GuidePedia
Latest News

0
பல்லாண்டு வாழ்க!


பெருமாளிடம் போய், ""பெருமாளே! எங்கள் குழந்தைகளுக்கு ஆயுள் அபிவிருத்தியைக் கொடு,'' என்று வேண்டலாம். ஆனால், ""பெருமாளே! நீர் பல்லாண்டு காலம் வாழ்க!'' என்று யாராவது வாழ்த்தியதுண்டா! உண்டே! அவர் தான் பெரியாழ்வார். பெருமாள் கருடன் மீது தாயார்களோடு அவருக்கு காட்சி தந்த போது, அவருக்கு திருஷ்டி பட்டு விடக்கூடாதே என்பதற்காக இப்படி பாடினார் ஆழ்வார். பெருமைக்குரிய இந்த பெருமாளை "கூடல் அழகர்' என்பர். மதுரையிலுள்ள இவரது கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

தல வரலாறு: பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, மதுரை வந்து, பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்கு காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி, விஸ்வகர்மாவை வரவழைத்து, தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைத்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே "கூடலழகர்' எனப்பட்டார். இந்த தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. நான்கு யுகம் கண்ட இவர், "யுகம் கண்ட பெருமாள்' எனப்படுகிறார்.

மீன் சின்னம்: பாண்டியர்களின் சின்னம் மீன். இது உருவானதற்கு இத்தல பெருமாளே காரணம். ஒரு காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகையும், கிருதுமால் நதியும் ஓடின. பாண்டிய மன்னன் சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான்.

தல சிறப்பு : 108 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற "திருப்பல்லாண்டு' பாடல் இயற்றப்பட்ட தலம் இதுவே. மார்கழி மாதத்தில் இக்கோயிலை தரிசிப்பது சிறப்பு.

அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகும். 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரமும், இதிலுள்ள கலசம் 10 அடி உயரமும் உடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம்நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

மூன்று கோலங்கள் : அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. 

வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது,
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
நின் சேவடி செவ்வி திருக்காப்பு! என்ற பெரியாழ்வாரின் பாசுரத்தைப் பாடுவதன் மூலம், நாமும் பெருமாளின் அருளால் பல்லாண்டு சுகமாக பூமியில் வாழலாம். 
திறக்கும் நேரம் : காலை6.00-12.00, மாலை 4.00-இரவு 9.00. 
போன் : 98940 63660.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...