
நவசித்தி விநாயகரைத் தரிசித்து வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகிவிடும்; இல்லத்தில், நன்மைகள் அனைத்தும் குடியேறும் என்கின்றனர், பக்தர்கள்.
சென்னை- வேலூர் சாலையில் உள்ளது வாலாஜாபேட்டை. இங்கிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை கிராமம் (அடிக்கடி பேருந்து வசதி உண்டு). இந்த ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. பயணித்தால், ஒட்டனேரியை அடையலாம். தற்போது 'விநாயகபுரம்’ என்று அழைக்கப்படுகிற இந்த ஊரில்தான், அருளையும் பொருளையும் அள்ளித் தரும் ஸ்ரீநவசித்தி விநாயகர் கோயில்கொண்டிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள ஊர் என்பதாலோ என்னவோ, ஆந்திர கோயிலைப் போலவே அமைந்துள்ளது ஸ்ரீநவசித்தி விநாயகர் ஆலயம். உள்ளே, மகா மண்டபத்தில் விநாயகப்பெருமானின் 32 திருவுருவங்களையும் தரிசிக்கலாம். அதையடுத்து, எங்கு திரும்பினாலும் விநாயகரின் அற்புதத் தரிசனம் சிலிர்க்க வைக்கிறது. கருவறையில், ஸ்ரீநவசித்தி விநாயகர்.
இவரை மனதாரப் பிரார்த்தித்தால், மனக் குழப்பங்கள் யாவும் விலகும்; புத்தியில் தெளிவு பிறந்து, உற்சாகத்துடன் செயலாற்றலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கருவறைச் சந்நிதியில், மூலவருடன் சுயம்புவாகத் தோன்றிய இரண்டு விநாயகப் பெருமானையும் தரிசிக்க முடிகிறது. இதில், நடுவில் சிவலிங்க வடிவினராக காட்சி தரும் சுயம்பு மூர்த்தத் தில் ஒரு விசேஷம் உண்டு!
இந்த மூர்த்தத்தின் நடுப்பாகத்தைக் கண்டால் ஸ்ரீவிநாயகரின் திருமுகமும், மேல் பாகத்தைக் கவனித்தால், நாகம் ஒன்று படமெடுத்த நிலையில் இருப்பது போலவும் தோன்றும் என்று பூரிப்புடன் விவரிக்கின்றனர் பக்தர்கள். ஆகவே, இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட ராகு-கேது தோஷங்களும் நிவர்த்தியாகும் எனும் நம்பிக்கையுடன் சுற்று வட்டார மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டுச் செல் கிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், ஸ்ரீநவசித்தி விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. அந்தத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநவசித்தி விநாயகரை மனதாரப் பிரார்த்தித்தால், தீராத வினைகளும் தீரும்; நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.
வருடந்தோறும் விநாயக சதுர்த்தி நன்னாளில், இங்கு சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படுமாம். அந்த நாளில், வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவின் சித்தூர் முதலான பல இடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரண்டு வந்து, நைவேத்தியங்கள் படைத்து, ஸ்ரீநவசித்தி விநாயகரை தரிசித்துச் செல்கின்றனர்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.