விப்ரதனும், விநாயகரும்!
'செய்த பாவமெல்
லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே...' - என்பது பெரியோர் வாக்கு. இதன் அர்த்தம், அறிந்தும், அறியாமலும் நாம் செய்த பாவங்கள், ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் பார்வைபட்டால் நீங்கி விடும் என்பதாகும். நந்துரம் எனும் நகரத்தை ஒட்டி இருந்த காட்டில், கொடும் கொலை பாதகச் செயல்களைச் செய்து வந்த விப்ரதன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான்; காட்டு விலங்குகள் கூட அவனைக் கண்டால் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். அந்தப் பக்கமாக யார் வந்தாலும், அவர்களைக் கொன்று, உடைமைகளைக் கவர்வதே அவனது தொழில்.ஒருநாள், அந்த காட்டு வழியாக முற்கல முனிவர் என்பவர், தன்னை மறந்த நிலையில், விநாயகப் பெருமானைத் துதித்து பாடியபடி வந்தார். அவர் குரலைக் கேட்டதும், விப்ரதன் அவரைக் கொல்வதற்காக, கத்தியுடன் அவர் எதிரில் போய் நின்றான். முற்கல முனிவர் பயந்து நடுங்காமல், அன்போடு அவனைப் பார்த்தார்.
'யாராக இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் தலை தெறிக்க ஓடுவர்; ஆனால், இவர் அமைதி யாக நிற்கிறாரே...'என்று நினைத்து, ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான் விப்ரதன். அப்போது அவன் கையில் இருந்த கத்தி, அவனையறியாமலேயே கீழே விழுந்ததுடன் அவன் மனதில் இருந்த குரூரம் குறைந்து, கனிவு வந்தது.
தன் மனமாற்றத்தை எண்ணி ஆச்சரியம் அடைந்த விப்ரதன், அவரின் திருவடிகளில் விழுந்து, 'என் குரூரத்தை அழித்த கருணா மூர்த்தியே... உங்களைப் பார்த்ததும் என் பாவமெல்லாம் நீங்கியது; மனம் அமைதி அடைந்தது. எனக்கு வழி காட்டுங்கள் குருவே...' என, கண்ணீர் மல்க வேண்டினான்.
விப்ரதனை நீராடி வரச்சொல்லிய முற்கல முனிவர், அவன் தலையில் தன் கரத்தை வைத்து, 'ஓம் கணேசாய நமஹ...' எனும் மந்திரத்தை அவன் செவியில் ஓதினார்.
அதன் பின், பட்டுப்போன ஒரு கொம்பை தரையில் நட்டு, 'நான் சொன்ன மந்திரத்தை சொல்லி, தினமும் இந்தக் கொம்பிற்கு தண்ணீர் ஊற்றி வா; இது தழைக்கும் காலத்தில், உனக்கு மந்திர சித்திகள் கைகூடும்...' என்று சொல்லிச் சென்றார். அவர் சொன்னபடியே செய்து வந்தான் விப்ரதன். கட்டையும் துளிர்க்க துவங்கியது; அதன் அருகிலேயே அமர்ந்து தவம் செய்யத் துவங்கினான் விப்ரதன்.
ஆண்டுகள் பல உருண்டோடியது. ஒரு நாள் அந்தக் காட்டிற்கு வந்த முற்கல முனிவர், ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த விப்ரதனைப் பார்த்தார். 'முற்றும் துறந்த முனிவர்கள் கூட இந்நிலையை அடைய முடியாதே...' என வியந்தவர், தன் கமண்டல நீரை, விப்ரதன் மீது தெளித்தார்.
முனிவரின் கமண்டல நீர் பட்டதும், விப்ரதனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச தீவினைகளும் விலகி, அவனுக்கு புருவ மத்தியில், சிறு தும்பிக்கை முளைத்தது. இதன் காரணமாகவே விப்ரதனுக்கு, புருசுண்டி என்ற பெயர் ஏற்பட்டது. 'சுண்ட' என்றால், தும்பிக்கை.
விநாயக பக்தர்களில் இந்தப் புருசுன்டி தான் முதலாவதாக வைத்து போற்றப்படுகிறார். தீயவன் திருந்துவது மட்டுமல்ல மிகவும் உயர்ந்த நிலையை அடையலாம்; அவ்வாறு செய்யும் ஆற்றல், ஞானிகளின் பார்வைக்கு உண்டு. ஞானிகளின் அருள் கடாட்சம் நம் அனைவர் மீதும் வீசட்டும்.
பி.என்.பரசுராமன்
Post a Comment