மற்ற கோயில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக?
தல வரலாறு: அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடை
மருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கு நடுவில் இருப்பதால் இத்தலம் மத்தியார்ஜுனம் என பெயர் பெற்றது.
அம்பிகை, அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் சிவன் மகாலிங்க சுவாமி என்ற பெயரில் அருளுகிறார். ஏழு பிரகாரம் கொண்ட இத்தலத்தில் அம்பிகை பெருநலமாமுலையம்மன் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறாள்.
லிங்கவடிவ நட்சத்திரங்கள்: சந்திரன், குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டதால் தோஷத்திற்கு ஆளானான். தோஷம் நீங்க, சிவனை வேண்டி தவமிருந்தான். இரங்கிய சிவன் விமோசனம் அளித்தார். சந்திரன் வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்திரங்களும் வந்தன. சந்திரனுக்கு அருளிய சிவன், நட்சத்திரங்களுக்கும் அருள்புரிந்தார். இங்கு தோன்றிய 27லிங்கங்களில் அவை ஐக்கியமாகின. இந்த லிங்கங்கள் ஒரே சந்நிதியில் உள்ளன. அவரவர் பிறந்த நட்சத்திர லிங்கத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.
பாவம் நீங்க வழிபாடு: வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்ம ஹத்தியை அகற்றினார். இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதி இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.
அன்பிற்பிரியாள்: சம்பந்தர் இங்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார். அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை "அன்பிற்பிரியாள்' என அழைக்கின்றனர். தட்சிணாமூர்த்தி இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார். இவருக்கு "சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சந்நிதியின் முன் மண்டபத்தில் சுதை சிற்பமாக விளங்குகிறார். மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, மணம் செய்து கொண்டார். வைகாசி உத்திரத்தன்று இத்திருமணம் நடக்கும். கிழக்கு கோபுரத்தின் கீழ் பட்டினத்தாருக்கும், மேற்கு கோபுரத்தின் கீழ் அவரது சீடர்பத்திரகிரியாருக்கும் சந்நிதி உள்ளது.
போனவழியில் வரக் கூடாது: இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி. சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஏதேனும் பீடை மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோயிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை வழியில் 10 கி.மீ.
திறக்கும் நேரம்: காலை 5.30- பகல்12.00, மாலை 4.30- இரவு 9.00.
போன்: 0435- 246 0660.
Post a Comment