GuidePedia

0
முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)

தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;
வள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர்த்த மாலையை அணிவிக்க வேண்டும்;

சப்தகன்னியர்களுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் கொண்ட மாலையை அணிவிக்க வேண்டும்;

வைத்தியக் கடவுளான தன்வந்திரிக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;

நரசிம்மருக்கு மல்லிகைப் பூ மாலையை(செவ்வரளிபூவை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

விஷ்ணு துர்கைக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;

மஹாவிஷ்ணுவுக்கும்,ஹயக்ரீவருக்கும் துளசிமாலையை அணிவிக்க வேண்டும்;ரோஜாமாலையை(துளசியை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

குலதெய்வம் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்;
ஜீவசமாதிகளுக்கு மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;

அம்பாளுக்கு ரோஜாமாலை அல்லது செவ்வரளி மாலையை(குஞ்சம் வைக்காமல்) அணிவிக்க வேண்டும்;

சிவபெருமானுக்கும்,சிவலிங்கத்திற்கும் மல்லிகை மாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அல்லது ரோஜாமாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அணிவிக்க வேண்டும்;

காளியம்மாள்,மாரியம்மாள்,பத்திரகாளியம்மாள்,அங்காளபரமேஸ்வரி, பூமாரி,பரமேஸ்வரியம்மாள்,முனியாத்தாள்,முனீஸ்வரி(அம்பாளின் பெயர்களில் ஒன்று),துர்கையம்மன்,பட்டத்தரசியம்மாள்,பெரியமாரி,சின்னமாரி, முத்துமாரி,மகேஸ்வரி,ஜெயமாரி,செல்லியம்மன்,செவ்வாடைக்காரி, பூவாடைக்காரி,கருமாரி,தேவி கருமாரி போன்ற உக்கிரமான பெண்தெய்வங்களுக்கு 27 அல்லது 58 அல்லது 108 எலுமிச்சைம்பழங்களால் மாலையை கட்டி அணிவிக்க வேண்டும்;

அதேசமயம்,இந்த அம்மன் கோவில்களில் ஒருபோதும் எலுமிச்சை பழங்களை அறுத்து அதில் தீபம் போடக்கூடாது;நவீனகால மூடநம்பிக்கையாக இந்த பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;இந்த உக்கிரமான பெண்தெய்வத்திற்கு ஒரு போதும் ரோஜா மாலையை அணிவிக்கக் கூடாது;

ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீயோக பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு ரோஜாமாலை(குஞ்சமாக அருகம்புல் வைத்து) அல்லது செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;மிளகுவடை மாலையை செய்தும் அணிவிக்கலாம்;மிளகுவடையை எட்டின் மடங்குகளில் செய்தமாலையாகக் கோரித்து அணிவிக்கலாம்;

சூரியபகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்;
சந்திரபகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;
செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;
ராகு பகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;
புதபகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;
சுக்கிரபகவானுக்கு மல்லிகைப்பூமாலையை அணிவிக்க வேண்டும்;
கேதுபகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;
சனிபகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்கவேண்டும்;
குருபகவானுக்கு செவ்வந்தி மாலையை அணிவிக்க வேண்டும்;
எந்த கடவுளுக்கும்,ஜீவசமாதிக்கும் கேந்திப்பூவை ஒருபோதும் அணிவிக்கக்கூடாது;எந்த ஒரு சுபகாரியத்திற்கும் கேந்திப்பூ உகந்தது அல்ல;தமிழ்நாட்டில் பலர் இறை வழிபாட்டிற்கு கேந்திப்பூவை பயன்படுத்தி வருகின்றார்கள்;இது மிகவும் தோஷத்தையும்,கடுமையான பாவத்தையும் நமக்குத் தரும்;
பூமாலையை வாங்கும்போது பேரம் பேசாமல் வாங்க வேண்டும்;
தோஷநிவர்த்திக்கு என்று நவக்கிரகக் கோவிலுக்கோ அல்லது பைரவ சன்னதிக்கோ செல்லும் போது கைப்பட உரிய பூக்களை வாங்கி,தோஷமுள்ளவர் மாலையாக கோர்ப்பது அவசியம்
எந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்?
ஆன்மீகத்தில் முன்னேற விரும்புவோர் மணி,மந்திரம்,ஒளஷதம் இம்மூன்றையும் பயன்படுத்த வேண்டும்;அதன் மூலமாக ஆன்மீகத்தில் பல சாதனைகளை எட்ட முடியும்;காலம் காலமாக இப்படித்தான் முன்னேறினார்கள்;ஆனால்,எப்படி முன்னேறினார்கள் என்பது குருவானவர்,தகுந்த சீடனுக்கு மட்டும் உபதேசித்து வந்துள்ளார்;இதனால்,சமுதாயத்தில் பொறுப்பான சீடர்களும்,தகுதி நிறைந்த குருநாதர்களும் யுகம் யுகமாக உருவாகிக் கொண்டே வந்துள்ளார்கள்;

நாம் வாழ்ந்து வருவதோ தகவல்யுகம்! தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று எங்கோ இருந்து உலகம் முழுவதும் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்ப முடிகிறது;அப்படி பரப்பினாலும்,சபையில் சொல்லக் கூடிய விஷயங்களைத்தான் குருவருளாலும்,குருவின் அனுமதியோடும் வெளிப்படுத்தி வருகிறோம்;ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்ட விரும்புவோர் தொடர்ந்து நமது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வந்தால் மட்டுமே மேற்கொண்டு முன்னேற்றத்துக்குரிய தீட்சை அல்லது பயிற்சி அல்லது உபதேசம் கிடைக்கும்;

மணி மந்திரம் ஒளஷதம் என்ற வார்த்தைகளைக் கொண்டே சுமாராக 100 ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்;அவ்வளவு ஆன்மீகப் பொக்கிஷங்கள் இந்த மூன்று வார்த்தைகளிலும் புதைந்திருக்கின்றன;

உதாரணமாக,கேது மஹாதிசை,கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் திசை,கேதுவின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகத்தின் திசை போன்றவை வரும் போது தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்;

சுக்கிரமஹாதிசை வந்தால்,திருக்கோவிலூருக்கு அவரவர் ஜாதகப்படி குறிப்பிட்ட கிழமை அல்லது நட்சத்திரநாள் அல்லது திதி வரும்போது சென்று வழிபட வேண்டும்;அவசியப்பட்டால் அபிஷேகம் செய்ய வேண்டும்;

சூரிய மஹாதிசை வந்தால் கண்டிப்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;

சந்திர மஹாதிசை வந்தால் சாந்தமான பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;சந்திரனுடன் ராகு,செவ்வாய் போன்ற பாவக் கிரகச் சேர்க்கை இருந்தால் உக்கிரமான பெண் தெய்வத்தை ‘முறைப்படி’ வழிபட வேண்டும்;

செவ்வாய் மஹாதிசை வந்தால் சஷ்டி திதியில் முருகக் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;அவரவர் ஜனன ஜாதகப்படி கடலோர முருகன் அல்லது மலைமீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;

ராகு மஹாதிசை வந்தால் நாகர்கோவில் நாகராஜா கோவில்,இருக்கன்குடி,சமயபுரம்,பொன்னமராவதி அருகில் அமைந்திருக்கும் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோவில்,கரூர் பசுபதீஸ்வரர் கோவிலினுள் அமைந்திருக்கும் கருவூர் சித்தர் வழிபாடு,திருநாகேஸ்வரம்,காளஹஸ்தி பாதாளபைரவர் வழிபாடு மற்றும் உக்கிரமான பெண் தெய்வ வழிபாடு =இவைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்;ராகு மஹாதிசை நடைபெறும் 18 ஆண்டுகளுக்குமே இந்த மாதிரியான கோவில்களுக்கு மாதம் ஒருமுறை செல்ல வேண்டும்;ராகுவின் நட்சத்திரம் நிற்கும் நாளில்,ராகு காலத்தில் வழிபாடு நற்பலன்களைத் தரும்;

குரு மஹாதிசை வந்தால் சித்தர்கள் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்;ஆன்மீக வழிகாட்டிகளின் தொடர்பும் அதன்மூலமாக தெய்வீக ரகசியங்களும் தேடி வந்துகொண்டே இருக்கும்;குரு ஓரை மற்றும் குருவின் நட்சத்திர நாட்களில் தெய்வீக முன்னேற்றங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்;

சனிமஹாதிசை வந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;இதன் மூலமாக சனி மஹாதிசையின் வலிமை அதிகரிக்கும்;யோகம் தரும் சனிமஹாதிசையாக இருந்தால் யோகத்தின் சக்தி அதிகரிக்கும்;அவயோகம்/பாதகம் தரும் சனி மஹாதிசையாக இருந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு அதை பெருமளவு குறைத்துவிடும்;

புதன் மஹாதிசை வந்தால் மஹாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டும்;

எந்த திசை வந்தாலும் சரி;இறைவனை பூக்கள் ,பழங்கள்,தூபதீப நைவேத்தியம் கொண்டு வழிபட வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது பக்தியுணர்வு இறைசக்தியைச் சென்றடைகிறது;அவ்வாறு சென்றடையும் போது நமது கோரிக்கைகளும்நீண்டகால ஏக்கங்களும்,வேண்டுதல்களும்இறைசக்தியைச் சென்றடைகின்றன;
நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய பக்தி மார்க்கமே போதுமானது;கோவில்களுக்குச் சென்று வழிபடுதல்,வீட்டிலேயே மந்திரம் ஜபித்தல்,குறிப்பிட்ட திதியன்று குறிப்பிட்ட தெய்வத்தை அவரவரின் பிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் திசையைப் பொறுத்து வழிபடுதல் போன்றவையே போதுமானது;
-ஆன்மீகக்கடல்-

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...