GuidePedia

0
நாரதர் பகுதி-13
அதை ஏன் கேட்கிறீர்கள் தந்தையே! திருமாலைச் சேவிக்க வைகுண்டம் சென்றேன். என்னைக் கண்டதும், லட்சுமி தாயார் எழுந்து ஓடினார்கள். மகன் போன்ற என்னைக் கண்டுமா தாயார் ஓட வேண்டும். நான் தான் துறவியாயிற்றே என்றேன். அவரோ, நீ முற்றும் துறந்தவன் அல்ல! சாதாரண மனிதர்போல் மாயைக்கு ஆட்பட்டவன் என்றார். அதை நிரூபிக்க வைக்க பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வைத்தார். எனக்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் போரில் மாண்டனர். நான் பாசத்துக்கு கட்டுப்பட்டு அழுதேன். இதில் இருந்து நானும் லோக வாழ்க்கை என்ற மாயைக்கு அடிமையானவன் என்று அவர் நிரூபித்தும் விட்டார், என்றார்.பிரம்மனும் ஒப்புக்கொண்டார்.மகனே! நீ மட்டுமல்ல! எவருமே மாயையின் வலையில் இருந்து அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது. உன் தாய் சரஸ்வதியைப் படைத்த நானே. அவள் மீது ஆசைப்பட்டு தானே சிவனிடம் தண்டனை பெற்றேன். மாயையின் வலையில் இருந்து மீள முடியாது என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு கடுமையான மனப்பயிற்சி வேண்டும். நீ மீண்டும் பூலோகம் செல். ஞானமும், வைராக்கியமும் இருந்தால் தான் மாயை எனப்படும் உலக ஆசையில் இருந்து மீள முடியும். அதைப் பெற்று வா, என்றார். ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெறுவதற்குரிய வழிமுறையையும் பிரம்மனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பூலோகத்தில் விசாலை என்ற நகரத்திற்கு வந்தார் நாரதர். அங்கே நான்கு ரிஷிகுமாரர்கள் இருந்தனர். அவர்களும் ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெற்று, அதன் மூலம் உலக ஆசையை முழுமையாகத் துறக்க வழிதேடிக் கொண்டிருந்தனர். ஒருமுறை அந்த ரிஷிகுமாரர்கள் நாரதரைச் சந்தித்தனர். மகரிஷி நாரதருக்கு தெரியாத விஷயமா? எல்லா லோகங்களிலும் சஞ்சரிப்பவர் ஆயிற்றே அவர்! அவரிடம் நம் கோரிக்கையைச் சொல்வோம் என்றவர்களாய் ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெறும் ஆலோசனையைக் கேட்டனர். நாரதர் முகம் வாடிப் போனார்.

மகரிஷி! திடீரென நீங்கள் வாட்டம் கொள்ளக் காரணம் என்ன? என்றனர் குமாரர்கள். குழந்தைகளே! இப்போது கலி பிறந்து விட்டது. நீங்கள் தேடும் அதே ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெறவே நானும் பூலோகம் வந்தேன். ஆனால், அவை இனி நமக்கு கிடைக்கும் என்பது சாத்தியமல்ல. ஏனெனில், அதற்குரிய உரிய தேவதைகள் நோய்வாய்ப்பட்டு மெலிந்து கிடக்கின்றன. வாருங்கள், என்னோடு, நான் அந்த இடத்தைக் காட்டுகிறேன், என்றார். அங்கே ஒரு இளம்பெண் படுத்திருந்தாள். அவளால் எழவே முடியவில்லை. படுத்தபடியே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அவள் நாரதரையும், மற்ற ரிஷிகுமாரர்களையும் கண்டு எழ முயன்றாள். முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள். கைகூப்பி வணங்கவே சிரமப்பட்டாள். அவள் அருகிலங் இரண்டு முதியவர்கள் படுத்திருந்தனர்.நாரதர் அவள் அருகில் அமர்ந்தார். மகளே! நீ யார் என்பதை நான் அறிவேன். இருப்பினும் இந்த குமாரர்களுக்கு உன் கதையைச் சொல், என்றார். அப்பெண் ஈனஸ்வரத்தில் மிக மெதுவாக பேசினாள். குழந்தைகளே! நான் இதோ படுத்திருக்கும் இரண்டு முதியவர்களின் தாய், என்றாள். ரிஷிகுமாரர்கள் அதிர்ந்தனர். அம்மா! இதை எங்களால் நம்ப முடியவில்லை. நீயோ கன்னிப்பருவத்தினள் போன்று இளமையாய் இருக்கிறாய். உனக்கு இரண்டு முதிய குழந்தைகளா? இது எப்படியம்மா நிகழ்ந்தது? உன் வரலாறைக் கேட்கும் எங்கள் ஆவல் மேலிடுகிறது. சொல்லம்மா! என்றனர். மக்களே! இவன் என் மூத்த மகன். பெயர் ஞானம். அவன் என் இளைய மகன் வைராக்கியம். இவர்களே இந்த உலகிற்கு ஞானத்தையும், வைராக்கியத்தையும் தருபவர்கள். நடந்து முடிந்த மூன்று யுகங்களிலும் தவத்தில் அக்கறை கொண்டவர்களும், ஆசையைத் துறந்தவர்களும் இவர்களை சந்தித்து ஞான, வைராக்கிய வரங்களைப் பெற்றனர். இப்போதோ கலியுகம் பிறந்து விட்டது. இந்தக் கலியில் ஞானமாவது, வைராக்கியமாவது...இதைப் பற்றி பேசினால் கூட யாருக்கும் புரியவில்லை. அந்த கவலையில் இவர்கள் படுத்தார்கள். கவலைப்படுபவனுக்கு தோல் சுருங்கும். 

கிழட்டுப்பாவம் ஏற்படும். இவர்களும் இப்படி கிழத்தோற்றம் பெற்றார்கள். இவர்கள் ஒரேயடியாக அழிந்து விடுவார்களோ என்ற கவலையில், இவர்களைப் பெற்ற தாயான நானும் கவலையில் படுத்து விட்டேன், என்றாள்.நாரதர் அப்பெண்ணிடம், உன் பெயர் என்ன? என்றார்.விஷ்ணு பக்தி என்றாள் அவள்.மகளே! பெயரிலேயே விஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருக்கும் நீ இதுவரை இவர்களை எழுப்பும் வழி தெரியாமல் இருந்து விட்டாயே! எல்லாருக்கும் கஷ்டங்கள் சகஜம். கஷ்டப்படும் காலத்தில் கஷ்டப்பட்டே தீர வேண்டும். நான் பிரம்மபுத்திரன் என்பதை நீ அறிவாய். இவர்களை எழுப்பும் மருந்து என்னிடம் இருக்கிறது? என்றார்.அந்தப் பெண் சிரமப்பட்டு எழுந்தாள்.மகரிஷி! என் குழந்தைகள் பிழைத்து விடுவார்களா! அவர்கள் மீண்டும் இளமையை அடைவார்களா? அதற்கு உங்களிடம் மருந்திருக்கிறதா? சொல்லுங்கள், என பரபரத்தாள். நாரதர் தன் தந்தை பிரம்மன் தன்னிடம் சொல்லி அனுப்பியபடி, தன்னோடு வந்த ரிஷி குமாரர்களிடம், நாம் எல்லாரும் சேர்ந்து வேத மந்திரங்களைச் சொன்னால், இவர்கள் பிழைத்து விடுவார்கள். இவர்களிடம் நாம் ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெற்றுச் செல்லலாம், என்றார். ரிஷி குமாரர்கள் மகிழ்ந்தனர். மந்திரஒலி அந்த இடத்தை நிறைத்தது. வேதங்கள் ஓதி முடிக்கப்பட்டன. ஊஹூம்... ஞானமும், வைராக்கியமும் அசையவே இல்லை. ஆவலோடு தன் குழந்தைகள் மீது கண் வைத்திருந்த விஷ்ணுபக்தி கவலையில் மீண்டும் படுத்து விட்டாள். நாரதரோ பிரம்மரகசியம் எடுபடாதது கண்டு கலங்கினார். ரிஷிகுமாரர்களோ திகைத்தனர். ஞானம் மற்றும் வைராக்கியத்தின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...