சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.
நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? அனலாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தான். அவனது கொட்டத்தை யாராலும் அடக்க முடியாத நிலையில் தேவர்கள் விநாயகரின் உதவியை நாடினார்கள். அனலாசுரனுடன் மோதினார் விநாயகர். ஆனால், அவனை ஒடுக்க முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே தூக்கி விழுங்கினார் விநாயகர்.
வயிற்றினுள் சென்ற அனலாசுரன் வெப்பத்தை அதிகப்படுத்த சூடு தாங்கமுடியாமல் தவித்தார் விநாயகர். குடம் குடமாக தண்ணீர் அருந்தியும் சூடு குறைந்த பாடில்லை. ஒறு முனிவர் அறுகம்புல்லை விநாயகர் தலைமீது வைக்க, உடனே சூடு தணிந்தது. அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்த விஷயமாகி இன்றும் நாம் அதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம். இதில் மறைவாய் சொல்லப்பட்ட விஷயம் உடல் சூட்டை அறுகம்புல் தணிக்கும், ஜீரண சக்தியை உண்டாக்கும் என்பதே! அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச் சேர்ந்தது.
பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இது வளரும். இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon. சமஸ்கிருதத்தில் துர்வா என்றும் ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள். தமிழில் அறுகு, பதம், தூர்வை, மேகாரி என பல பெயர்கள் இதற்கு. சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற சரும நோய்கள் குணமாக அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளித்தால் போதும். உடனே குணமாகும்.
மூலநோய்க்கு காய்ச்சாத ஆட்டுப்பாலில், அரைத்த அறுகம்புல்லைக் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், அல்சருக்கும், வெள்ளைப்படுதல், வெட்டை நோய்க்கும் இது அருமருந்து. தினமும் அறுகம்புல் சாறு குடிக்க ரத்தம் சுத்தமாகும். ஆனால், மருத்துவத்திற்கு இதை பயன் படுத்தும்போது சுத்தமான இடத்தில் வளர்ந்த அறுகம்புல்லை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள். ஆனால், ஆன்மிக அன்பர்களுக்கு விநாயகரின் ஸ்பரிசம் பட்டு அது பிரசாதமாக கிடைக்கும் போது மகத்துவமும் பல மடங்கு கூடிப் போகிறது. இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு அறிவியல் இழையோடி கிடப்பதற்கு மஞ்சள் பிள்ளையாரை அலங்கரிக்கும் அறுகம்புல்லே சாட்சி!
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2116-topic#ixzz2yb2ppRxr
Under Creative Commons License: Attribution
Post a Comment