GuidePedia

0
நாரதர் பகுதி-19
 

தர்மா! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இப்படி சொல்லவில்லை. கஷ்டங்கள் இயல்பானவை. அவற்றை விரட்டும் வழியைத் தான் பார்க்க வேண்டும். தெய்வங்களே கூட கஷ்டப்பட்ட ஒரு கதையைக் கேள், சொல்கிறேன், என்றார். பீமன் ஓடிப்போய் தர்ப்பை புல்லை பறித்து வந்தான். அதை ஆசனம் போல் ஆக்கி நாரதரை அதில் அமர வைத்தனர். குந்தி மற்றும் ஐந்து புதல்வர்களும் நாரதர் எதிரில் பயபக்தியுடன் அமர கதையை ஆரம்பித்தார் நாரதர். மக்களே! தேவர் குலத்தலைவன் இந்திரன் இருக்கிறானே அவனுக்கு அவ்வப்போது புத்தி மழுங்கி விடும். காரணம் என்ன தெரியுமா? ஆணவம். கடவுளுக்கு ஒன்றை அர்ப்பணித்தால், பதிலுக்கு ஏதாவது எதிர்பார்க்கும் குணம் அவனுடையது. சாந்த மூர்த்தியான நாராயணன் அவனைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், ஒரு சமயம் சிவபெருமானிடம் போய் சிக்கிக் கொண்டான் இந்திரன். தனக்குத் தெரிந்த நடனக்கலையை அவன் ஒருமுறை சிவபெருமானிடம் அர்ப்பணித்தான். அவர் அதைப் பெற்றுக்கொண்டு நடராஜராக மாறி நாட்டியமாடினார். அந்த தரிசனம் கிடைத்தற்கரியது. நாட்டியம் பார்த்தோமா! அத்தோடு அமராவதிபட்டணத்தைப் பார்த்து போனோமா என்றில்லாமல், அங்கேயே கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் இந்திரன். சிவபெருமான் சாந்தத்துடன், ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? சொல் என்றார். அவன் சும்மா இருக்க மாட்டானா? வாயைக் கொடுத்தான். பரமசிவனாரே! எனக்கு ஒரு ஆசை. என்னை விட வீரத்தில் உயர்ந்தவர் யாருமில்லை என்பதைத் தாங்களே அறிவீர்கள். என் வஜ்ராயுதத்தை வீசி எறிந்தால் பிழைப்பவர் யாரும் இருக்க முடியாது. இப்படி வலிமை குறைந்தவர்களுடன் சண்டை போட்டு போட்டு எனக்கு சலித்து விட்டது. என்னிலும் வல்லமையுள்ள ஒருவனுடன் சண்டை போட வேண்டும். அதில் நான் ஜெயிப்பதைப் பார்த்து ஊரே மெச்ச வேண்டும். நீங்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான்.

சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. மனதுக்குள் அவர் என்ன நினைத்தார் தெரியுமா? அடேய் அறிவிலி! உனக்கு தெரிந்த நாட்டியத்தை என்னிடம் அர்ப்பணிப்பது போல் அர்ப்பணித்து விட்டு, என்னிடமே ஆணவமாகப் பேசுகிறாயா? உன் அகம் பாவத்தை ஒடுக்குகிறேன் பார் என்றவராய், நெற்றிக்கண்ணைத் திறந்து விட்டார். வெப்பம் தாளாமல் இந்திரன் எங்கோ போய் பதுங்கி கொண்டான்.  ஏ இந்திரா! உன்னை எதிர்க்க ஒருவன் வருவான் போ என்றார். இந்திரன் பதட்டமும் மகிழ்ச்சியும் மிக்கவனாய் இடத்தைக் காலி செய்தான். சிவபெருமானின் கண்களில் இருந்து புறப்பட்ட நெருப்பு பொறிகள் கடலுக்குச் சென்றன. சிந்துநதி கடலில் கலக்கும் இடம் அது. அந்த தீப்பொறிகள் கடலில் பட்டு ஒரு குழந்தையாக உருமாறியது. தன்னில் பிறந்த குழந்தையை அரவணைத்து எடுத்தான் சமுத்திரராஜன். நேராக என் தந்தை பிரம்மாவிடம் கொண்டு வந்தான். குழந்தையை அவர் மடியில் போட்டான். குழந்தை அவரது தாடியைப் பற்றி இழுக்க ஆரம்பித்தது. என் தந்தை பிரம்மன் சந்தோஷத்தில் தாடியைக் கொடுத்தபடி இருந்தார். நேரம் ஆக ஆக தாடியை வேகமாக இழுத்தது குழந்தை. அவருக்கு வலிக்க ஆரம்பித்தது. குழந்தையின் கையிலிருந்து தாடியை விடுவிக்க முயன்றார். முடியவே இல்லை. குழந்தையோ பிடியை மேலும் இறுக்கியது. அவர் வலி தாளாமல் அலற ஆரம்பித்து விட்டார். அந்த அலறல் சப்தம் வைகுண்டத்திற்கு கேட்கவே பரந்தாமன் ஓடோடி வந்தார். பிரம்மனைப் பார்த்து, ஓய், பிரம்மா! ஒரு குழந்தையின் கையில் சிக்கியுள்ள தாடியை விடுவிக்க முடியாமல் தான் இப்படி கத்தினீரா! சரியான ஆளைய்யா நீர், என்றதும், நாராயணரே! கேலி வேண்டாம். முடிந்தால் நீர் வந்து விடுவியும், என அலறினார் பிரம்மன். நாராயணன் மிக எளிதில் குழந்தையின் கையை எடுத்து விடலாம் என முயற்சித்து பார்க்க, அவரது கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டது குழந்தை. அதன்பிறகு அந்தக்குழந்தை சமுத்திரராஜனின் மகன் என்றறிந்து, அவனை வரவழைத்தார் நாராயணன். 

தந்தை வந்த பிறகு தான் குழந்தை அடங்கியது. ஒரு வழியாக குழந்தைக்கு நல்லபுத்தி சொல்லி இருவரையும் விடுவித்தார்கள்.பாண்டவர்களே! கதையை நன்றாகக் கேட்டுக் கொண்டு வருகிறீர்கள் இல்லையா? ஆணவத்தால் இந்திரன் தேவையில்லாமல் ஒரு வரம் கேட்டான். சிவனின் கோபத்திற்கு ஆளாகி ஒரு அசுரக்குழந்தை உருவாகக் காரணமானான். பிரம்மாவும், நாராயணனும் தேவையில்லாமல் அதனிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்பட்டனர். இனிமேல் தான் உச்சகட்டமே இருக்கிறது. ஆக எல்லாருக்குமே ஆணவம்... ஆணவம்....உனக்கும் ஆணவம். அதனால் தான் உன்னிலும் தாழ்ந்த சகுனியிடம் தோற்றாய். ஆணவத்தையும், கோபத்தையும் எவனொருவன் விடவில்லையோ அவனுக்கு துன்பம் உறுதி, என்று நிறுத்தினார். உண்மை தான் நாரதரே! எங்கள் ஆணவம் இப்போது அழிந்து விட்டது. பட்டால் தானே எதுவும் தெரிகிறது, என்ற தர்மரிடம், கவலைப்படாதே தர்மா! எதற்கும் ஒரு நேரம் உண்டு. உனக்கு நன்மை கிடைக்கும். மீதி கதையையும் கேள், என்ற நாரதர் கதையைத் தொடர்ந்தார். அந்தக்குழந்தைக்கு என் தந்தை பிரம்மன் ஒரு வரம் கொடுத்தார். நீ என்னையே ஆட்டி வைத்தவன். எனவே, மூன்று உலகத்தையும் ஆளும் வல்லமையைக் கொடுக்கிறேன் என்று இவராகவே ஒரு வரத்தைக் கொடுத்தார். தண்ணீரில் இருந்து பிறந்த அவனுக்கு ஜலந்தராசுரன் என்று பெயரும் வைத்தார். இதைக் கேட்டு இந்திரன் அதிர்ந்து போனான் என்று கதையை நிறுத்தி விட்டு, பீமா! இவ்வளவு நேரம் கதை சொல்கிறேனே, கொஞ்சம் தண்ணீர் கொடு, என்றார் நாரதர். குந்திதேவி ஆவல் தாளாமல், நாரதரே! அப்புறம் அந்த குழந்தை என்னவெல்லாம் செய்தது. சொல்லுங்கள், என்றாள்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...