GuidePedia

0
ஏதுக்களால், எடுத்துரைக்க முடியாதவன் இறைவன்

              
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதித்தாலும் எளிதில் அகப்படாதவன் ஆண்டவன். அவனை இன்ன தன்மையன், இந்நிறத்தவன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக்காட்ட முடியாது. இத்தகைய இறைவனுக்கு ஒரு நாமமோ ஒரு உருவமோ இல்லை. எனினும் வாழையடி வாழையாக வந்த அடியார் திருக்கூட்டம் அவனுக்குப் பல பெயர் சூட்டியும் பல வடிவம் அமைத்துமே அமைதியும் உள்ள நிறைவும் பெற்றுள்ளனர். இப்பேருண்மையைத் தான் தேன் கலந்த வாசகம் தந்த வான் கலந்த மணிவாசகர்.

"ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ' என்று பாடி இன்பம் காண்கிறார். ஆயிரம் திருநாமம் பாடி அமைதி காண்போம்.

ஒரு உருவமோ ஒரு வடிவமோ ஒரு பெயரோ அற்ற இதே இறைவன் தான் வேண்டுவார் வேண்டுவதை ஈயும் நோக்குடன் அடியவர்கள் வேண்டும் வடிவிற் சூட்டும் பெயரில், காட்சியளித்து அருள்புரிகிறான். இதை "நானாவித உருவாய் நமையாள்வான்', "பல பல வேடம் ஆகும் பரதன் தாரிபாகன்' என்று தேவாரப்பாடல்கள் தெரிவிக்கின்றன.


முருகு உணர்த்தும் பொருள்


எம் ஆண்டவன் பூண்ட வடிவங்களுள் முருகன் வடிவமும் ஒன்றாகும். இந்த வடிவம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழரின் தனியுடைமையாக அன்று தொட்டு இன்றுவரை நிலவுகிறது.


தாயுமானாரும் வள்ளலாரும் வாழ்த்திய முருகன்


மற்றும் "கந்தரனுபூதியேற்றுக் கந்தரனுபூதி சொற்ற எந்தையருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ' என்று அருணகிரி புகழ்பாடிய தாயுமானவரும், திருத்தணிகை முருகன் மீதும் சென்னை கந்தகோட்டக்குமரன் மீதும் உள்ளம் உருகும் பாடல்கள் பாடிய வடலூர் வள்ளலாரும் எம் நினைவில் என்றும் இருக்கத்தக்கவர்கள்.


அறிஞர் வாழ்த்திய முருகன்


அத்துடன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டிலும் வாழ்ந்து மறைந்த "முருகன் அந்தாதி' பாடிய ஞானியார் அடிகளையும் "திருவொற்றி முருகன் மும்மணிக்கோவை' பாடிய மறைமலையடிகளாரையும் "முருகன் அருள் வேட்டல்', "முருகன் அல்லது அழகு' என்ற பாடல் உரை? நூல்களைத் தந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும் யாம் மறக்க முடியாது. இவர்கள் போன்றே "அறிவாகிய கோயிலிலே அருளாகிய தாய்மடிமேல் பொறிவேலுடனே வளர்வாய் அடியார் புதுவாழ்வுறவே புவிமீதருள்வாய் முருகா, முருகா, முருகா' என்று பாடிய பாட்டிற்கொரு புலவன் பாரதியையும் "சுப்பிரமணிய அமுது' பாடிய அவன் தாசன் பாரதிதாசனையும் யாம் என்றும் நினைவிற் கொள்ளல் ஏற்புடையது.

ஈழத்துப் புலவர்கள் பாடிய முருகன்


ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ் வளர்த்த தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் கதிர்காமக்கந்தன் மீதும், கொழும்புத் துறை யோகர்சுவாமிகள் நல்லூர்க் கந்தன் மீதும், வித்துவான் வேந்தனார். அதே தெய்வம் மீதும் பாடிய பாடல்கள் நம் நினைவலைகளில் மோதத்தான் செய்கின்றன. மற்றும், ஈழத்துத் தமிழர் வாழ்வில் தனக்கெனத் தனியிடம் பெற்றுள்ள கவிஞர் காசி ஆனந்தன் பாடியுள்ள முருகன் அருள் வேண்டும் பாடல்கள் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் தனியிடம் பெறுபவையாகும்.


நக்கீரரின் முதன்மை இடம்


முருகன் புகழ்பாடியோரின் பெரும் பட்டியல் மேலே தரப்பட்டிருப்பினும் "முருக இலக்கியத்தை' முதலிற் படைத்த தனிச்சிறப்பை "பொய்யற்ற கீரன்' என்று கச்சியப்ப சிவாச்சாரியாரால் புகழ்ந்து பாடப்படும் திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் பெறுகிறார். ஏனைய பிற தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்கெல்லாம் தலங்கள், சேத்திரங்கள் என்ற பெயர் பெற முருகன் எழுந்தருளும் இடங்களுக்கு மட்டும் "படைவீடுகள்' என்று பெயர் பெற்றதற்குக் காரணம் முருகன் வீரர்களுக்கெல்லாம் ஒரு பெருவீரனாக விளங்குவதனாலேயாகும். இத்தகைய மாட்சிமை மிக்க நிலையை முதன் முதலில் முருகனுக்கு ஏற்படுத்திய பெருமை நல்லிசைப் புலவர் நக்கீரருக்கே உரியது.

குமரகுருபரர் கண்ட குமரன்


அருணகிரிநாதரையடுத்து முருகன் புகழ் பாடியதனாற் தமிழ் இலக்கிய உலகிற் தனியிடம் பெற்று விளங்குபவர் குமரகுருபர அடிகளாகும். பதினேழாம் நூற்றாண்டிற்குரிய இவர் பல அரிய படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகிற்கு உவந்து அளித்துள்ளார். அவற்றுள் முருகன் புகழ்பாடுபவையாகத் "திருச்செந்தூர்க்கந்தர் கலிவெண்பா', "வைத்தீசுவரன் கோவில்', "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.


தமிழனாய்ப் பிறந்த முருகன்


சிவன் சவுந்தர பாண்டியனாகவும் உமை தடாதகா தேவியாகவும் முருகன் உக்கிர குமரனாகவும் முறையே மதுரையிற் பிறந்தது தமிழின் மீது அவர்களுக்கு இருந்த எல்லையற்ற காதலே காரணம் என்று பொருள் குறிக்கும் முறையிற்

"தமரநீர்ப் புவனம் முழுதும் ஒருங்கு ஈன்றாள் தடாதகா தேவி என்று ஒரு பேர் தரிக்கவந்ததுவும் தனிமுதல் ஒருநீ சவுந்தர மாறன் ஆனதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்தமிழ் மதுரம் கூட்டுண எழுந்தவேட்கையால் எனில் இக் கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார் பமரம் யாழ்மிற்ற நறவு கொப்பளிக்கும் பனிமலர்க் குழலியர், பளிக்குப் பால்நிலா முன்றில் நூநிலா முத்தின் பந்தரிற் கண்இமை ஆடாது அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம்நுண் நுசுப்பு அள வல என்று அமரரும் மருளும் தெளிதமிழ்க்கூடல் அடல்அரா அலங்கல் வேணியனே!' என்று மதுரைக் கலம்பகத்தில் வரும் பாடல் குமரகுருபரனின் எல்லையற்ற தமிழ்ப் பற்றிற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாய் மிளிர்கிறது. அருணகிரி கண்ட முருகன்

இறுதியிற் தமிழுக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பை எடுத்து இயம்பி இக்கட்டுரையை முடிப்பது ஏற்புடையது என்று கருதுகிறேன். தமிழுக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பை முருக அடியார் இயம்பிய கருத்துகள் அனைத்தையும் ஈண்டு எடுத்துப் பெய்தல் இயலாத செயலாகும். எனவே வண்டமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன் என்று, உறுதியோடு அறுதியிட்டுக் கூறிய அருணகிரிநாதர் கண்ட அருந்தமிழ் முருகனின் சில இயல்புகளை மட்டும் இங்கு எடுத்தாள விரும்புகிறேன்.


அகத்தியருக்கு அருந்தமிழ் அறிவுறுத்தியவர்

தமிழுக்கு இலக்கணம் தந்து தமிழை வளம்படுத்தியவர் அகத்திய முனிவர் என்பது மரபு வழியாக எம்மவர் ஏற்றுள்ள செய்தியாகும். இம்மரபு வழிச் செய்தி "தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்' அகத்தியன் என்று கம்பர் வாழ்த்தும் வாழ்த்துரையால் மேலும் வலிவு பெறுகிறது. இத்தகைய அரும்புலமை வாய்ந்த அகத்தியருக்கும் அருந்தமிழை ஊட்டியவர் முருகன் என்கிறார் அருணகிரிநாதர்.

இத்தகைய அகத்தியர் சிவனோடு ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமை மிக்கவர். அவரின் அகம் மகிழவும் இரு செவிகள் குளிரவும் தமிழ் அறிவை முருகன் அவருக்கு ஊட்டினார் என்பதை,

"சிவனைநிகர் பொதியவரை முனிவர் அகம்மகிழ இரு செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே' என்று அருணகிரிநாதர் அகம் குழைந்து பாடுகையில் எம் உள்ளம் உறும் உவகைக்கு எல்லைதான் உண்டோ? சிவனுக்குச் செந்தமிழ் செப்பியவர்

வள்ளி மணவாளனாகிய நம் குமரன் குடமுனிவன் செவியில் செந்தமிழ் ஓதியதோடு நிறைவு பெறாத நினையிற் கொன்றை மலர்மாலையணிந்த முழுமுதற் பொருளாகிய சிவபெருமானுக்கே தன்னைப் பெற்ற அப்பனுக்கே கொஞ்சிப்பேசித் தமிழின் தகமையை அறிவித்தார் என்பதைக்,

"கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே'

என்று மேலும் ஒருபடி சென்று அருணகிரிநாதர் அறையும் கருத்து எம் நெஞ்சையள்ளும் கருத்தாக ஒளிவிடுகிறது.


இறையனார் அகப்பொருளின் ஆழம் கண்டவர்

அருந்தமிழ் முனி அகத்தியர்க்கும், எம்மையாளும் ஆண்டவனுக்கும் அருந்தமிழின் ஆற்றலை அழகுற எடுத்துக் கூறிய நம் முருகன், பாண்டியன் வளர்த்த பைந்தமிழில் தோன்றிய "இறையனார் அகப்பொருள்' எனும் நூலுக்குப் புலவர் பலர் உரை புகன்ற நிலையிலும் உருத்திர சன்மர் என்ற பெயருடன் தோன்றிய முருகன் இவை அனைத்தையும் தனித்தனியே ஆராய்ந்து இறையானார் அகப்பொருக்கு நக்கீரர் நவின்ற உரையே நல்லுரையென முடிந்த முடியை வழங்கினார் என்பதை

"வழுதியர் தமிழின் ஒருபொருள் அதனை வழிபட மொழியும் முருகேசர்' என்று அருணகிரிநாதர் நமக்கு வழங்கும் செய்தி சிந்தை நிறையோடு ஏற்கத்தக்க சிறப்புமிக்க செய்தியாக ஏற்றம் பெற்று விளங்குகிறது. தமிழில் உயர் சமர்த்தர்

நம் முருகன் அருந்தமிழ்ப் பற்றினால் ஆட்கொள்ளப்பட்டவனாய் விளங்கியதோடு, அருந்தமிழ் ஆய்விலும் உயர்ந்து விளங்குகிறான் என்பதை "அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி' என்று வெற்றிப் புன்னகையுடன் அருணகிரிநாதர் பாடுவதில் இருந்து அறிகிறோம்.

புலமையும் ஆய்வும் பெற்று ஞானம் ஊறும் செங்கனிவாயுடை முருகனே! நான் நாள்தோறும் செந்தமிழ் நூல்களை ஓதி உய்ய அருள்புரிய வேண்டும் என்பதை

"செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறும் செங்கனி வாயில் ஒருசொல் அருள்வாயே'

என்று அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் விடுத்த வேண்டுகோள் தன் வாழ்வு வளம் பெறமட்டும் விடுத்த வேண்டுகோள் அல்ல, மாறாகத் தமிழராகிய எம் சார்பிலும் விடுத்த வேண்டுகோள் என்பதை உய்த்து உயர்வோமாக.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...