GuidePedia

0
ஸ்ரீவெள்ளை விநாயகருக்கு கல்யாணம்!





தஞ்சாவூர் கீழவாசல்
ஸ்ரீவல்லப விநாயகர் கோயில்

ஆனைமுகனை கல்யாணக் கோலத்தில் தரிசிக்க, தஞ்சை கீழவாசலில் அமைந்துள்ள ஸ்ரீவல்லப அம்பிகா சமேத ஸ்வேத (வெள்ளை) விநாயகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்!

வெள்ளை விநாயகர் கோயில் எது என்று கேட்டால், பளிச்சென்று வழி சொல்வார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்ஸவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார்.

வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார் கணபதி. 'மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்' என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்; அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.

எனவே, இந்த ஆலயத்தில் திருக்கல்யாண உற்ஸவம் விசேஷம்! ஆவணி மாதம் 10 நாள் நடைபெறும் விழாவில், விநாயக சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாணம். திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் இங்கு வந்து, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.

ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத் துள்ளார். சுவாமிகள், இங்கே 1008 பைரவ பூஜை செய்ததாகவும் சொல்கின்றனர். வியாழக் கிழமைகளில் ஸ்ரீபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநடராஜரின் சுதைச் சிற்பத்தையும் இங்கு தரிசிக்கலாம். கோயிலின் ஸ்தல விருட்சம் - நாகலிங்கமரம். விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை, தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறுமாம். 3-ஆம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம்!

சங்கடஹர சதுர்த்தி கூட்டு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொள்வர். தினமும் 4 கால பூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில் 5 கால பூஜைகள் நடைபெறும். பிரம்ம முகூர்த்த வேளையில், அபிஷேக- ஆராதனைகள் அமர்க்களப்படும்! சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்றும் பெயர் உண்டு!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...