உக்ர தெய்வமான காளி, மதுரை நேருநகரில் அருள்பாலிக்கிறாள். இவளை மக்கள் "குழந்தை காளி' என செல்லமாக அழைக்கின்றனர். தைவெள்ளியன்று இவளைத் தரிசிப்பது சிறப்பு.
தல வரலாறு: தாரகாசுரனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். தன்னை ஒரு பெண்ணால் மட்டுமே வெல்ல முடியும் என அவன் வரம் பெற்றிருந்ததால், சிவன், பார்வதியிடம் அசுரனை அழிக்கும்படி உத்தரவிட்டார். பார்வதி, தன் ஒரு சக்தியை, சிவனின் விஷக்கறை மீது படியச் செய்தாள். அந்த சக்தி ஒரு பெண்ணாக மாறியது. விஷக்கறை படிந்ததால், கருப்பான அவள், "காளி' என பெயர் பெற்றாள். கோபக்கனலுடன், சிங்கத்தின் மீது அமர்ந்த அவள், தாரகாசுரனை எரித்துச் சாம்பலாக்கினாள். தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
குழந்தை காளி: மதுரை நேருநகர் பகுதி மக்கள், காளி வழிபாட்டிற்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை உணர்ந்த பெரியவர்கள், ஒரு கோயில் கட்ட முடிவு செய்தனர். பராசக்தியை பிரதிஷ்டை செய்ய நினைத்து திருவுளச்சீட்டு எழுதி போட்டு பார்த்தனர். சீட்டை ஒரு குழந்தை எடுத்த போது,அதில் காளியம்மன் பெயரால் அமைக்க உத்தரவானது. அதன்படியே காளிக்கு கோயில் எழுந்தது. திருவுளச்சீட்டை குழந்தை எடுத்ததால் காளியை "குழந்தை காளி' என்கின்றனர்.
ஈசான அம்பிகை: காளியம்மன் கிழக்கு நோக்கி இருந்தாலும், முகம் மட்டும் ஈசான திசையான வடகிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. கருவறையின் இருபுறமும் விநாயகர், முருகன் உள்ளனர். தட்சிணாமூர்த்தி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், துர்க்கை, உற்சவ மூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, காலபைரவர் சந்நிதிகளும் உள்ளன. பைரவர் எதிரில் ஆஞ்சநேயர் கைகளைக் கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். அம்மன் எதிரில் சிம்ம வாகனம், பலிபீடம் உள்ளது. நவக்கிரக சந்நிதியும் இங்குண்டு.
சாலக்கோபுரம் : இக்கோயிலில் இடப்புறம் விநாயகரும், வலப்புறம் முருகனும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். நுழைவு வாயிலின் மேற்பகுதியில் ஐந்து கலசத்துடன் கூடிய சாலக்கோபுரம் உள்ளது. அதில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அதன் கீழ் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சுதை வடிவில் உள்ளது.
குழந்தை பாக்கியம்: குழந்தை காளியாக இருப்பதால், திருமணமாகி நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன் அம்மனுக்கு பூஜை செய்கின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும், பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருவிழா : பங்குனி 3வது வெள்ளி காப்பு கட்டி, 4வது வெள்ளி திருவிழா நடக்கிறது. வருஷாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, ஆடி 3வது வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, பைரவாஷ்டமி, அனுமன் ஜெயந்தி, தை கடைசி வெள்ளி.
இருப்பிடம் : மதுரை காளவாசல்-பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் நேருநகர் நேதாஜி ரோட்டில் காந்தி தெரு. மதுரை மத்தியபஸ் ஸ்டாண்டில் இருந்து, எல்லீஸ் நகர் பாலம் வழியாக 2 கி.மீ.,
திறக்கும் நேரம் : காலை 6.30 - 9.30, மாலை 5.30- இரவு 9.00.
போன் : 93441 50952, 83443 94036.
Post a Comment