GuidePedia

0
நாரதர் பகுதி-3



கணவனை வசப்படுத்த மனைவிக்கு நன்றாகவே தெரியும். கெஞ்சினால் மிஞ்சுவார்கள்; மிஞ்சினால் கெஞ்சுவார்கள். மிஞ்சிப்பார்த்த லட்சுமியை நாராயணன் கேலியான தொனியில் பேசியதால், லட்சுமி இப்போது கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் பேசி, அந்தச் சிறுவனை காட்டில் இருந்து காப்பாற்ற வேண்டினாள். நாராயணன் சிரித்தார். லட்சுமி, கவலை கொள்ளாதே. அவன் தன் மனதைப் பக்குவப்படுத்தும் விதத்திலேயே காட்டிற்கு அனுப்பியுள்ளேன். அங்குள்ள விலங்குகளும் அவன் மீது பாசம் செலுத்தவே செய்யும். அது மட்டுமல்ல, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த உலகம் அழியப்போகிறது. பிறக்கப்போகும் புது உலகத்தில் அவன் நம்மோடு இருக்க வகை செய்கிறேன், என்றார். பார்த்தீர்களா! தாயாரின் கருணையை. தாயாரை வணங்கினால், இப்பிறவியில் பாதுகாப்பு கிடைக்கிறது. மறுபிறவிக்கு அவளுடனேயே இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதிக்கு போனால், பெருமாளை வணங்கும் முன்பு அலமேலு மங்கைத்தாயார் கோயிலுக்கு போய் தாயாரை வணங்க வேண்டும். அங்கே பகலில் நடக்கும் லட்சுமி பூஜையை கண் குளிர பார்க்க வேண்டும். பின்னர் தான் மலைக்கு ஏற வேண்டும். நாம் பெருமாளை அடையும் முன்பு, நம் கோரிக்கைகள் அடங்கிய பெட்டிஷனில் பெருமாள் கையெழுத்து போட்டு தயாராக வைத்திருப்பார். புரிகிறதா! திருமால் சொன்னது போலவே சில ஆண்டுகளில் உலகம் அழிந்தது. கடல் பூமியில் புகுந்து எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது. உயிரற்ற உடல்கள் அடையாளம் தெரியாமல் சுக்கு நுறாக நொறுங்கி, மண்ணோடு மண்ணாகி விட்டது. சூரியன் உள்ளிட்ட கிரகங்களும் அழிந்து போயின. எல்லா ஆத்மாக்களும் இறைவன் முன் வந்து நின்றன. அவ்வாறு நின்றதில் உபவருக்கனின் ஆத்மாவும் ஒன்று. அந்த ஆத்மாவுக்கு பிரம்மா வடிவம் ஒன்றைக் கொடுத்தார். இதனால், அவன் பிரம்மபுத்திரன் எனப்பட்டான்.

நாராயணனும், லட்சுமி தாயாரும் அந்த குழந்தையை உச்சிமோந்தனர். அவன் பிரம்மபுத்திரன் என்பதால், தாயாரான சரஸ்வதிதேவி குழந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருந்தாள். ஒருநாள் சரஸ்வதியிடம் , பிரம்மபுத்திரன், அம்மா! நீங்கள் வைத்திருக்கும் இந்த வீணையைக் கொண்டு, இனிமையாக இசை வடிக்கிறீர்கள். அதுகேட்டு உலகமே மயங்கி விடுகிறது. இது எப்படியம்மா? உங்கள் கைவிரல்களில் அப்படி என்னதான் சக்தி இருக்கிறது? என்றான். மகனே! இது சாதாரண வீணையல்ல. இதை வாசிப்பது இசைக்காக மட்டுமல்ல. மனிதர்களோ, தேவர்களோ, கந்தர்வர்களோ, இதர லோகத்தில் வாழ்பவர்களோ தறிகெட்டு அலையும் போது, இந்த வீணையை நான் வாசிக்கிறேன். அப்போது மகுடிக்கு எப்படி பாம்பு கட்டுப்படுகிறதோ, அதுபோல இதன் இசையால் இந்த உலகத்தை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன், என்றாள் சரஸ்வதி. அப்படியா தாயே! இந்த வீணையைக் கொடுத்தது யார் தாயே! தங்கள் தந்தையா! அல்லது எனது தந்தை பிரம்மனா, அல்லது தேவாதி தேவர்களா? என்றதும், இல்லை மகனே, அது ஒரு பெரிய கதை, என ஆரம்பித்தாள் சரஸ்வதி. பிரம்மபுத்திரன் தாயின் சரிதத்தைக் கேட்க தயாரானான். முற்காலத்தில் உன் தந்தைக்கு ஐந்து தலைகள் இருந்தன. அவருக்கு உலகைப் படைக்கும் ஆற்றல் தரப்பட்டிருந்தது. நாராயணன், அதைப் பாதுகாப்பராகவும், சிவபெருமான் ருத்ரனாகி அதை அழிக்கும் வல்லமையுள்ளவர்களாகவும் விளங்கினர். படைப்பதை விட அழிப்பது சுலபம். ஒரு மண்சட்டியை குயவன் செய்வதற்கு படாதபாடு படுவான், ஆனால், அதை கவனக்குறைவாக கையில் வைத்திருந்தால் கீழே விழுந்து நொறுங்கிப் போகும். அவ்வகையில் அழிவுக்கே அதிக சக்தி என்ற வகையில், அழிவுக்கடவுளான சிவன் மிகுந்த சக்தியுள்ளவராக இருந்தார். ஒருமுறை பிரம்மா ஒரு பெண்ணைப் படைத்தார். அவள் அழகு திலகமாய் ஜொலித்தாள். அவளைப் பார்த்ததும், அவருக்கு கடும் மோகம் ஏற்பட்டு விட்டது. அவளை அடைய விரும்பினார். அப்பெண் பயந்து ஓடினாள்.

படைப்பு தெய்வமே! தாங்களே இப்படி நடக்கலாமா? படைப்பவன் தந்தைக்கு சமானமானவன். அவ்வகையில் நீங்கள் எனக்கு தந்தையாகிறீர்கள். நீங்கள் என்னை அடைய நினைப்பது தவறு, என அப்பெண் கதறினாள். ஆனால், ஆற்றல் மிக்க பிரம்மாவிடம் அவளது வார்த்தைகள் எடுபடவில்லை. அவர் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டுவிட்டார். அப்பெண் அழுதபடியே சிவனின் பத்தினியான பார்வதியிடம் சென்று முறையிட்டாள். ருத்ரதாண்டவ மூர்த்தியான சிவனுக்கு இத்தகவல் சென்றது. அவர் பிரம்மனை அழைத்தார். பிரம்மனே! உலகில் எனக்கு மட்டுமே ஐந்து தலைகள். இதன்மூலம் பஞ்சபூதங்களையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். உலகோர் பார்வையில் ஒரு தலை மட்டுமே தெரியும். படைப்பது, காப்பது, அழிப்பது எல்லாவற்றையும் என் ஒருவனால் செய்ய முடியும் என்றாலும், என்னிடமிருந்து இரண்டு சக்திகளைப் பிரித்து உன்னிடமும், திருமாலிடமும் ஒப்படைத்துள்ளேன். என் சார்பில் உனக்கு ஐந்து தலையும் கொடுத்திருந்தேன். ஆனால், பெற்ற மகளுக்கு சமானமான பெண்ணை உன் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டாய். இனி என்னைப் போலிருக்க நீ தகுதியற்றவன், எனக்கூறி ஒரு தலையைக் கிள்ளி எடுத்துவிட்டார்.  இதன் பின் பிரம்மா நான்முகன் ஆனார். பின்னர் அப்பெண்ணை அழைத்த சிவன், இவனுக்கே மனைவியாய் இருந்து சகல லோகங்களையும் கவனித்து வா. உனக்கு இவ்வுலகத்திலுள்ள வித்தைகளுக்கு அதிபதியாய் இருக்கும் பாக்கியத்தை தருகிறேன். இனி நீ கலைவாணி எனப்படுவாய். இதோ! தேவலோகத்திலுள்ள இந்த வீணை உனக்குரியது. இதைக் கொண்டு உலக உயிர்களை மயக்கிவா என்றார். அவள் வேறு யாருமல்ல. உன் தாயான நான்தான், என்றாள். கதையைக் கருத்துடன் கேட்ட பிரம்மபுத்திரன், அம்மா! அந்த வீணையை எனக்குத் தாயேன். நான் மீட்ட வேண்டும், என்று கேட்டு அடம்பிடித்தான்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...