GuidePedia

0
நாரதர் பகுதி-1
கந்தர்வ லோகம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது. இவர்களில் உபன் மிக மிக சந்தோஷத்தில் இருந்தான். ஆம்... அன்று அவனுக்கு மகன் பிறந்திருந்தான். அவன் மனைவி குழந்தையை அருகில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை அழுதது. என்ன ஆச்சரியம்... அந்த அழுகுரல் புல்லாங்குழலின் இனிமையை ஒத்திருந்தது. எல்லாரும் குழந்தையைப் பார்த்தால், கண்ணே சிரிடா என கொஞ்சுவார்கள். ஆனால், இந்தக் குழந்தையைப் பார்த்தால், தம்பி! அழுடா என்றார்கள். அந்தளவுக்கு குழந்தையின் குரலில் இனிமை இழையோடி இருந்தது. குழலினிது என்பார்களே...அது இந்த குழந்தைக்கு முற்றிலும் சரியாகப் பொருந்தும்.சரி.... கந்தர்வர்கள் என்றால் யார்? பூலோகத்தில் வாழும் நமக்கு நரன் அல்லது மனிதன் என்று பெயர். இந்திரலோகத்தில் வாழ்பவர்களுக்கு தேவர்கள் என்று பெயர். இதுபோல, இந்த பிரபஞ்சத்தில் 14 லோகங்கள் உள்ளதாம். இதில் தேவலோகத்துக்கு கீழ்ப்பட்ட பூலோகம். பாதாளலோகம் உள்ளிட்ட உலகிலுள்ளவர்கள் சகல நோன்புகள் நோற்பதின் மூலமோ, யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விப்பதன் மூலமோ, கடும் ஆன்மிகப்பயிற்சிகளை திடசித்தத்துடன் செய்வதன் மூலமோ அல்லது இம்மியளவு கூட பிற உயிர்களுக்கு துன்பம் செய்வது பற்றிய நினைவு கூட எழாமல் இருப்பார்களோ, பாடுவதன் மூலமோ அல்லது இசைக்கருவிகளை மீட்டுவதன் மூலமோ இறைவனைத் துதித்தவர்கள் ஆகியோர் கந்தவர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். இவர்களுக்கு சுகபோக சுகவாழ்வு கிடைக்கும். செல்வம், குடும்ப சுகம் எதற்கும் குறைவிருக்காது. இப்படிப்பட்ட ஒரு குலத்தில் பிறந்த குழந்தை என்றால் கொண்டாட்டத்துக்கு என்ன குறைவாகவா இருக்கும்? உபனின் வீட்டிற்கு கந்தவர்களும், கந்தர்வ மாதர்களுமாக வந்து குழந்தையை நீடுழி வாழ வாழ்த்திப் போய்க் கொண்டிருந்தனர்.இந்நேரத்தில் வந்த ஒரு கந்தர்வ தம்பதியிடம் குழந்தை குறும்பு செய்தது. தன்னை அவர்கள் கொஞ்சிக் கொண்டிருந்த போது, கந்தர்வனின் அங்கவஸ்திரத்தையும், அவனது மனைவியின் புடவைத் தலைப்பையும் முடிச்சுப் போட்டு விட்டது. அவர்கள் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க எழுந்த போது, முடிச்சுப் போட்டிருந்ததால், ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டனர். அந்தப் பெண் தன் கணவனை கடிந்து கொண்டாள்.

ஒரு வீட்டுக்கு வந்தால் இப்படியா நடந்து கொள்வீர்கள். ஏன் என்னை இடிக்கிறீர்கள்? என்றாள் மெல்லிய குரலில்.அவன் அவளிடம், அடி போடி! நீதான் ஏதோ சில்மிஷ வேலை செய்திருக்கிறாய். இங்கே பார். உன் புடவைத்தலைப்பை நான் அறியாமல் என் வஸ்திரத்தில் முடிச்சு போட்டுள்ளாய், என்றான். அவர்கள் முடிச்சை அவிழ்த்து விட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை கலகலவென சிரித்தது. இப்படியாக குழந்தை பிறந்த அன்றே தன் கலகத்தை துவக்கிவிட்டான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே..பிறந்திருப்பது யாரென்று.16 நாட்கள் கடந்தன. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. கந்தர்வர்கள் இல்ல விசேஷங்களுக்கு தவத்தில் உயர்ந்த பெரியவர்கள் எல்லாம் வருவார்கள். இங்கேயும் கூட்டத்துக்கு குறைவில்லை. முனிவர்களின் நல்லாசி குழந்தைக்கு கிடைத்தது. அவர்களின் ஞான திருஷ்டியில், இக்குழந்தை 14 லோகங்களுக்கும் சென்று வருவான். ஏன்...அசுரர்கள் கூட இவனிடத்தில் சிக்கி திண்டாடப் போகிறார்கள். இறைவன் காரணமில்லாமல் இக்குழந்தையைப் படைக்கவில்லை என புரிந்தது. குழந்தைக்கு உபவருக்கன் என பெயர் சூட்டப்பட்டது. உபவருக்கன் வளர்ந்தான். தந்தை உபன் மிகப்பெரிய இசைஞானி என்பதால், குழந்தைக்கும் அதையே கற்றுக் கொடுத்தான். ஆனால், இசையில் தந்தையையும் மிஞ்சினான் உபவருக்கன். தந்தை உபன் அகம் மகிழ்ந்து அவனுக்கு மகதி என்னும் இசைக்கருவியை வழங்கினான். அது வீணையை விட இனிமையாக இருந்தது. இந்த இசைக்கருவியை கொண்டு அவன் மீட்டிய ராகமும், இசைத்த பாடலும் கந்தர்வலோகத்தை மட்டுமின்றி, தேவலோகத்தையும் ஈர்த்தது. தேவலோகத்தினர் கூட கந்தர்வலோகம் வந்து குழந்தை உபவருக்கனை தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று பாடச்சொல்லி கேட்டபார்கள். எங்காவது யாகம் நடந்தால், அங்கே உபவருக்கனின் இசைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகி இருக்கும். இப்படி உபவருக்கனின் இசைஞானம் எங்கும் புகழ் பெற்றது.

சிறுவனாயிருந்த உபவருக்கன் இளமைப் பருவத்தையும் அடைந்தான். இளமை வரும் போது, எங்கிருந்து தான் வருமோ அந்தக் காதல். அது உபவருக்கனையும் விட்டு வைக்கவில்லை. மன்மத பாணங்களுக்கு இரையாக வேண்டிய நிலைமை அவனுக்கு ஏற்பட்டது. பிரமசிரேஷ்டர் என்ற அந்தணர் ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தார். யாகத்திற்கு உபவருக்கனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாகத்தைக் காண பல இளம் யுவதிகளும் வந்திருந்தனர். உபவருக்கன் சாமவேதத்தை தன் வீணையில் மீட்ட ஆரம்பித்தான். வந்திருந்த கூட்டம் அவனது இசையில் லயித்தது. குறிப்பாக யுவதிகள் அதில் கட்டுண்டனர். ருக்மாங்கனா என்ற யுவதி உபவருக்கனின் அருகிலேயே வந்து அமர்ந்து, அவன் இசை மீட்டுவதை ரசித்தாள். அத்துடன் அவனது கட்டுடலையும் ரசித்தாள். யாகநிகழ்ச்சிகள் முடிவடைந்தன. ருக்மாங்கதா, உபவருக்கனின் அருகில் சென்றாள். இவனோ கந்தர்வன். அவளோ அந்தணப் பெண். உபவருக்கா! கொஞ்சம் நில்லுங்கள், நான் தங்களோடு சற்று பேச வேண்டும், என்றாள். உபவருக்கன் திரும்பிப் பார்த்தான். கட்டுடல் கொண்ட அந்த கட்டழகியைப் பார்த்தவுடனேயே பற்றிக் கொண்டது காதல் தீ. ஆனால், அந்தக்காதலே அவனது கந்தர்வலோக வாழ்வுக்கு உலை வைக்கப் போகிறது என்பதை அவன் அப்போது உணரவில்லை.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...