GuidePedia

0
கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!

யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி

ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே! 

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
மோதக பிரசாதம்...

பிள்ளையார் மோதகப் பிரியர் ஆயிற்றே! சரி, மோதகம் உணர்த்தும் தத்துவம் என்ன? இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல்களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான் என்பதை சொல்லாமல் சொல்வதே மோதகம்.

அதுசரி! முதன்முதலின் பிள்ளையாருக்கு மோதகம் படைத்து வழிபட்டது யார் தெரியுமா? வசிஷ்ட மகரிஷி யின் மனைவி அருந்ததி!

இனி மோதகம் செய்வது குறித்து சில டிப்ஸ்...

மோதகத்துக்குப் பூரணம் செய்யும்போது, பெரும்பாலும் கடலைப் பருப்பும் வெல்லப் பாகும் பயன்படுத்துவார்கள். தேங்காய்ப்பூ கலந்த பூர்ணம் எனில், மேல் மாவில் நெய்யைத் தொட்டுக்கொண்டு செய்யலாம். எள் கலந்து செய்யும்போது நல்லெண்ணெய் தொட்டுக் கொள்ளலாம். உளுத்தம் பருப்பு கொண்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்பு செய்வது எளிதாக இருக்கும்.

சதுர்த்திக்கு உளுந்துவடையும் படைக்கப் போகிறீர்களா... எனில், உளுத்தம் பருப்புடன் சிறிது வெள்ளைக் காராமணியை சேர்த்து ஊறவைத்து செய்தால், வடை மொரமொரப்பாக வரும்.

உச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்!
கணபதியே சரணம்!

நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.

ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.

* தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாராக அவர் கோயில் கொண்டுள்ளார்.

* கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.

* சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாயகரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.

* திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.

* சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்பவராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஆழத்துப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.

- பூசை. அருண வசந்தன்
பிள்ளை வரம் தருவார் ராஜேந்திர பிள்ளையார்!
கணபதியே சரணம்!

ராஜேந்திரசோழன், சிவனாருக்கும் அவரின் மைந்தன் முருகப்பெருமானுக்கும் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பணியில் அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. விநாயகப் பெருமானை துதிக்காமல், கோயில் வேலையில் இறங்கியது தவறு என வருந்திய மன்னன், வராக நதிக்கரையில் விநாயகருக்கு கோயில் கட்டி வழிபட்டான் என்கிறது ஸ்தல வரலாறு. இவருக்கு ராஜேந்திர விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது என்கின்றனர் பக்தர்கள். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ளது இந்த ஆலயம். 

அதுமட்டுமா? ராஜேந்திர சோழனுக்கு அத்தனை பேரும் புகழும் இருந்தும் குழந்தை பாக்கியம் மட்டும் இல்லாமல் இருந்தது. ஒருமுறை, 'நீ பிரதிஷ்டை செய்த விநாயகரை வழிபடு. பிள்ளை வரம் நிச்சயம்’ என அசரீரி கேட்க, மறுநாள், அதன்படியே வேண்டினார் மன்னர். பிள்ளை பாக்கியமும் கிடைக்கப் பெற்றார். எனவே இந்தப் பிள்ளையாருக்கு, குழந்தை வரம் தரும் விநாயகர் எனும் திருநாமமும் அமைந்ததாகச் சொல்வர்.

மாதந்தோறும் சதுர்த்தியில், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை அல்லது கரும்பு அல்லது பழங்கள் சமர்ப்பித்து வழிபட்டால், திருமணத் தடைகள் அகலும். பிள்ளைச் செல்வம் கிடைக்கும். இந்த வழியே பயணிப்பவர்கள், பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வழித்துணைக்கு பிள்ளையார் வருவார் என்பது ஐதீகம்!

கிழக்குப் பார்த்தபடி அருள்கிறார் ஸ்ரீராஜேந்திர விநாயகர். நாக கன்னியர், நவக்கிரகங்கள் சந்நிதியும் இங்கு உண்டு. சனி கிரகத்தின் பாதிப்புக்கு ஆளானோர், சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயக சதுர்த்தி வைபவத்தின் போதும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், சங்கடங்கள் யாவும் அகலும். சந்தோஷம் பிறக்கும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்! 

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...