நிலைத்த ஆனந்தம் எது?
மனிதன் மற்ற
விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அபபொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப் பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம், நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான்.மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம், நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டு கொள்வோம்.
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம்.
அந்தச் சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம், சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்த மட்டும்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
Post a Comment