GuidePedia

0
நாரதர் பகுதி-12
திருப்பரங்குன்றத்தில் நிலையாக இருக்கும் தகுதி பெற்றாலும், நாரதர் தன் சர்வலோக பயணத்தை தொடர்ந்து நடத்தினார். ஒருமுறை அவர் வைகுண்டம் சென்றார். அப்போது திருமாலும், லட்சுமியும் அந்தரங்கமாக ஒரு தனியிடத்தில் பேசிக் கொண்டிருந்தனர். நாரதரைக் கண்டதும் லட்சுமி வெட்கப்பட்டு, உள்ளே சென்றாள்.நாரதருக்கு கோபம் வந்து விட்டது. எம்பெருமானே! பாற்கடல் நாயகனே! நான் லட்சுமி தேவியாரை தாயாக நினைக்கிறேன். அவரை தாயார் என்றே உலகத்தினர் போற்றுகின்றனர். நானும் அப்படி எண்ணியே தங்கள் தனித்திருக்கும் அறைக்கு வந்தேன். மேலும் நான் கோபத்தை அடக்கியவன். மாயையை வென்றவன் (முற்றும் துறந்தவன்). ஒரு துறவியான என்னால், லட்சுமி தாயாரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க இயலுமா? அவர்கள் இப்படி நடந்து கொண்டதால் என் இதயம் வலிக்கிறது, என்றார். நாராயணன் சிரித்தார். நாரதா! நீ ஆசையைத் துறந்தவன் என்கிறாய். துறவிகளாலும் ஆசையைத் துறக்க முடியாது. கடவுளர்களாலேயே ஆசையைத் துறக்க முடியவில்லை எனும் போது, நீ எப்படி ஆசையைத் துறந்தவன் என்று சொல்கிறாய். உன் எண்ணம் தவறு. வா என்னோடு! நான் உன்னை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீ ஆசையைத் துறந்தவனா என்பதை நீயே உணர்ந்து கொள், என்று சொல்லி அழைத்துச் சென்றார். அவர்கள் பூலோகம் வந்தனர். ஒரு குளத்தின் கரைக்கு சென்றனர். நாராயணன் நாரதரிடம், நாரதா! இந்த குளத்து நீர் பால் போல் தெளிவாக இருக்கிறதல்லவா? என்றார். ஆம்...பிரபு! இதைப் பார்த்தவுடனேயே நீராட வேண்டுமென தோன்றுகிறது, என்றார் நாரதர். அதற்கென்ன! நான் காத்திருக்கிறேன். நீ நீராடி விட்டு வா, என்றார் நாராயணன்.

நாரதர் தன் வீணையை கரையில் வைத்து விட்டு, குளிக்க தண்ணீரில் இறங்கினார். மூழ்கி எழுந்தார். இப்போது அவரது உருவம் மாறிவிட்டது. ஆம்...பெண்ணாக மாறி விட்டார். நாரதராக இருந்து நாரதியாக மாறிவிட்ட அவர், கரைக்கு வந்தார். தன்னைப் பார்க்க வெட்கமாக இருந்தது. கரையில் இருந்த துணியால் உடலை மறைத்துக் கொண்டு நின்றார். சுற்றுமுற்றும் பார்த்தார். நாராயணனைக் காணவில்லை. அவரது வீணையும் கரையில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர் நாரதர் என்பதே தெரியாமல் போயிற்று. பழைய நினைவுகள் மறக்கவே, அழகே வடிவாக வெட்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் நாரதி. அப்போது அந்நாட்டின் மன்னன் தாலத்துவஜன் அங்கே வந்தான். தனியே ஒரு பெண் சொக்கும் அழகுடன் நிற்பதைப் பார்த்த அவன், அழகுத்திலகமே! நீ யார்? இப்படி ஒரு அழகியை நான் இதுவரை பார்த்ததில்லையே! திருமண எண்ணமே இல்லாத எனக்கு, உன்னைப் பார்த்ததும் அந்த ஆசை வந்து விட்டது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் சொல். உடனே உன் பெற்றோரிடம் பெண் கேட்க ஆள் அனுப்புகிறேன், என்றான். மன்னா! நான் யார் என்பதே எனக்குத் தெரியவில்லை. எனக்கு தாய், தந்தை, உறவினர்கள் யாருமே இல்லை. எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்தும் புரியவில்லை. இருப்பினும், எனக்கொரு துணை தேவை என்பதால், உம்முடன் வருகிறேன். உம்மை மணந்து கொள்ள சம்மதிக்கிறேன், என்றாள். தடபுடலாக கல்யாணம் நடந்தது. தம்பதிகள் நீண்டகாலமாக குடும்பம் நடத்தி 60 குழந்தைகளைப் பெற்றனர். அறுபது பேருக்கும் திருமணம் செய்து வைத்து பேரன், பேத்திகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனிடையே தாலத்துவஜன் மீது எதிரிகள் படையெடுத்தனர். தாலத்துவஜன் தன் மகன்கள், பேரன்களுடன் போருக்குச் சென்றான். கடும் சண்டை நடந்தது. சண்டையில் தாலத்துவஜனின் மகன்கள், பேரன்கள் ஒருவர் கூட மிஞ்சவில்லை. எல்லாரையும் எதிரிநாட்டவர் அழித்து விட்டனர்.

தாலத்துவஜன் மட்டும் திரும்பி வந்தான். நாடும் போய் விட்டது. உறவுகளும் இறந்து விட்டனர். நாரதி கதறியழுதாள். தான் பெற்ற மக்களையும், தன் மக்கள் பெற்ற மக்களையும் இழந்த அவள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. அப்போது திருமால் அவள் இருந்த இடத்துக்கு முதியவர் வேடமிட்டு வந்தார். நாரதி! ஏன் அழுகிறாய்? நீ அழுவது யாருக்காக? உன்னோடு இருந்த அந்த சொந்தங்கள் நீ அழுவதால் வந்து விடுமா? அந்த சொந்தங்கள் ஒருநாள் போய்விடும் என்ற விஷயம் உனக்கு தெரிந்தது தான். நீ ஏன் அவர்கள் மீது பற்று வைத்தாய். ஆசை தானே! நீயும், அவர்களும் கடைசிவரை இருப்பீர்கள் என்ற மாயை தானே உன் கண்ணை மறைத்தது! நீ இந்த பூமிக்கு யாரையும் கொண்டு வரவும் இல்லை. அவர்கள் உன்னை விட்டு போகவும் இல்லை. எங்கிருந்தோ வந்தார்கள், எங்கேயோ போய்விட்டார்கள், என்றார். நாரதிக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது. மறுநாள் அவள் தான் முதலில் குளித்த குளத்துக்கு வந்தாள், அதில் மூழ்கி எழுந்தாள். நாரதராக மாறிவிட்டாள். தாலத்துவஜன் ஓடி வந்தான். தன் மனைவி ஆணாக...அதிலும் தேவலோக இசைஞானி நாரதராக மாறியது கண்டு திகைத்தான். தன் மனைவியைக் காணவில்லையே என அழுதான். அப்போது நாராயணன் அங்கே வந்தார். அன்பனே! நீ அழுவதில் அர்த்தமில்லை. அவள் எப்படி வந்தாள் என்பது கூட உனக்குத் தெரியாது. எங்கிருந்தோ வந்த தாய், தந்தை பெயர் தெரியாதவளை மணந்தாய், குழந்தைகளைப் பெற்றாய். இப்போது அவள் மறைந்து விட்டதும் அழுகிறாய். அவள் வந்த இடத்திற்கே திரும்பப் போய்விட்டாள் என்று நினைக்க உன் மனம் ஏன் கூசுகிறது? என்றார். அந்த மன்னன் மனம் தெளிந்து ஊர் திரும்பினான். நாரதர் பிரம்மலோகம் சென்றார். பிரம்மன் அவரிடம், குழந்தாய் நாரதா! உன்னை நீண்ட நாளாகக் காணவில்லையே! எங்கே இருந்தாய் இத்தனை நாளும்! என்றார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...