GuidePedia

0
நாரதர் பகுதி-10
உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் கண்டிப்பாக இறந்தாக வேண்டும். ஆனால், தவம் செய்வோர் அழியாவரம் பெறுவர். ஆனால், எந்தெந்த சக்திகளால் அழிவு வரக்கூடாது என்று கேட்டுப் பெற வேண்டும். இரண்யன் இந்த உலகில் தெய்வங்கள், மனிதர், அசுரர், மிருகங்கள், பறவைகள், சாதராண பூச்சி வரை தன்னை அழித்துவிடக் கூடாது என வரம் பெற்றுக் கொண்டான். அவன் பிரம்மனிடம் எதையும் விட்டு வைக்கவில்லை. பிறகென்ன! அவன் கர்வம் தலைக்கேற இல்லம் வந்து சேர்ந்தான். இந்திரனால் தன் மனைவி பட்ட அல்லல்களை அறிந்தான். ஒட்டுமொத்த தேவலோகத்தையும் தன் கைக்குள் கொண்டு வந்து விட்டான். போதாக்குறைக்கு நாடாள ஆண் வாரிசு வந்து விட்டது என்ற மமதை வேறு. அவன் செய்யாத அராஜகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் அவனது அட்டகாசம் எல்லை மீறி, நானே தெய்வம். இனி யாரும் அந்த நாராயணனை வணங்கக்கூடாது, என்று சொல்லிவிட்டான். பிரகலாதன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நாராயணனின் பெருமையை கேட்டவனாயிற்றே! அவன் தந்தைக்கு எதிராக திரும்ப, தந்தையாலேயே கொடுமைப்படுத்தப்பட்டான். பின்னர், நாராயணனே அவனை அழித்தார். இவன் மனிதனாலும், மிருகத்தாலும் அழிவு வரக்கூடாது என வரம் பெற்றிருந்தான். நாராயணனோ சிங்கத்தலையும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான நரசிம்ம வடிவமாக வந்து அவனை அழித்தார். நரன் என்றால் மனிதன், சிம்மம் என்றால் சிங்கம். இப்படியாக நாரதரின் புத்திசாலித்தனத்தால், அந்த அரக்கனின் வாழ்வு முடிந்தது. அதே நேரம் கெட்டவனுக்கே பிறந்தாலும், ஒருவன் தன் குணநலன்களை மாற்றிக் கொள்ள முடியும் என்ற தத்துவமும் இதன்மூலம் விளக்கப்பட்டது. நாரதர் இதன் மூலம் ஆற்றிய சேவையை தேவகுலமே பாராட்டியது. இந்த நற்செயலைச் செய்த மகிழ்வுடன், நாரதர் சிவலோகம் சென்றார். சர்வலோகாதிபரான சிவபெருமான், உமாதேவியாருடன் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

அன்னையே வணக்கம், ஐயனே வணக்கம், என்றார் நாரதர். என்ன நாரதா! அன்னைக்கு முதல் வணக்கமும், தந்தைக்கு இரண்டாம் வணக்கமும் சொல்கிறாயே! என்றார் சிவன், சிறு புன்னகையுடன். பார்வதி நாரதனை அருகில் அழைத்தாள். அவரது தலையை வருடியபடியே, குழந்தாய்! நீ வருந்தாதே. இவர் எப்போதும் இப்படித்தான். பிறரை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார், என்று ஆறுதலாய்ச் சொன்னாள். தாயே! தாங்கள் சொல்வதும் உண்மை தான். மதுரையிலே தாங்கள் மீனாட்சியாய் அவதாரம் எடுத்திருந்த போது, இவர் சொக்கநாதராய் வந்து தங்களைக் கரம்பிடித்தார். வந்தவர் சும்மா இருக்கமாட்டாரா? செண்பகப்பாண்டியனின் அவைப்புலவர் நக்கீரனார், இவரது பாட்டைக் குறை சொன்னதற்காக, நெற்றிக்கண்ணால் சுட்டு வீழ்த்தியதை தாங்களும் அறிவீர்கள். பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியிருந்த நக்கீரன் மீண்டும் உயிர்பெற்றாலும், இப்போதும் வெப்பு நோயால் அவதிப்படுகிறார். இவர் கண் என்ன சாதாரணமான கண்ணா!  என்று நாரதர் சொல்லவும், பார்வதி பரிதாபப்பட்டாள். ஐயோ! நக்கீரன் என் குழந்தையாயிற்றே! அவன் துன்பப்படுவதை நான் பொறுக்க மாட்டேன். நாரதா! நீ உடனே பூலோகம் செல். என் இளைய குமாரன் முருகன் திருப்பரங்குன்றத்தில் இருக்கிறான். அவன், நக்கீரன் மீது கருணை கொண்டவன். நக்கீரனின் பாடல்களை ரசிப்பவன். தான் குடிகொண்டிருக்கும் தலங்களை வரிசைப்படுத்தி, அவற்றின் பெருமையைப் பாடுவதற்கு நக்கீரன் தான் சரியானவன் என  எண்ணிக் கொண்டிருக்கிறான். நீ முருகனை நாடி, நக்கீரனின் வெப்பு நோயைப் போக்குவதற்குரிய ஏற்பாட்டைச் செய், என்றாள். நக்கீரர் சிவபெருமானைக் கடைக்கண்ணால் பார்த்தார். சிவனும் கண்ணாலேயே இதற்கு இசைவு தெரிவித்தார். முருகப்பெருமானின் அருள் உள்ளம் இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக, சிவபெருமான் தன் மனதில் எழுப்பிய எண்ணங்களே, இனி நடக்கப்போகும் நிகழ்வுகளுக்கு காரணம் என்பதை, தன் ஞானதிருஷ்டியால் நாரதரும் அறிந்திருந்தார்.

இருப்பினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சிவனிடம் சண்டை போடுவது போலவும், பார்வதியிடம் நல்ல பெயர் வாங்குவது போலவும் நடித்துக்காட்டி விட்டு பூலோகம் வந்தார். திருப்பரங்குன்றம் களை கட்டியிருந்தது. பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, சேவல்காவடி, மச்சக்காவடி, புஷ்பக்காவடி, சர்ப்பக்காவடிகளுடன் மலையைத் திருவலம் வந்து கொண்டிருந்தனர். நாரதர் திருப்பரங்குன்றத்தின் அழகை விண்ணில் இருந்தபடியே ரசித்தார். சிவபெருமான், கைலாசநாதன் என்ற பெயரில் குடியிருக்கும் திருத்தலம் அது. (திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் ஒன்றாயினும் கூட, இங்கே மூலவர் சிவன் தான். முருகன் சிவனின் அருகில் இருக்கிறார்). அந்த தலத்தைக் கண்ணால் கண்டாலே செய்த பாவங்கள் தீர்ந்து விடும். நாரதர் பக்தி பரவசத்துடன் அந்த தலத்தை தரிசித்தார். முருகப்பெருமான் தெய்வானை பிராட்டியுடன் மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், தான் வந்த சேதியை அறிவிக்கும்படி காவலனிடம் சொல்லி அனுப்பினார். முருகனின் படைத்தளபதி வீரபாகு, அவசரமாக வெளியே வந்து நாரதரை வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். மயில் வாகனனே வணக்கம். அம்மா! தெய்வானை நீ நலமாக இருக்கிறாயா? புதிதாக மணம் முடித்த உனக்கு உன் தந்தை தேவேந்திரன், சீதனமெல்லாம் சரியாகத் தந்தானா? என்றார் நாரதர். நாரதரே! தாங்கள் முதலில் கேட்ட கேள்வி நியாயமானது. அடுத்த கேள்வியில் ஏதோ பொருள் புதைந்து கிடக்கிறதே! என் தந்தை தன் உயிருக்கும் மேலான ஐராவதம் யானையையே எனக்கு சீதனமாக தந்துவிட்டதை தாங்கள் அறிவீர்கள். இதை விட வேறென்ன அவர் தர வேண்டும்? என்றாள் கண்கள் மிரள மிரள. நாரதரே! தங்களுக்கு தேவலோகத்தில் ஆள் கிடைக்காமல், இன்று இந்த புதுப்பெண்ணிடம் உம் விளையாட்டை ஆரம்பிக்க வந்துள்ளீரோ? என்றார் முருகப்பெருமான் கலகலவென சிரித்தபடியே!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...