தாமதமாக வந்த பக்தனிடம் கருணை காட்டிய சிவன் மயிலாடுதுறையில் மயூரநாதராக வீற்றிருக்கிறார். இங்குள்ள சிவனுக்கு சிவப்புசேலை சாத்துவது சிறப்பு.
தல வரலாறு: பார்வதி மயில் வடிவில் சிவனை வழிபட்ட தலம். மேலும், இங்கு அம்மன் மயில் வடிவில், கவுரி தாண்டவம் ஆடியதால் மயிலாடுதுறை என்ற பெயர் உண்டானது. இவளை மயிலம்மன் என்கின்றனர். ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில், சிவபார்வதி இருவரும் ஆடிய மயூரதாண்டவத்தை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்துவேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும். இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருப்பது சிறப்பு. அகத்தியர் வழிபட்டவர் என்பதால் இங்குள்ள விநாயகர் அகத்திய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
கணக்கு பிள்ளையார்: இங்குள்ள தானியக்களஞ்சியத்தின் வெளித்திண்ணையில் இருப்பவர் களஞ்சியப் பிள்ளையார். இவருக்கு கணக்கு பிள்ளையார் என்றும் பெயருண்டு. இவர் முன் பரப்பட்டிருக்கும் நெல்லில் "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தையும், சுபம், லாபம் எழுதினால் தொழில் சிறந்து லாபம் பெருகும். குழந்தைகள் பள்ளியில் சேரும் முன் இங்கு ""அ,ஆ'' எழுதப் பழகினால் கல்வி சிறந்து விளங்குவர்.
அபயாம்பிகை: இங்குள்ள அபயாம்பிகை அம்மன் நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். வலக்கையில் கிளியேந்தி, நாடிவருவோருக்கு அபயம் அளிக்கிறார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் "அபயாம்பிகை சதகம்' பாடியுள்ளார். இதைப் படிப்போருக்கு கல்வி, செல்வம், தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கர்வம் நீங்கிய நந்தி: சிவனுக்கு சேவை செய்து வந்த நந்திக்கு ஒருமுறை கர்வம் உண்டானது. அதையறிந்த சிவன், தன் திருவடியால் நந்தியை அழுத்த, பாதாள உலகை அடைந்தது. தவறுக்காக வருந்திய நந்தி சிவனிடம் மன்னிப்பு கேட்டது. சிவனும், மயிலாடுதுறையில் ஐப்பசி அமாவாசையன்று ஞானாசிரியராக உபதேசம் செய்து அருள்வதாக கூறினார். அதன்படி குருவாக வந்த சிவன் மேதாதட்சிணாமூர்த்தியாக வந்து உபதேசித்தார். அந்த இடம் "வள்ளலார் கோயில்' என அழைக்கப்படுகிறது.
பாவம் தீர்ந்த கங்கை: கங்காதேவி நீராடுவோரின் பாவச்சுமையால் வருந்தினாள். அவளின் பாவத்தை தீர கண்ணுவ மகரிஷி, ஐப்பசி அமாவாசையன்று காவிரியில் நீராட அருள்புரிந்தார். கங்கையுடன் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, பைரவர்,
துண்டிவிநாயகர் என காசியிலிருந்து இங்கு எழுந்தருளினர். இதை அறிந்த கயாதீர்த்தமும் மயிலாடுதுறை இடபதீர்த்தக்கரைக்கு வந்தது.
சேலை கட்டும் வழக்கம்: நாத சர்மா, அனவித்யாம்பிகை என்னும் தம்பதியர், காவிரியில் நீராட மயிலாடுதுறை வரும்போது, ஐப்பசி மாதம் முடிந்து விட்டது. ஆனால், அவர்களின் கனவில் தோன்றிய சிவன், கார்த்திகை முதல்நாள், சூரிய உதயத்திற்கு முன் நீராடினாலும் பாவம் நீங்கும் என அருள்புரிந்தார். இத்தம்பதி சிவனருளால் முக்தி பெற்றனர். இதில் அனவித்யாம்பிகை
ஐக்கியமான சிவலிங்கம், அம்மன் சந்நிதியின் வலப்புறத்தில் உள்ளது. இவருக்கு சிவப்பு நிறச்சேலை சாத்துகின்றனர்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12.30, மாலை4- இரவு9.
போன்: 04364- 223 779.
Post a Comment