
திருச்சி என்றதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும், அதன் உச்சியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகரும்தான் நினைவுக்கு வருவர். உச்சிப்பிள்ளையார் குடிகொண்டிருக்கும் ஆலயம், ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி திருக்கோயில் என்பதும் பலருக்குத் தெரியும்!
ஆனால்... இங்கே, உச்சியில் உள்ளது போலவே அடிவாரத்திலும் பிள்ளையார் இருக்கிறார். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த இவரின் திருநாமம் - ஸ்ரீமாணிக்க விநாயகர்!
உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க வேண்டும் எனில் சுமார் 417 படிகளைக் கடக்க வேண்டும். மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டுத்தான் முதல் படியில் அடியெடுத்து வைக்க வேண்டும். ஆம்... ஆலயத்துக்குள் நுழைந்ததும் மாணிக்க விநாயகரின் அருளாட்சிதான்!
திருச்சி நகரின் மிக முக்கிய வணிக நிறுவனங்கள் உள்ள இந்தப் பகுதியில், மாணிக்க விநாயகரை வணங்கி விட்டே, கடையைத் திறக்கின்றனர். இதேபோல் கடையை அடைத்துவிட்டு, வாசலில் நின்றபடி பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்த பிறகே வீட்டுக்குச் செல்கின்றனர். இவரை வணங்கினால், வியாபாரம் செழிக்கும்; சிறக்கும் என்பது நம்பிக்கை!
மாணவர்கள் தேர்வுக்குச் செல்வதற்கு முன்னதாக, மாணிக்க விநாயகரின் திருவடியில், பேனா, ஹால் டிக்கெட் ஆகியவற்றை வைத்து பிரார்த்திக்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் மாணிக்க விநாயகர் அருள்கிறார்.
சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயக விக்கிரகம், அடிவாரத்தில் வைத்து வழிபடப்பட்டதாம்! பிறகு மாணிக்கம் எனும் பக்தர், விநாயகருக்கு சந்நிதி எழுப்பித் தர... மாணிக்க விநாயகர் எனும் திருநாமம் ஏற்பட்டதாம்!
தந்தை தாயுமானவ ஸ்வாமியைப் போலவே சுகப் பிரசவத்துக்கு அருள்கிறார் மாணிக்க விநாயகர். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் இங்கே வந்து விநாயகரை வேண்டி, அருகில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.
யோகம், ஞானம் முதலான தேடலுடன் வரும் அன்பர்கள் பலரும் மாணிக்க விநாயகரை மனதார வேண்டிக் கொண்டு, தியானத்தில் ஈடுபடுவதைக் காணலாம்!
'மனதுள் என்ன பிரச்னையாக இருந்தாலும் மாணிக்க விநாயகரை தரிசித்து வணங்கினால் போதும்; எண்ணி ஏழே நாளில் துயரத்தைப் போக்கி, நிம்மதியைத் தந்தருள்வார்!' என்று சிலிர்ப்பு மாறாமல் சொல்கின்றனர் பக்தர்கள்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.