GuidePedia

0
நாரதர் பகுதி-5



பகவான் கிருஷ்ணன் ஒருமுறை நாரதரை அழைத்தார். பிரம்மபுத்திரனான உனக்கு லோக நன்மை கருதி, ஒரு பணி தரப்போகிறேன். அதை செய்து முடிக்க சரியான ஆள் நீ தான். இதை தயவுதாட்சண்யமின்றி செய்ய வேண்டும். நானாக இருந்தாலும் சரிதான்...நடுநிலை மாறக்கூடாது. உலகத்தில் அசுரர்களின் அட்டகாசம் அதிகமாகி விட்டது. தேவர்களிடையே கூட அவ்வப்போது ஆணவ உணர்வு தலையெடுக்கிறது. தேவர்களில் ஆணவம் மிக்கவர்களை அடக்க நீ அரக்கர்களைத் தூண்டி விட வேண்டும். அரக்கர்களின் அட்டூழியத்தைச் சரிக்க, தேவர்களைத் தூண்டி விட வேண்டும். அப்படியானால் தான் உலகம் சமநிலை பெறும். கலகமூட்டுபவனை நாரதன் என்பர்.இன்றுமுதல் பிரம்மபுத்திரனான நீ நாரதன் எனப்படுவாய். உன் பணியை இன்றே துவக்கு, என்றார் பரமாத்மா. நாராயணா! தாங்கள் கொடுத்துள்ள பணி மிகவும் சிரமமானது. இருப்பினும் தங்கள் துணை எனக்கு இருக்கும் போது, எனக்கு ஆபத்தில்லை என்பது உறுதி. இதைத் தாங்கள் வாக்குறுதியாகவும் தர வேண்டும், என்றார் நாரதர். நாராயணன் அவருக்கு நல்லாசி வழங்கினார். நாரதா! இந்த உலகம் உள்ளவரையில் உனக்கு அழிவில்லை. கொஞ்சம் கூட சுயநலமின்றி, நல்லது நடப்பதற்காகச் செய்யப்படும் கலகங்களுக்கு என் சன்னிதானத்தில் முழு நன்மை உண்டு. போய் வா! என்றார். நாரதர் புறப்படவில்லை. சற்றே தயங்கினார்.என்ன நாரதா கிளம்பவில்லையா, என்றார் பரமாத்மா. அவர் கிளம்பாமல் இருந்ததும் கூட அந்த பரந்தாமனின் சித்தம் தான். நாரதர் கண்ணனிடம், பெருமாளே! மன்னிக்க வேண்டும். கலகத்தை நம் வீட்டிலேயே துவங்கலாம் என இருக்கிறேன். ஏனென்றால், உலகத்தின் ஆணவத்தை போக்க முயல்பவன் முதலில் தன் வீட்டிலுள்ள அழுக்கைத் துடைக்க வேண்டும். லோகாதிபதிகளான மும்மூர்த்திகளும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் தேவியருக்குள்ளோ அவ்வளவு ஒற்றுமை இருப்பதாக எனக்குப்படவில்லை. அவரவருக்கு என ஒரு ராஜ்யம் அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த ராஜ்யங்களால் நன்மையே நடக்கிறது என்றாலும். மூன்றையும் ஒன்றாக இணைத்தால் உலகத்திற்கு மேலும் நன்மை நடக்கும். நான் சொல்வது சரிதானே, என்றார் நாரதர்.

நாரதா! நான் சரியான ஒரு ஆளைத் தான், கலகம் செய்ய நியமித்துள்ளேன். நீ சுற்றி வளைத்து என் வீட்டிலேயே கலகத்தை ஆரம்பிக்க நினைப்பது புரிகிறது. வேலையைக் கொடுத்தவனே கொடுத்த வேலையை செய்யாதே என தடுப்பது அஸ்திவாரத்தையே அசைத்து விடும். உம்...உம்...உனக்குத்தான் சகல அதிகாரமும் கொடுத்து விட்டேனே! உன் வேலையை நீ பார். என்னால் உனக்கு எந்த சிரமமும் வராது, என்றார். நாரதர் பகவானின் காலில் விழுந்து ஆசி பெற்று புறப்பட்டார். அன்னை லட்சுமி அந்தப்புரத்தில் இருந்தாள். நாரதர் அங்கிருந்த வாயில்காக்கும் பெண்கள் மூலமாக அனுமதி பெற்று அன்னையின் இருப்பிடத்திற்குள் நுழைந்தார். நாரதரை எழுந்து வந்து வரவேற்ற லட்சுமி, மகனே! எப்படியடா இருக்கிறாய்? உன்னைப் பார்க்க எவ்வளவு ஆவலாய் இருந்தேன் தெரியுமா? என்று சொல்லி அவரை உச்சி மோந்தாள். மகனே! உன் கானம், உன் வீணை இசை சர்வலோகங்களையும் மயக்குகிறது. அதைக் கேட்டு மகிழ மனம் துடிக்கிறது. ஆனால், நீ அமைதியாய் இருக்கிறாயே! முகம் வேறு உம்மென்று இருக்கிறது? நாராயணன் உன்னைத் திட்டினாரா? நீ பூலோகத்தில் இருந்த போது, உனக்காக அந்த பரந்தாமனிடம் நான் எந்தளவுக்கு வாதிட்டேன் தெரியுமா? அவர் உன்னை ஏதாவது சொல்லியிருந்தால், நான் அவரிடம் உனக்காக வாதிடுகிறேன். நீ தவறே செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தை தவறு செய்தால் தாய் பொறுக்க மாட்டாளா என்ன! என அவரது தலையை வருடியபடியே, ஆறுதலாய்ச் சொன்னாள் செல்வத்தரசி. நாரதர் அன்னையை ஏறிட்டுப் பார்த்தார். மீண்டும் தலை குனிந்தபடி அப்பாவி போல் உட்கார்ந்திருந்தார். லட்சுமி அவரை மேலும் உலுக்கினாள். நாரதா! நான் இவ்வளவு கேட்டும் நீ பதில் பேசாமலே இருந்தால் எப்படி? என்றாள் இரக்கத்தையும், கண்டிப்பையும் குழைத்து. நாரதர் திருவாய் மலர்ந்தருளினார்.

அம்மா! என்ன சொன்னீர்கள்? சரியாய் போச்சு! நான் சொன்னதையே நீ கேட்கவில்லையா? கேட்டேன் தாயே! ஆனால், பதிலளிக்கும் நிலையில் நான் இல்லை, என்ற நாரதரிடம், நாரதா! நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிறாய். உனக்கு என்ன ஆயிற்று என்பதை பதட்டப்படாமல் சொல், என்றாள். தாயே! செல்வத்துக்கு அதிபதியே! மகாலட்சுமியே! ஐஸ்வர்ய ராணியே! உங்களை விட உயர்ந்த ஒரு பொருள் இவ்வுலகில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஸ்ரீமன் நாராயணன், பூமியிலே சீனிவாசனாய் அவதரித்த போது, பத்மாவதியாய் பிறந்த தங்களை மணம்முடிக்க அவரே கடனாளி ஆகியிருக்கிறார். நீங்கள் அப்படியில்லை. செல்வாதிபதி. எல்லாரும் கர்ப்பப்பையில் ரத்தம் சொட்ட சொட்ட பிறப்பார்கள். நீங்கள் பாற்கடலில் பிறந்தவர். அப்படிப்பட்ட செல்வச் சீமாட்டியான உங்கள் முன் இந்த வீணையை இசைக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது, என்றார் நாரதர். ஏன்... அதிலென்ன பிரச்னை? தாயே! காதைக் கொடுங்கள். உங்களிடம் மட்டும் ரகசியமாகக் கூறுகிறேன். இந்த வீணையை என் தாய் கலைவாணி தான் எனக்கு பரிசளித்தார். இதை மீட்டும் ஞானமும் தந்தார். இசைஞானம் அறிந்தவர்கள் முன்னால் இதை மீட்டு என்றார். நான் நாராயணனின் முன்பு இதை மீட்டினேன். தங்களையும் அழைக்கச் சொன்னேன். அதற்கு அவர், அவளுக்கு இதெல்லாம் புரியாது. உன் அன்னை கலைவாணிக்கு மட்டுமே இந்த இசைக்கலை முழுமையாகத் தெரியும். தங்களுக்கு காசை எண்ணி பூட்டி வைக்கத்தான் தெரியும் என்றார். அதனால் தான் நான் அமைதியாக இருக்கிறேன், என்று பதில் சொன்னார் நாரதர். லட்சுமி கொதித்தாள். உன் அன்னைக்கு மட்டும் தான் கலைகளின் ரகசியம் தெரியும் என்றால் நான் ஞானசூன்யமா? என்று சீறினாள். அவளது முகம் அவள் அமர்ந்திருந்த செந்தாமரையை விட அதிகமாகச் சிவந்தது
.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...