GuidePedia

0
ஆரஞ்சு விநாயகர்




நாக்பூரில் அருளும் 'டேக்டி கணபதி'

''டேக்டி போகலாமா?'' என்று நாக்பூரில் கேட்டால், ''போகலாமே'' என்று பயபக்தியுடன் விடை வரும். 'டேக்டி' என்றால் மராத்தியில் 'குன்று' என்று அர்த்தம். ஆனாலும், நாக்பூர் மக்களுக்கு 'டேக்டி' என்றால், 'டேக்டி கணபதி' ஆலயத்தையே குறிக்கும்!

ஆரஞ்சுப் பழத்துக்குப் பிரபலமான நாக்பூர், டேக்டியின் ஆரஞ்சு (செந்தூர) விநாயகருக்கும் பிரபலமான ஊர்! சுமார் 250 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் டேக்டி கணபதி!



அரச மரத்தால் ஆன பிள்ளையாராம் இவர். அந்த மரம் இன்றைக்கும் ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனைச் சுற்றித்தான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மிகச் சிறிய ஷெட் ஒன்றுக்குள், சின்னதான நடைமேடையில்தான் இருந்தார் ஸ்ரீகணபதி. பிறகு, ராணுவத்தினரின் வசம் இந்தப் பகுதி வந்ததும், ஆலயம் விரிவுபடுத்தப்பட்டதாம்!

''இந்தப் பிள்ளையார், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக வளர்ந்து கொண்டே வருகிறார். இதை எங்கள் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்'' எனப் பரவசத்துடன் சொல்கின்றனர், நாக்பூரில் வசிக்கும் பெரியவர்கள்.

1965-ஆம் வருடம், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான சவான், ஆலயம் மற்றும் அதன் அமைவிடத்தை, ஒரு டிரஸ்ட்டிடம் ஒப்படைத்தார். அதை யடுத்து நன்கொடைகள் குவிந்தன; இன்னும் இன்னும் பிரமாண்ட மானது திருக்கோயில்.

தினமும் மூன்று முறை தீபாராதனை பூஜை சிறப் புற நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்று, ஸ்ரீகணபதியின் அருளைப் பெற, எண்ணற்ற பக்தர்கள் குவிகின்றனர். முக்கியமாக, இங்கே பிரசாதமாகத் தரப்படும் கொழுக்கட்டையைப் பெறுவதற்காக பக்தர்கள் அலைமோதுவர்.

விநாயக சதுர்த்தி நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமான் தங்கக் கிரீடம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் அழகே அழகு!

நாக்பூர் டேக்டி விநாயகர் சுயம்புத் திருமேனி; இவரின் திருவுருவம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது என்பவற்றைத் தவிர, இந்த ஆலயத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

அதென்ன?

சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், பாலகங்காதர திலகர் போன்ற எண்ணற்ற இந்தியத் தலைவர்கள், டேக்டி விநாயகர் கோயிலுக்கு அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தைக் கூட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுழக்கமிட்டதாகச் சொல்கின்றனர் நாக்பூர் மக்கள்!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...