GuidePedia

0


சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு செல்வத்தை அருளும் ஐஸ்வர்ய வீரபத்திரரும், ஸ்வர்ணாம்பிகையும் தரிசனம் தருகின்றனர். இவர்களை செவ்வாயன்று வழிபட்டு பொருள் வாங்கினால், பல மடங்கு பொருள் பெருகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு: கைலாயத்தில் சிவன் திருமணம் நடந்தபோது, தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு, வில்வலன், வாதாபி என்ற சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்தார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) உண்டானது. தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோஷத்தையும் போக்கினார். காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார்.
வீரபத்திரர் சிறப்பு: அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப்பல்லுடன் இடதுகையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சந்நிதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேரதிசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, "ஐஸ்வர்ய வீரபத்திரர்' என்று அழைக்கிறார்கள். 
அம்பாள் பார்வையில் குரு: அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள். எனவே இவள், "ஸ்வர்ணாம்பிகை' எனப்படுகிறாள். இவளது சந்நிதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சந்நிதியும், எதிரே நவக்கிரக மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்திலுள்ள குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டிட குருபார்வை கிடைக்கும், குருவால் உண்டாகும் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது.
செவ்வாய் கோயில்: நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, "செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். 
அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாயன்று காட்சி தந்ததாக ஐதீகம். செவ்வாயன்று ஐஸ்வர்ய வீரபத்திரையும், ஸ்வர்ணாம்பிகையையும் வணங்கி, தங்கநகை உள்ளிட்ட பொருள் வாங்கினால் அது பல மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம்.
சிறப்பம்சம்: வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் இவ்வூர், "வில்லிவாக்கம்' எனப்படுகிறது. பிரகாரத்தில் நடராஜர், பைரவர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆதிசங்கரர், நால்வர் சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நிதியில் அகத்தியரும் இருக்கிறார்.
இருப்பிடம்: எழும்பூரில் இருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள வில்லிவாக்கம், பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6 .00- பகல் 12.00, மாலை 4.00- இரவு 8.30.
போன்: 044 - 2617 2326.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...