GuidePedia

0
நாரதர் பகுதி-8



பிரம்மனுக்கு இன்னும் தர்மசங்கடமாகி விட்டது. இருப்பினும், நாரதன் மீது எந்த பழுதும் இல்லை என்பதால் மகிழ்ச்சி கொண்ட அவர், நாராயணா! தாங்களும், சிவனும் ஏதோ லீலை நடத்த எண்ணி விட்டீர்கள் என்பது புரிகிறது. சரி...நடப்பது நடக்கட்டும். தங்கள் இருவரின் விளையாடல்களை தடுக்க யாரால் முடியும்?என சொல்லிவிட்டு விடைபெற்றார். அவர் வைகுண்டத்தில் இருந்து வெளியேறும் சமயத்தில், சரஸ்வதி உள்ளே வந்து கொண்டிருந்தாள். பிரம்மா ஒளிந்து நின்று கொண்டார். சரஸ்வதி ஆவேசமாக வைகுண்டத்துக்குள் சென்று விட்டாள். அதன்பிறகு பிரம்மா, அங்கிருந்து அகன்று விட்டார். ஏ லட்சுமி, எங்கே இருக்கிறாய்? என்று ஏக வசனத்துடன் நுழைந்த சரஸ்வதியைப் பார்த்து, பரந்தாமனின் அருகில் இருந்த லட்சுமி இறங்கி ஓடோடி வந்தாள். சகோதரி! நலமாக இருக்கிறாயா? ஏன் இந்த பதட்டம் உனக்கு? இப்போது தான் உன் கணவர் வந்தார். நாராயணனுடன் தனித்துப் பேசினார். ஆண்கள் உரையாடும் போது, பெண்களுக்கென்ன வேலை என நான் ஒதுங்கி போய் விட்டேன். இப்போது நீ வந்திருக்கிறாய். ஒருவேளை, கணவன், மனைவிக்குள் ஏதேனும் உரசலோ? என்றாள் லட்சுமி நிஜமான அக்கறையுடன்.உம்! அப்படி வேறு நடக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாயா? என் மகன் நாரதனிடம், நீ என்ன சொன்னாய்? முதலில், அதற்கு பதில் சொல், என்றாள் சரஸ்வதி காட்டமாக. சரஸ்வதி! அவன் உனக்கு மட்டுமல்ல! நாராயணனின் பக்தர்கள் அனைவரும் எனது குழந்தைகள். அவ்வகையில், நாராயணனின் முதன்மை பக்தனான அவன், எனக்கு தலைமகன் ஆகிறான். அவனிடம் நான் ஏதும் சொல்லவில்லையே, என்றாள் லட்சுமி. லட்சுமி! செல்வத்துக்கு அதிபதி என்ற செருக்கில் பொய் பேசாதே. 

பொய் பேசுபவரிடம் செல்வம் நிலைப்பதில்லை. எனக்கு இசைக்க மட்டும் தான் தெரியுமென்றும், நான் வைத்திருக்கும் வீணையை உனக்கு கட்டுப்பட்ட செல்வத்தில் இருந்து வாங்கியதாகவும் பெருமை அடித்தாயாமே. அப்படி பார்த்தால், உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை கணக்குப் பார்க்க, என்னிடமுள்ள கல்வி வேண்டும் என்பதை மறந்து விடாதே. செல்வமிருந்தால் வீணையை வாங்க மட்டும் தான் செய்யலாம். ஆனால், அதை ஒரு அறையில் போட்டு பூட்டி வைக்கத்தான் முடியும். அதை இசைத்தால் தானே இனிய கான மழையில் நனையமுடியும், என்றாள் சரஸ்வதி.லட்சுமி கோபிக்கவில்லை.சரஸ்வதி! உன் ஆதங்கத்தை உணர்கிறேன். நான் இதை மிகச்சாதாரணமாக தான் சொன்னேன். குழந்தை நாரதன் மனம் புண்பட்டு விட்டான் போலும்! அதனால், உன்னிடம் ஏதோ சொல்ல, நீயும் கோபத்துடன் வந்து விட்டாய். லோகத்திற்கு கல்வியே முழு முதல் பொருள் என்பதை நான் அறியாதவளா என்ன? கல்வியுள்ளவனுக்கே உலகத்தில் மதிப்பு அதிகம். அவனே சிறந்த வேலைகளைப் பார்க்க தகுதியுள்ளவன் ஆகிறான். கல்வி பெருக பெருக, என்னிடமுள்ள செல்வம் அவனைப் போய் சேர்கிறது. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. நாரதன் நம்மிடையே கலகமூட்ட விரும்பியது நாராயணனின் செயல். ஆனால், உன் பெருமையை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தார். உன்னை அடுத்து தான் நான். உலகத்தில் கல்வியே சிறந்தது, என்று சொல்லி முடிக்கவும், ஓடி வந்த பார்வதி சரஸ்வதியை அணைத்துக் கொண்டாள். சரஸ்வதி! நீயே உலகத்தின் அதிபதி. நீயின்றி உலகமில்லை. உலகிலுள்ளோர் எதிர்காலத்தில் கல்விக்காகவே அதிக நிதியை செலுத்துவர். என்னிடமுள்ள ஆற்றலைப் பயன்படுத்தி, அதைப் பாதுகாக்க ஏற்பாடு செய்வர். ஒரு தனிமனிதனின் பாவ, புண்ணியங்களைப் பொறுத்து, அந்த நிதியை பாதுகாக்கும் ஆற்றலை ஒருவனுக்கு தருவேன். உன் பெருமையை வெளிப்படுத்த எங்கள் நாயகர்கள் செய்த திருவிளையாடலே இது. 

நவராத்திரியில் நம்மை உலகத்தோர் நினைத்தாலும், உனக்கே முக்கியத்துவம் தரப்படும். உனக்கென தனி பூஜை செய்யப்படும், என அருள்பாலித்தனர். இப்போது சிவ நாராயணர்கள் பிரம்மனுடன் அங்கு வந்தனர். தத்தம் தேவியரை அணைத்துக் கொண்டனர். நாரதன் இந்த பூமிக்கு நல்லது செய்ய பிறந்தவன். அவன் இந்த கலகத்தை உண்டாக்காவிட்டால், கல்வியின் பெருமை வெளியே தெரிந்திருக்காது. மேலும், பெற்ற தாயை உயர்ந்தவளாக காட்ட ஒவ்வொரு மகனும் பாடுபட வேண்டும். தன் சொந்தத்தாயைப் பாதுகாப்பவனுக்கு உலகத்தில் தனியிடம் உண்டு, என்றனர். நாரதர் அங்கே வந்தார்.தாய்மார்களே! முப்பெரும் தெய்வங்களின் வேண்டுகோளை ஏற்றே நான் இப்படி ஒரு சிறிய நாடகத்தை நடத்த வேண்டியதாயிற்று. நான் தவறேதும் செய்திருந்தால், என்னைப் பெற்ற தாய்மார்களான நீங்கள் மூவரும் என்னை மன்னிக்க வேண்டும், என அவர்களின் காலடியில் விழுந்தார்.தேவியர் அவரை எழுப்பி, உச்சிமோந்தனர். எங்கள் அன்பு மகனே! உன்னால் இந்த உலகம் பெருமை அடையட்டும், என வாழ்த்தினர்.அப்போது, நாராயணன் நாரதனை அருகில் அழைத்து, நாரதா! நான் பூலோகத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன். அதில் உன் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். வைகுண்டத்தை பாதுகாத்த ஜெய, விஜயர் என்பவர்கள், என்னை சந்திக்க வந்த முனிவர்களை அவமதித்த காரணத்தால், என் சாபப்படி, பூலோகத்தில் அசுரர்களாக பிறந்துள்ளனர். அவர்களில் ஒருவனான இரண்யன், என்னை பூலோகத்தில் இருந்தபடி அவமதித்து வருகிறான். நாராயணனே தெய்வம் என கூறுபவர்களின் தலையைக் கொய்து விடுகிறான். அவன் மனைவி லீலாவதி கர்ப்பமாக இருக்கிறாள். அவள் இப்போது தனிமையில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருக்கிறாள். நீ அவளைச் சந்திக்க வேண்டும். அவள் எனது பக்தை, என்றார். நாராயணனின் அனுமதி பெற்று நாரதர் பூலோகம் கிளம்பினார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...