GuidePedia

0
'ஆடி மாதம்... இது எந்த நல்ல காரியத்துக்கும் சரிப்பட்டு வராத மாதம்' என்கிற நம்பிக்கை, இங்கே பல காலமாக ஊறிக் கிடக்கிறது. திருமணம், காதணிவிழா, மஞ்சள்நீர் சடங்கு என்று எல்லாவிதமான சுபநிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் புறக்கணிப்பது... இங்கே தொடர்கிறது. அதேசமயம்... கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம்தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக, அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, செடல் உற்சவம், பூச்சொரிவது, காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது என்று ஆடி வெள்ளிகளில் தெருவுக்குத் தெரு திருவிழாதான்!
'ஏன் ஆடியில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு... ஏன் இத்தனை திருவிழாக்கள்..?' என்று ஆராயப் போனால்... அதில் இருக்கிறது தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ அறிவும்!
''நவராத்திரிபோல் அம்மனுக்கு சிறப்புடைய காலம் வேறில்லை. புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரியை... இப்போது சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அதேபோலத்தான் ஆடி அமாவாசைக்குப் பிறகு வருகிற பத்து நாட்களும் 'ஆசாட நவராத்திரி' என கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் அம்மனை வணங்குவது பழக்கம். திருவாதிரை சிவனுக்கும், திருவோணம் பெருமாளுக்கும், விசாகம் முருகனுக்கும் எப்படி உகந்ததோ... அதைப்போல ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு உகந்தது. இந்தக் காரணங்களால்தான் ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதமாக நாம் கொண்டாடுகிறோம்'' என்று சொல்லும் ஆச்சாள்புரம் சம்பந்த குருக்கள், மேலும் சில காரணங்களையும் அடுக்குகிறார்.
''பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலி வாங்கும். அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலே அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாக தோன்றியதுதான் அம்மன் வழிபாடு. 'அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான்' என்றும், 'காலரா நோயிலிருந்து காப்பாற்று வது காளியம்மன்தான்' என்றும் முடிவுசெய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டார்கள். அதில் அர்த்தமும் இருந்தது.
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.
கொற்றவை வழிபாடு நம் தொன்மை காலத்தில் இருந்தே இருக்கிறது. எதிரியை அழிக்க புறப்படும்போது கொற்றவையை வழிபட்டுவிட்டுத்தான் கிளம்பினார்கள் பழந்தமிழர்கள். கொற்றவைதான் பிற்காலத்தில் காளியாகவும் துர்க்கையாகவும் மாறியது. காலரா என்னும் அரக்கனை அழிக்க காளி என்னும் கோர தோற்றமுடைய தெய்வத்தைத்தான் அவர்கள் நம்பினார்கள். அதனால் காளியை வணங்கினார்கள். அப்படித்தான் இந்த ஆடி மாத பழக்கங்கள் தொடங்கின'' என்று அம்மன் வழிபாட்டின் வரலாற்றைச் சொன்னார் சம்பந்த குருக்கள்.
காளியம்மன், மாரியம்மன் என்று தொடங்கிய வழிபாடு இன்னும் பெருகி துர்க்கையம்மன், நாகாத்தம்மன், வேம்புலியம்மன், பச்சையம்மன், புலியீஸ்வரியம்மன் என்று மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் அமைந்தது. அங்கெல்லாம் ஆடியில் அம்மன் வழிபாடு நடக்க ஆரம்பித்தது. அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள்... ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்ச மும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்... கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படைகூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.
''இப்படிக் கூழும் கஞ்சியும் ஊற்றுவது உணவுப் பஞ்சத்தைப் போக்க மட்டுமல்ல, இது மிகப்பெரிய மருத்துவ முறையும்தான்!'' என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் திருநாவுக்கரசு.
''வெறும் கூழாக மட்டும் நாம் அதனை நினைத்துவிட முடியாது. கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். பஞ்சத்தைப் போக்குவதோடு... வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள். கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயம் மிகப்பெரிய மருத்துவ பலன்களைக் கொண்டது. அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும்... கஞ்சியும். எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!'' என்று வியந்தார் திருநாவுக்கரசு.
ஆடி போற்றுதும்!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...