GuidePedia

0
1. காளஹஸ்தி சிவனுக்கு, தென் கயிலாய நாதர், ஆராவமுது, திருக்காளத்தி நாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், கல்லாலடியார், ஐந்து கொழுந்து, கல்லாடியில் கரும்பு, குடுமித்தேவர், மருந்து, மலை மேல் மருந்து, கபாலி, காளத்தி, காளத்திக் கற்பகம், ஜோதிவிடங்கர், பொன்முகரித் துறைவர் என 16 வகை பெயர்கள் உள்ளது. 
காளஹஸ்தியின் 20 சிறப்புகள்
2. அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார்குழலி ஆகிய 7 பெயர்கள் உள்ளன. 

3. காளஹஸ்தி கோவிலின் தல விருட்சமாக அகண்ட வில்வம், கல்லால மரம் ஆகியவை உள்ளன. 

4. இத்தல தீர்த்தமாக பொன் முகரி, பிரம்ம தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம் உள்பட மொத்தம் 14 தீர்த்தங்கள் இருக்கின்றன. 

5. காளத்தி நாதர் இரு கண்களும் இழந்தவராக உள்ளார். அவருக்கு இடது கண்ணாக அம்பாளும், வலது கண்ணாக கண்ணப்பனும் திகழ்வதாக கருதப்படுகிறது. 

6. காளத்த நாதர் வீற்றிருக்கும் மலைப்பகுதிக்கு ஆனந்த நிலையம் என்றொரு பெயரும் உண்டு. 

7. சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் வழியில் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. 

8. காளத்திநாதர் கோவில் கட்டப்பட்டு சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. 

9. காளத்திநாதர் கோவிலில் சோழ மன்னன் வீரராஜேந்திர சோழன் மற்றும் விஜயநகர மன்னர்கள் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். 

10. காளஹஸ்தியில் வழிபாடு செய்தால் கயிலையில் வழிபாடு செய்த பெரும் பேறு கிடைக்கும். எனவேதான் காளத்திபாதி, கயிலை பாதி என்று நக்கீரர் பாடியுள்ளார். 

11. தென்கயிலாயம் என்று புகழப்படும் ஆலயங்களில் காளஹஸ்தி ஆலயமும் ஒன்றாகும். 

12. காளஹஸ்தியில் கண்ணப்ப நாயனாரும், சிவகோசரியாரும் முக்தி அடைந்துள்ளனர்.

13. நக்கீரர் தென்திசை நோக்கி வந்த போது இத்தலத்தில் பல்லாண்டுகள் தங்கி ஈசனை வழிபட்டார். 

14. சிவபெருமான், இத்தலத்தின் வட கிழக்கில் பர்வத ரூபத்தை ஏற்படுத்தி அங்கு முருகனை தங்க வைத்து, அவனது அருட்செல்வர்களுக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுக்க உத்தரவிட்டார். 

15. காளஹஸ்தி கோவிலில் உள்ள சுற்றுச் சுவர்கள், உள்பகுதி விமானங்கள் அனைத்தும் ராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைப்பை அப்படியே ஒத்துள்ளன. 

16. காளஹஸ்தியில் ஓடும் நதி பொன், வெள்ளி போல் ஒளியினை உமிழ்ந்ததால் அதற்கு சொர்ணமுகி நதி என்ற பெயர் ஏற்பட்டது. 

17. சொர்ணமுகி நதியில் திருப்பதி ஏழுமலையானின் திருமஞ்சன நீர் கலந்து மேலும் சிறப்பை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். 

18. காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட நாம் 35 அடி ஆழத்துக்கு கீழே இறங்க வேண்டும். அதற்காக 20 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

19. கார்த்திகை தீபம் தினத்தன்று எள்ளை இடித்து பொடியாக்கி அதை தண்ணீர் விட்டு பிசைந்து அகல் விளக்கு போல மாற்றி அதில் எண்ணை ஊற்றி திரி வைத்து, பனை மரத்தின் உச்சியில் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அதில் பனை மரத்துடன், அகல் விளக்கும் எரிந்து போகும். அதில் உள்ள கரியை எடுத்து வந்துதான் காளத்தீஸ்வரருக்கு பொட்டாக வைப்பார்கள். 

20. இத்தலத்தில் ஓடும் சொர்ணமுகி நதி தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கி செல்வதால், அதை "உத்திரவாகினி'' என்றும் அழைக்கிறார்கள்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...