திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அண்ணனாகவும், திருவஹிந்திரபுரம் பெருமாளின் தம்பியாகவும் கருதப்படும் ராஜகோபாலசுவாமி கடலூர் புதுப்பாளையத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வைகுண்ட ஏகாதசியன்று தரிசித்தால், பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
தல வரலாறு: ஆயர்பாடியில் நடக்க இருந்த இந்திர பூஜையை கிருஷ்ணர் தடுத்தார். கோபம் கொண்ட இந்திரன் அடைமழை பெய்யச் செய்தான். ஏழுநாள் தொடர்ந்து பெய்தமழையால் ஆயர்கள் செய்வதறியாமல் தவித்தனர். உடனே கிருஷ்ணர், கோவர்த்தனகிரி என்ற மலையைத் தூக்கி, அதை குடையாகத் தாங்கி, பசுக்களையும், ஆயர்களையும் அதன் கீழ் வரச்செய்து, மழையிலிருந்து காத்தருளினார். அகந்தை அகன்ற இந்திரன்கிருஷ்ணரைச் சரணடைந்தான். அப்போது, கோகுலத்தின் தலைவனான கிருஷ்ணருக்கு "ராஜகோபாலன்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் கடலூர் புதுப்பாளையத்தில் ராஜகோபால சுவாமிக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
தரிசித்தால் தானபலன்: மூலவர் ராஜகோபாலசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் செங்கமலவல்லி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என தலபுராணம் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக்கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இங்கு பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி வழங்குகிறார்.
திருப்பதி அலங்காரம்: இத்தலத்திற்கு "தமிழக திருப்பதி' என்ற பெயர் உண்டு. திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் அண்ணனாகவும், திருவஹிந்திரபுரம் பெருமாளின் தம்பியாகவும் இவர் போற்றப்படுகிறார். இங்கு புரட்டாசி முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் காட்சி தரும் இவர், புரட்டாசி சனிவாரத்தில் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மூர்த்தி, தலம்,
தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு மிக்க இங்கு திருப்பதியில் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை செலுத்தும் வழக்கம் உண்டு. எண்ணிய செயல்கை கூட இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இங்கு அனுமன் ராமரின் தூதுவனாக தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரங்களில் ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், ஆண்டாள், ராமர் சந்நிதிகள் உள்ளன.
இருப்பிடம் : கடலூர் நகரின் மத்தியிலுள்ள புதுப்பாளையம்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், பங்குனி உத்திரம், ஆடிப்பூரம்
திறக்கும் நேரம்: காலை7 - 12, மாலை 5- இரவு 9.
போன்: 94432 03257, 04142- 295 115.
Post a Comment