GuidePedia

0
நாரதர் பகுதி-11
முருகப்பெருமானே! மன்னிக்க வேண்டும். என் கிரகம் அப்படி! நான் எங்கு போனாலும், கலகத்தை மூட்டுபவன் என்றே என்னை எண்ணுகிறார்கள். நான் தற்செயலாகத்தான் சீதனம் பற்றி கேட்டேன். தாங்கள் உலகாளும் சிவமைந்தர். தங்கள் வீட்டுக்கு வந்துள்ள மாதரசியை யாரேனும் குற்றம் குறை சொல்லி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சீதனம் பற்றி கேட்டேன். நான் வந்த விஷயம் வேறு, என்றார். மிரள விழித்த தெய்வானையை கடைக்கண்ணால் பார்த்த முருகப்பெருமான், தெய்வானை, கலங்காதே. இந்த நாரதன், என் விஷயத்தில் இளமையிலேயே விளையாடி முடித்து விட்டார். சொல்லப்போனால், அவரால் தான் இது போன்ற குளிர்ந்த மலைகளில், உயர்ந்த இடத்தில் நான் இருக்கிறேன். அந்த வரலாறு உனக்குத் தெரியுமா? என்றார். தெய்வானை உதடுகளை சுளித்து, தெரியாதென அபிநயம் செய்தாள். முருகன் நாரதரிடம், நாரதரே! நான் ஞானப்பழமான கதையைத் தெய்வானையிடம் சொல்லும், என்றார். நாரதர் தெய்வானையிடம், அம்மையே! ஒரு காலத்தில் ஆசையை வேரறுக்கும் பழம் ஒன்று எனக்கு கிடைத்தது. அதை ஞானப்பழம் என்பர். அதை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து பின்னர் பிரசாதமாக உண்ணுவதற்காகக் கொண்டு சென்றேன். சிவபெருமானுக்கு அதை அர்ப்பணித்தேன். அப்போது குழந்தையாக இருந்த உன் கணவனும், உனது அத்தான் விநாயகனும் ஓடோடி வந்து தந்தை முன்பிருந்த பழத்தை எடுத்தனர். இருவரும் பழத்தை பிடுங்க சண்டைபோட்டனர்.

உன் மாமியார் உமாதேவியார் அவர்களைத் தடுத்து, ஆளுக்கு பாதியாக பிரித்து தருகிறேன், என எடுத்துக்கொண்டார். சிவபெருமானோ, உமாதேவியாரை தடுத்து விட்டார். உமா! இது தோற்றத்தில் தான் மாங்கனி போல் இருக்கிறது. இதை ஒருவர் தான் சாப்பிட முடியும். இதை வெட்டுவது, பங்கு போடுவது எல்லாம் கூடாது, என்றார். பழத்தை மூத்தவருக்கு கொடுப்பதா! அல்லது இளையவனுக்கு கொடுப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டது. எல்லாரும் ஆவலுடன் நோக்கிக் கொண்டு இருந்தோம். இந்த நேரத்தில் உன் மாமனார் ஒரு போட்டியை அறிவித்து விட்டார். உன் கணவனும், விநாயகனும் போட்டியிட வேண்டும். யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறீர்களோ, அவருக்கே பழம், என்றார். உன் கணவன் தேவமயிலில் ஏறி வேகமாகச் சென்று விட்டான். உன் அத்தான் விநாயகனுக்கோ பெருச்சாளி வாகனம். அதில் பயணம் செய்தால் தாமதமாகுமே! ஆனால், புத்திசாலிகள் எந்தச் சூழலிலும் வெற்றி பெறுகிறார்கள். தாயே! தந்தையே! நீங்கள் தான் என் உலகம் என்று பெற்றவர்களைச் சுற்றி வந்து பழத்தைப்பெற்றான்.இதன்மூலம் உன் கணவன் மாபெரும் அந்தஸ்து பெற்றான். அவனையே ஞானப்பழம் என்று விநாயகன் உலகத்துக்கு அறிவித்தான். ஏனெனில், மூத்தவன் பொருளைப் பெற்றுக் கொண்டான். இளையவனோ, மூத்தவனுக்காக பொருளை இழந்தான். பிறருக்காக தனக்கு உரிமைப்பட்ட பொருளை தியாகம் செய்பவனே ஞானி. இவ்வகையில், ஞானப்பழமான உன் கணவனை உயர்ந்த இடத்தில் வைத்து தேவர்கள் பார்த்தனர். அதன் விளைவாகவே, அவன் உயர்ந்த மலைகளிலே காட்சியளிக்கிறான். குன்றுகள் எல்லாம் இந்த குகனின் இருப்பிடமாயிற்று. இவனது பெருமைகளை வரிசைப்படுத்தி பாட நக்கீரன் ஒருவரால் தான் முடியும். அவர் பொற்றாமரைக் குளத்தில் சிவபெருமானின் கருணை ஒளி தாங்காமல் மூழ்கிக் கிடக்கிறார். அவரை திருப்பரங்குன்றத்திற்கு வரவழைத்து, முருகனின் புகழை வரிசைப்படுத்தும் ஆற்றுப்படை என்னும் நூலை இயற்ற செய்ய உள்ளேன். அதற்காகவே இங்கு வந்தேன், என்றார்.

தெய்வானை மகிழ்ந்தாள். இதன் பிறகு நக்கீரர் செண்பகப்பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க பொற்றாமரை குளத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் திருப்பரங்குன்றம் வந்தார். தன் வெப்பம் நீங்க சரவணப்பொய்கை என்ற குளத்தில் நீராடினார். உடலும் மனமும் குளிர்ந்திருந்த வேளையில், அந்த குளத்தின் கரையில் இருந்த ஒரு மரத்தில் இருந்து இலைகள் உதிர்ந்து தண்ணீரில் விழுந்ததைக் கண்டார். அவற்றில் தண்ணீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்த இலைகள் தண்ணீருக்குள் இருந்த பகுதி மீனாகவும், தரையில் இருந்த பகுதி பறவையாகவும் மாறி அங்குமிங்குமாக இழுத்து துடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த அதிசய உயிரினம் ஆச்சரியப்படுத்தினாலும், பரிதாப உணர்வையும் ஏற்படுத்தியது. அவர் அந்த உயிரினத்தை எடுத்து, மீனையும், பறவையையும் தனித்தனியாகப் பிரித்து உயிர் பிழைக்க வைக்கலாம் என நினைத்து கிள்ளியெடுத்தார். ஆனால், அவை பரிதாபமாக இறந்தன. இதையடுத்து நாரதரின் அறிவுரைப்படி, முருகனின் படைவீரர்கள் சரவணப் பொய்கையின் காவலர்கள் போல் வேடம் தரித்து வந்து, ஓய்! நீர் பல உயிர்களைக் கொன்று விட்டீர். உம்மைக் கைது செய்கிறோம், என்றனர்.பொற்றாமைரையில் இருந்து தப்பித்தோம். இதென்ன கொடுமை. இப்போது நன்மை செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டோமே! என்றவரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகையில் சிறைவைத்தனர்.முருகா என்னைக் காப்பாற்று! என்ற நக்கீரர் மன முருகி பாட ஆரம்பித்தார். அந்த பாடல்களை ரசித்த முருகன். அவருக்கு காட்சியளித்து விடுதலை செய்தார். அவர் பாடிய பாடல்களே திருமுருகாற்றுப்படை எனப்பட்டது. முருகன் நாரதரிடம், அன்பரே! ஆற்றுப்படை என்ற நூலை இயற்றியதன் மூலம் என் பெருமை என்றும் நிலைத்திருக்கும் வகையில் செய்தீர். சூரர் களைப் பற்றிய தகவலை அவ்வப்போது கொடுத்து, அவர்களை வெற்றி கொள்ள வகை செய்தீர். எனவே, இத்தலத்தில் என்னருகில் இருக்கும் பாக்கியத்தை தந்தேன், என்றார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...