GuidePedia

0
மாமன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் ஆலயம்!
தஞ்சை அருகேயும்... பிள்ளையார்பட்டி!


காரைக்குடி என்றாலே பிள்ளையார்பட்டி நினைவுக்கு வரும்; அங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீகற்பகவிநாயகர் திருக்கோயில் நம் கண்முன்னே வந்து நிற்கும். அதே போல் தஞ்சாவூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது, பெருவுடையார் கோயில் எனப்படும் பெரியகோயில்தான்! இங்கே, தஞ்சாவூருக்கு அருகில் பிள்ளையார்பட்டி எனும் ஊர் உள்ளது என்பதும், இங்கே ஸ்ரீவிநாயகருக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளதும் எத்தனைபேருக்குத் தெரியும்?!

தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு இது ஆயிரமாவது வருடம். தமிழக அரசு சார்பில் பிரமாண்ட விழா எடுக்கும் இந்த வேளையில், சுமார் 1,017 வருடங்களுக்கு முன்பு, சோழச் சக்கரவர்த்தி ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயிலையும் அறிவோமா?!

தஞ்சை பெரியகோயிலில் இருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி. இந்த ஊரின் மையத்தில், கோயில்கொண்டிருக்கிறார் விநாயகப் பெருமான். இந்த ஆலயத்தில், பிள்ளையாரின் திருநாமம் - ஸ்ரீஹரித்ரா விநாயகர்.

சுமார் 8 அடி 4 அங்குல உயரமும், 4 அடி 2 அங்குல அகலமும் கொண்டு, கிட்டத்தட்ட மூன்றரை டன் எடையுடன் கொழுகொழுவெனக் காட்சி தருகிறார் ஸ்ரீஹரித்ரா விநாயகர். தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டும் எண்ணத்தில் இருந்த ராஜராஜசோழன், தற்போதைய கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த விநாயகரின் கல் விக்கிரகத்தை எடுத்து வந்தாராம். வல்ல தேசத்தை அடுத்து வரும் வழியில், வீரர்கள் சற்றே இளைப்பாறுவதற்காக, பிள்ளையாரைக் கீழே இறக்கி வைத்தனராம். பிறகு, வண்டியில் ஏற்ற முனைந்தபோது, விக்கிரகத்தை அசைக்கக்கூட முடியவில்லையாம்!

இதையறிந்த ராஜராஜசோழன், உடனே அங்கே விரைந்து வந்தார். ''இதுவும் நல்லதுக்குத்தான்! பெரியகோயிலின் கன்னிமூலையில் கணபதிக்கு ஆலயம் அமைத்துவிடுவோம்'' என்று சொல்லி, அதன்படி கோயிலும் கட்டி, அந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி எனப் பெயரும் சூட்டினாராம் (ராஜராஜ சோழனின் கனவில் விநாயகப் பெருமானே வந்து, இங்கே கோயில் கட்டச் சொன்னதாகத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு).

தந்தைக்குப் பெருவுடையார் கோயில் கட்டிய அதே ராஜராஜசோழன், மகன் விநாயகருக்கும் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார். பிறகு, மகனைக் காண ஸ்ரீபிரகதீஸ்வரரே இந்த ஆலயத்துக்கு வந்து சென்றார் என்பது நம்பிக்கை! இதற்காகவே, விநாயகர் சந்நிதிக்கு அருகிலேயே சிவலிங்க மூர்த்தத்துக்கும் சந்நிதி அமைந்துள்ளது.

சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலை வேளையில் இங்கு வந்து, விநாயகரை வணங்கி, சிதறுகாய் அடித்துப் பிரார்த்தித்தால், மாங்கல்ய வரம் கிடைக்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்!

தஞ்சை- பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்குங்கள்; வினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வார், பாருங்கள்!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...