காட்டு வழியே வேட்டையாடி விட்டு வந்த முருகன், தங்கிய தலம் மேலக்கொடுமளூர். தனிக்காட்டு ராஜாவாக, முருகன் மட்டுமே கோயிலில் இருக்கிறார். விநாயகர் சந்நிதி கூட இங்கில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
தல வரலாறு: திருச்செந்தூரில், பத்மாசுரனின் மகன் பானுகோபனைச் சம்ஹாரம் செய்தார் முருகன். அவர் அங்கிருந்து திரும்பி வரும்வழியில், இங்குள்ள பரளை ஆற்றின் கரையில் தங்கினார். ஒரு உடைமரக்குச்சியால் பல் துலக்கி விட்டு, மேற்கு நோக்கி அமர்ந்தார்.
அப்போது, அங்கு தவமிருந்த ரிஷிகளிடம், காலை பூஜைக்குத் தேவையான பொருட்களைக் கேட்டார். அவர்கள் பழங்கள், சிகப்பு கப்பி அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் ஆகியவற்றைக் கொடுத்தனர். அவற்றை ஏற்றுக் கொண்ட முருகனை, அங்கேயே தங்கி அருள்பாலிக்க வேண்டும் என ரிஷிகள் வேண்டினர். அதன்படி அங்கேயே தங்கினார். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்ட இந்த முருகனை வணங்கினால் பக்தர்களுக்கு செல்வம் பெருகும்.
பச்சை பதார்த்தம்: அன்னம் போன்ற வேகவைத்த பொருட்களை இங்கு சுவாமிக்கு படைப்பதில்லை. தினைமாவு, தேன், கப்பி அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் ஆகியவையே படைக்கப்படுகின்றன. சுவாமி பல் துலக்கப் பயன்படுத்திய குச்சியை உடைய உடைமரமே தலவிருட்சமாக உள்ளது.
கோயில் எழுந்தவிதம்: ரங்கசாமி என்பவரின் கனவில் தோன்றிய முருகன், ""நான் இங்கே தவம் செய்யும் ரிஷிகளுக்கு காட்சியளித்தவன். அவர்கள் கண் திறக்கும் போது, எங்கிருந்து பார்த்தாலும் எனது தரிசனம் கிடைத்தது. அதேபோல், இங்கு வரும் பக்தர்களும் எங்கிருந்து பார்த்தாலும் எனது தரிசனம் கிடைக்கும் வகையில்கோயில் கட்டு,'' என உத்தரவிட்டார். அவரும் தன் சொத்துகளை விற்று, 1927ல் கோயிலைக் கட்டினார்.
18முழம் காவி: சுவாமி சிலையின் கீழ்பாகம், பூமிக்குள் அதிக ஆழத்தில் இருப்பதால், மூலவருக்கு கீழே யந்திரம் பதிக்கவில்லை. சுவாமிக்கு18 முழம் காவி வேஷ்டி அணிவிக்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தின் போது முப்பழ பூஜையும், வேட்டை பூஜையும் நடத்தப்படுகிறது. முருகன் மட்டுமே தனிசந்நிதியில் வீற்றிருக்கிறார். விநாயகர் சந்நிதி கூட இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரவில் அபிஷேகம்: இக்கோயிலில் கார்த்திகை சோமவாரம், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நாட்களில் இரவில் அபிஷேகம் நடத்துவர். தைப்பூசத்தன்று, முருகனின் வேல் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட குமுளீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அபிஷேகம் நடத்துவர்.
கால்வலி தீர்த்தவர்: முதுகுளத்தூர் நல்ல வீரப்பபிள்ளை ஞான உலாவும், பாம்பன் சுவாமிகள் பதிகமும் பாடியுள்ளனர். பாம்பன் சுவாமிக்கு கால்முறிவு ஏற்பட்டபோது, காட்சியளித்தவர் இத்தல முருகனே. அதனால், கால்வலியால் அவதிப்படுபவர்கள் "உடங்கால்' என்னும் பொருளை வாங்கி உடைமரத்தில் கட்ட கால்வலி குணமாவதாக ஐதீகம்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து பார்த்திபனூர் 60 கி.மீ., இங்கிருந்து அபிராமம் செல்லும் வழியில் 14 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 7.00- 12.00, மாலை 4.00 - 7.00.
போன்: 94439 19582, 98434 30230.
Post a Comment