறந்தவர் திருவாதவூரர்.

தனது 8-ஆவது வயதிலேயே குரு உபதேசம் பெற்று, திராவிட மொழிகள், வடமொழி, தீட்சா, சிவாகம மந்திரங்கள், நால்வகை வேதங்கள், அர்த்த சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றில் தேர்ச்சி பெற்று பெரும் அறிஞராக விளங்கினார் திருவாதவூரர்..

இவரது அறிவாற்றலையும் திறமைகளையும் கேள்வியுற்ற வரகுணபாண்டியன், இள வயதினர் என்று கருதாமல் இவரைத் தமது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டான். (சில குறிப்புகளில் இவரை முதலமைச்சராகவே அமர்த்திக் கொண்டான் என்றும் காணப் படுகிறது.)

திருவாதவூரரின் திறமைகளைக் கண்டு வியந்த வரகுணபாண்டியன், அவருக்கு "தென்னவன் பிரம்மராயன்' என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். 49 கோடி பொன்னுடன் புறப்பட்ட திருவாதவூரர் ஆலவாய் அப்பனையும் மீனாட்சி அம்மையையும் தரிசித்துவிட்டு, கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களை நோக்கித் தனது பரிவாரங்களுடன் பயணமானார்.

வாதவூரர் தினமும் கோவிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்யும் வழக்கத்தைக் கொண்டவர். திருப்பெருந்துறைக்கருகில் வந்தபோது, தனது நித்தியக் கடனான இறைவழிபாடு செய்ய சிவாலயத்தைத் தேடிச் சென்றார். அங்கிருந்த "மொய்யார் தடம் பொழில்' என்ற திருக்குளத்தில் மூழ்கி எழுந்ததும், தன்னை மறந்த ஒரு பரவசநிலையை அடைவது போன்ற உணர்வும், உள்ளம் ஒடுங்குவதுபோலவும், எதிலும் நாட்டம் கொள்ளாத பற்றற்ற நிலையும் தன்னுள் ஏற்படுவதை உணர்ந்தார் வாதவூரர். தனக்குள் ஏற்படும் இந்த மாற்றத்திற்குக் காரணம் அறிய முற்பட்ட வாதவூரருக்கு சிறிது தூரத்தில் சிவாகம ஒலியும் திருவைந்தெழுத்து முழக்கமும் கேட்க, அத்திசை நோக்கிச் செல்லலானர். குருந்த மரங்கள் நிறைந்த சோலையில் ஒரு மரத்தின் அடியில் சிவபெருமானையொத்த ஒரு பெரியவர் தென்திசை நோக்கி அமர்ந்து, 999 சிவனடி யார்கள் சூழ்ந்து அமர்ந்திருக்க, சிவ போதம் செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்டு மனம் கசிந்துருகி தன்னிலை மறந்து, "இவரே என்னை ஆட் கொள்ள வந்த இறைவன்' என்றுணர்ந்து, தான் வந்த காரியத்தை யும் மறந்து, அந்த ஞானாசிரியனிடம் அடைக்கலம் புகுந்தார்.

வாதவூரரின் வருகைக் காகவே காத்திருந்தது போன்று குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த ஞானாசிரி யனாகிய இறைவன், அவரைத் தனது மந்திரக் கண்களால் பார்த்து, செவிகளில் திருவைந் தெழுத்தை ஓதி, தனது வலது திருவடியினை வாதவூரரின் சென்னியின் மேல் வைத் தார். இறைவனே நயன தீட்சை, பஞ்சாட்சர தீட்சை, சென்னி தீட்சை என்ற மூன்று தீட்சை களையும் அளித்தது பக்தி வரலாற்றில் காணாதவொன்று. இதனை வாதவூரர்,

"வானோர்க்கும் அறியாததோர்
வளம் ஈந்தனன் எனக்கே'

என அகச்சான்றாகப் பாடி உருகிப் போகிறார். மூன்று தீட்சைகளையும் இறைவனே அளித்ததோடு, அவரது திருவடி ஸ்பரிசமும் பெற்றவர் மாணிக்க வாசகர் மட்டுமே. அன்று முதல் தன்னை மறந்தார்; வரகுணபாண்டியனின் கட்டளையையும் மறந்து சிவத்தொண்டில் ஈடுபடலானார்.

திருப்பெருந்துறையில் ஏற்கெனவே ஒரு சிவாலயம் இருந்தது எனவும்; அதனை மாணிக்க வாசகர் புதுப்பித்தார் எனவும் குறிப்புகள் உண்டு.

ஆனால் தத்துவார்த்தமாக உருவாக்கப்பட்ட தற்போதைய ஆவுடையார் கோவில், மாணிக்கவாசக ரால் தோற்றுவிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும். தான் குதிரைகள் வாங்க கொண்டு வந்த 49 கோடி பொன்னை ஆவுடையார் கோவில் கட்டுவதிலும் சிவனடியார் களுக்கும் செலவிட்டார். சுமார் 1150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் தத்துவங்களோடு கூடிய கலை நயம் பொருந்திய சிற்பங்கள் காண்போரைப் பரவசப்படுத்துபவையாகும்.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் காண்பது குரங்கு மற்றும் உடும்பின் சிற்பங்களாகும். மனக்குரங்கை அமைதிப் படுத்தி, உடும்புப் பிடியாக இறைவனது பாதங்களைப் பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகின்றன இந்தச் சிற்பங்கள். இதனைக் கடந்து சென்றால் மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோல் கொடிமரம், பலிபீடம், ரிஷபம் என்று எதுவும் கிடையாது. நேராகக் கருவறை தெரிகிறது. கருவறையில் லிங்கம் இல்லாமல் ஆவுடையார் மட்டுமே உண்டு. இறைவன் உருவமில்லாதவன் என்பதை இது விளக்குகிறது. மேலும் இறைவனைத் தரிசிக்க வருவோர்க்கு இடையில் யாரும் தேவை யில்லை என்ற தத்துவத்தையும் திருப்பெருந்து றையிலுள்ள ஆவுடையார் கோவிலில் மட்டுமே காண முடியும். நம்பியார் என்ற வகுப்பினர் தீபாராதனை செய்து ஆவுடையார் முன் வைத்து விடுவார்கள்.

ஆன்மாவின் நாயகனான இறைவனுக்கு ஆவுடையார் முன் புழுங்கலரிசி அன்னத்தை சுடச்சுட நைவேத்தியம் செய்து, ஒரு பெரிய பலகையில் ஆவி பறக்க கொட்டுகிறார்கள். அவித்த நெல் முளைக்காது என்பது போன்று, ஆவுடையார் கோவிலில் ஆத்மநாதனை வணங்குபவருக்கு மறுபிறவி இல்லை என்ற தத்து வத்தை இது காட்டுகிறது. அரூபமா கக் காட்சி தரும் அருள்மிகு யோகாம் பிகைக்குத் தனிச் சந்நிதியுண்டு. பலகணி வழியாகத் தரிசிக்க வேண்டும். இங்கு மாணிக்கவாச கருக்கு தனிச்சந்நிதியும் உண்டு. தென் திசை ஞானத்தில் சிறந்தது என்பர். அதை உணர்த்த ஆவுடை யார் கோவில் தென் திசை நோக்கியே உள்ளது. இதுபோன்றே சிதம்பரமும் திருவரங்கமும் தென்திசை நோக்கிய ஆலயங் களாகும்.

இச்சிறப்புகளுக்கெல்லாம் மேலாக, உலகில் எங்கும் காண முடியாத அதிசயம் இக்கோவி லில் உண்டு. கருவறையில் அரூபமாக உள்ள மூலவர் அருள்மிகு ஆத்மநாதருக்குப் பதிலாக உற்சவமூர்த்தியாக சிவானந்த மாணிக்க வாசகர்தான் ரிஷப வாகனத்திலும் தேரிலும் வீதி உலா வருகிறார்.

மனிதன் ஒருவன் சிவனாரின் திருவருளால் பணிகொள்ளப்பட்டு உற்சவமூர்த்தியாக விளங்கி வரும் சிறப்பு திருப்பெருந்துறை ஆலயத்திற்கு மட்டுமே உண்டு. ஆண்டுக்கு இரண்டு முறை- அதாவது மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் இவ்வாறு பவனி வருகிறார் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகரை தெய்வமாக வழிபடுவது இங்கு மட்டுமே.

தன் ஆன்மா இறைவன் சம்பந்தத்தால் மேன்மையுற்றதுபோல், அனைத்துயிர்களும் ஆன்ம மேன்மையடைய வேண்டுமென்ற தத்துவார்த்தங்களோடு இத்திருக்கோவிலை நமக்கு அளித்துள்ள மாணிக்கவாசகர்- குருந்த மரத்தடியில் ஞானாசிரியன் பணித்தவாறு,

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க'

என்று சிவபுராணத்தில் தொடங்கி 51 தலைப்புகளில் நான்கு அகவல்கள் உட்பட 658 பாடல்கள் கொண்ட திருவாசகம் என்ற பக்திப்பனுவலைச் செய்தார். திருவாசகத்தை "தமிழ் மாமறை' என்று அறிஞர்கள் போற்று கின்றனர். டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் திருவாசகத்தில் உருகிப் போய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார். 400 பாடல்களைக் கொண்ட திருக்கோவையார் என்ற நூலை தில்லை அம்பலத்தான்மீது பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

ஆவுடையார் கோவில் சிற்பங்கள் அற்புதமானவை. இங்குள்ள கல் கொடுங்கைகள் (நற்ர்ய்ங் நன்ய் ள்ட்ஹக்ங்), கல் சங்கிலிகள் வேறெங்கும் காணுதல் அரிது! இச்சிற்ப வேலைப்பாடுகள் நுண்ணியவையாகும்.

அந்நாளில் சிற்பிகள் ஒப்பந்தம் செய்யும் போது திருப்பெருந்துறை, திருவீழிமிழலை, வௌவால் நந்திமண்டபம், கடாரங் கொண்டான் மதில், இவை நீங்கலாக மற்ற சிற்பப் பணிகளைக் செய்வோம் என்று எழுதுவார்களாம். அவ்வளவு நேர்த்தியான- மிகவும் அரிதான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது இக்கோவில். 19-ஆம் நூற்றாண் டில் இக்கோவிலுக்கு வந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி இங்குள்ள கல் கொடுங்கைகள் கல்லில் செதுக்கப்பட்டவை என்பதை நம்ப மறுத்து, தனது கைத்துப்பாக்கியினால் இரண்டு முறை சுட்டுப் பரிசோதித்து, அது கல்தான் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டுப் போனாராம். இரண்டு குண்டுகள் பாய்ந்த கல் கொடுங்கைகள் இன்றும் மூன்றாம் பிராகாரத் தில் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

வரகுண பாண்டியன் கொடுத்த 49 கோடி பொன்னை ஆவுடையார் கோவில் திருப் பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவிட்டு, குதிரைத் திரள் வாங்கி வரத் தவறிய மாணிக்க வாசகரை சிறையிலிட்டுத் தண்டித்தான் மன்னன்.

இறைவன் மாணிக்கவாசகர்பால் அன்பு கொண்டு நான்கு திருவிளையாடல்களை-

அதாவது நரியைப் பரியாக்குதல் (58), பரியை நரியாக்குதல் (59), வைகையில் வெள்ளப் பெருக்கிடச் செய்தல் (61), பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்டது (61) ஆகியவற் றைப் புரிந்து மாணிக்கவாசகரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டி அவரை தண்டனைகளிலிருந்து மீட்டார்.

8-ஆம் நூற்றாண்டில் (கி.பி.775-807) 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், சிதம்பரத்தில் இறைவனுடன் சிதாகாச வெளியில் கலந்தார். சுந்தரர், திருத்தொண்டர் தொகையில் 63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகரைப் பாடவில்லை. 15-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமான சுவாமிகள் திருவாசக மேன்மையைப் போற்றி, அதுநாள் வரை மூவராக (அப்பர், சம்பந்தர், சுந்தரர்) இருந்த சமயக் குரவர் வரிசையில் மாணிக்க வாசகரையும் சேர்த்து நால்வராக்கி மகிழ்ந்தார். பன்னிரு திருமுறைகளில் 8-ஆவது திருமுறையாக இருப்பது திருவாசகம்.

இன்று எல்லா சைவத் திருத்தலங்களிலும் சிவனடியார் கூட்டங்களிலும் இடையறாது ஒலிக்கு மந்திர வரிகள்,

"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'

என்னும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகளே.

ஆவுடையார் கோவில் என்னும் திருப் பெருந்துறை புதுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கில் 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்திற்கு பஸ் வசதிகள் பல ஊர்களிலிருந்தும் நிறையவே உள்ளன.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...