GuidePedia

0
நாரதர் பகுதி-14
நாரதர் பதைபதைத்தார். அந்த தாயிடம், அம்மா கவலைப்படாதே! நான் இந்த ரிஷிகுமாரர்களுடன் சனகாதி முனிவர்களைத் தேடிச் செல்கிறேன். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற பெயர் கொண்ட அந்த முனிவர்கள் சிவனிடம் வேதம் கற்றவர்கள். சிவபெருமான் குரு வடிவான தெட்சிணாமூர்த்தியாய் இருந்து, ஆலமரத்தடியில் அமர்ந்து அவர்களுக்கு இதைப் போதித்தார். இறைவனே ஆசிரியராக இருந்து பாடம் எடுத்தால், எந்த ரகசியம் தான் தெரியாமல் இருக்கும்? இந்த உலகில் ஞானமும், வைராக்கியமும் அழிந்துவிட்டால் என்னாகும்? ஞானம் என்பது இறைவனை அடையும் பாதையைக் குறிப்பது. வைராக்கியம் என்பது இறைவனை அடையும் வழிமுறைகளைச் சொல்வது. இந்த இரண்டையும் காப்பாற்றும் சக்தி அவர்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். நான் திரும்பும் வரை உங்களை இந்த ரிஷிகுமாரர்கள் கவனித்துக் கொள்வார்கள், என்று சொல்லி விட்டு முனிவர்களைத் தேடிப் போனார். அவரது பேரதிர்ஷ்டத்தின் விளைவாக சனகாதி முனிவர்களைச் சந்தித்தும் விட்டார். முனிவர்களே! ஞானமும், வைராக்கியமும் இவ்வுலகை விட்டு மறையப் போகிறது. அஞ்ஞானம் பெருகி விட்டால் இவ்வுலகம் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போகும். தாங்கள் அவற்றைக் காப்பாற்றும் வழியைச் சொல்லுங்கள், என்றார். அவர்கள் நாரதரிடம், மகரிஷி! இதொன்றும் பிரமாதமில்லை. எங்கே அஞ்ஞானம் தலைதூக்குகிறதோ,  அங்கே இறைவனைப் பற்றி பேச வேண்டும். பகவான் கிருஷ்ணன் பல அவதாரங்களை இதுவரை எடுத்திருக்கிறார். அவரது வரலாறை சொன்னாலே போதும். ஞானமும், வைராக்கியமும் பிழைத்து விடும், என்றனர். நாரதர் அவர்களிடம் விடைபெற்று கொண்டு, அவர்கள் படுத்திருந்த இடத்துக்கு வந்தார். ரிஷிகுமாரர்களிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் பகவானின் திவ்யசரித்திரத்தை ஏழுநாட்கள் விடாமல் சொன்னார்கள். இதைக் கேட்க யமுனை நதிக்கரையில் தேவலோகத்து முனிவர்கள் கூட கூடிவிட்டனர். 

பாகவதத்தைக் கேட்ட மாத்திரத்தில், ஞானமும், வைராக்கியமும் எழுந்து அமர்ந்தனர். அவர்களின் இளமைத் தோற்றம் திரும்பியது.ஞானமும், வைராக்கியமும் ரிஷிகுமாரர்களுக்கு வேண்டிய வரம் அருளினர். இறைவனை அடையும் பாதையைக் கூறினர். மகிழ்ச்சியுடன் விடைபெற்ற ரிஷிகுமாரர்களையும், ஞானம், வைராக்கியம் மற்றும் அவர்களின் தாய் விஷ்ணுபக்தியையும் அவரவர் இடத்துக்கு வழியனுப்பி விட்டு வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாரதர் கண்ணில் ஒரு புஷ்பக விமானம் பட்டது. அதில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். நாரதர் விமானத்தை நிறுத்தினார். மாமுனிவரே! வணக்கம். தாங்கள் யார்? எங்கு பயணப்படுகிறீர்கள்? என் ஆஸ்ரமத்திற்கு வந்து இளைப்பாறிச் செல்ல வேண்டும், என்றார்.முனிவர் நாரதரை வணங்கி, நாரத மகரிஷியைச் சந்தித்தது என் பெரும் பாக்கியம். என் பெயர் சாநந்தர். பூலோகவாசியான நான் சிவனை மட்டுமே தியானிப்பவன். தவமிருந்து தவமிருந்து பூலோகத்திற்கு சிவனை வரவழைத்தவன். எனக்கு ஒரு கோரிக்கை நீண்ட நாளாக உண்டு. உலகத்தின் நன்மையைக் கருதும் நான், நல்லவர் என்றும், தீயவர் என்றும் மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் நல்லவரே என்று நினைக்கிறேன். என் கருத்து சரிதானா சுவாமி? என்று நிறுத்தினார்.உண்மை...உண்மை, என்ற நாரதர், இப்படி உயர்ந்த எண்ணம் மிக்க தங்களைச் சந்தித்தது என் பிறவிப்பயனால் விளைந்தது, என புகழாரம் சூட்டினார். சாநந்தர் தொடர்ந்தார்.மகரிஷி! கேளுங்கள். நல்லவர் சொர்க்கத்துக்கு போய் விடுகிறார்கள். பாதகமில்லை. ஆனால், தீயவர்கள் எமலோகத்துக்குச் செல்கிறார்கள்.  நரகத்தில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பூலோகத்தில் தீமையைச் செய்யும் ஒருவனுக்கு தண்டனை கொடுப்பதில் எனக்கு உடன் பாடில்லை. எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எமனிடம் கோரிக்கை வைக்கப் போகிறேன். இதற்காக சிவபெருமானை நினைத்து தவமிருந்தேன். அவரும் என் முன் எழுந்தருளினார்.

அவரிடம் எமலோகம் செல்ல இந்த ஊர்தியைப் பெற்றுக் கொண்டேன். இப்போது எமலோகம் சென்று கொண்டிருக் கிறேன். தீயவர்களை விடுவிக்கும்படி கேட்கப் போகிறேன், என்றார்.நாரதர் அவரை வாயாரப் புகழ்ந்தார். மாமுனிவரே! தீயவர்க்கும் நன்மை செய்ய நினைக்கும் உங்கள் எண்ணம் உயர்ந்தது. பாராட்டுக்குரியது. நல்லவை உடனடியாக நடைபெற வேண்டும். தங்கள் பயணத்தை தடுக்க நான் விரும்பவில்லை. தாமதமின்றி புறப்படுங்கள். எமனிடம் பேசி வாருங்கள், என்று சொல்லி அவரை வழியனுப்பினாரோ இல்லையோ, சர்வலோக சஞ்சாரியான அவர், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எமன் முன்னால் நின்றார். நாரதர் எமலோகத்துக்கு வந்திருக்கிறார் என்றால்  ஏதாவது விசேஷம் இருந்தாக வேண்டுமே! எமன் அவரை வரவேற்று, காலில் விழுந்து பணிந்து, தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி பாதபூஜை செய்தான்.மகரிஷி நாரதரே! தாங்கள் எழுந்தருளிய காரணத்தை அறிந்து கொள்ளலாமா? சொல்லுங்கள். என்னால் முடிந்தது என்றால், தங்களுக்காக எதையும் செய்யத் தயார், என்றான் மீசையை முறுக்கியபடி.எமதர்மா! எல்லாவற்றையும் துறந்து பற்றற்று திரியும் நான் உன்னிடம் என்ன கேட்க போகிறேன். எனக்கு எதுவுமே வேண்டாமப்பா! உலகில் இருப்போர் எல்லாம் நீ எப்போது வருவாயோ என்று அஞ்சி நடுங்கி, கவலையோடு இருப்பது சகஜம். ஆனால், நானோ உன்னை எண்ணி கவலைப்படுகிறேன். உன் அரசாங்கத்துக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறதப்பா! ஆபத்து, என்றார்.மகரிஷி! என்ன சொல்கிறீர்? உயிர்கள் அனைத்தும் என் கையில். எனக்கு ஆபத்தா! அதெப்படி சாத்தியம்.... என்றவன், ஆ..ஹா.. ஹா என எக்காளமாகச் சிரித்தான்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...