GuidePedia

0
மன்னரை வியக்க வைத்த கணக்கு சொன்ன விநாயகர்!

சரித்திரப் புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தை யும் இங்கு, கண்கண்ட தெய்வமாக அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் அறிந்திருப்பீர்கள். இந்தக் கோயிலின் அருகில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் குடிகொண்டிருக்கிறார் கணக்கு பிள்ளையார்.

விசேஷமான இந்த விநாயகருக்குப் பால் மற்றும் எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யும்போது பச்சைநிற மேனியராகக் காட்சித் தருவாராம்! 'கனக விநாயகர்' என்ற பெயரில், ராஜேந்திர சோழன் வழிபட்ட இவருக்கு, 'கணக்குப் பிள்ளையார்' என்ற திருநாமம் வந்து சேர்ந்தது எப்படி?!

கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த ராஜேந்திர சோழன், அங்கு பிரகதீஸ்வரர் கோயில் கட்டுவதற்கான திருப்பணிகளைத் துவக்கியிருந்த காலகட்டம்.

அனுதினமும் வழிபட... அரண்மனைக்கு முன்னால் தான் நிர்மாணித்திருக்கும் கனக விநாயகர் கோயிலுக்கு வடகிழக்கில் பிரகதீஸ்வரர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டு, திருப்பணியைத் துவக்கியிருந்தான் ராஜேந்திர சோழன். ஆலயம் அமைக்கும் பணிகள் அமைச்சர் ஒருவரது மேற்பார்வையில் நடைபெற்றன.

இதற்குத் தேவையான பொன்- பொருளை, அரண்மனை யின் கணக்காளர் ஒருவர் அமைச்சரிடம் ஒப்படைப்பார். அமைச்சர் அவற்றை எடுத்துச் சென்று கனக விநாயக ரின் திருமுன் வைத்து வணங்கிய பிறகே திருப்பணியின் பொருட்டு அவற்றைச் செலவழிப்பது வழக்கம்.

சுமார் 16 ஆண்டுகள் இடைவிடாமல் திருப்பணிகள் நடைபெற்றன. ஒரு நாள், திருக்கோயில் பணிகளைப் பார்வையிட வந்தார் ராஜேந்திர சோழன். கம்பீரமாக எழும்பும் ஆலயம் அவருக்குப் பரவசம் அளித்தது. அமைச்சரை

அழைத்துப் பாராட்டினார். அத்துடன், ''திருப்பணி செலவு களுக்கு உரிய கணக்கை நாளை காலை எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கட்டளையிட்டுச் சென்றார்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'திருப்பணி மும்முரத்தில்... செலவுக் கணக்கை எழுதி வைக்கத் தவறி விட்டோமே!' என்று கலங்கினார் அவர். 'இனி, நாம் செய்வதென்ன? தெய்வம்தான் நம்மைக் காக்க வேண்டும்!' என்ற முடிவுக்கு வந்தவர் கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார்.

'விநாயகப் பெருமானே! மன்னர் திடீரென்று கணக்கு கேட்கிறாரே... நான் என்ன செய்வேன்? தாங்கள் வழிகாட்ட வேண்டும்!' என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து விட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சரின் கனவில் தோன்றிய விநாயகர், ''அமைச்சரே, வருந்தாதீர்.

கோயிலுக்கு இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என்று மன்னனிடம் சொல்!' என்று அருளி மறைந்தார்.

கண் விழித்த அமைச்சர் ஆனந்தக் கூத்தாடினார். 'விநாயகா!' என்று கனக விநாயகர் சந்நிதி நோக்கிக் கைகூப்பி வணங்கினார். ஓலைச் சுவடி ஒன்றை எடுத்து அதில், 'எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று எழுதி வைத்துக் கொண்டார் (மரத்திலும் சுவரிலும் வளைவு வராமல் இருப்பதற்காகப் பயன்படுத்தும் நூலை 'எத்து நூல்' என்பர். இதைக் கொண்டு, கல், மணல், மரம் எவ்வளவு வாங்கப் பட்டிருக்கும் என்பதைக் கணக்கிட்டு விடலாம்).

விடிந்ததும் ஓலைச் சுவடியுடன் மன்னரை சந்தித்த அமைச்சர், ''கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்ப, இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவாகியுள்ளது மன்னா!'' என்றார். இதைக் கேட்ட ராஜேந்திரசோழன், ''ஓ! கோயில் கட்டுமானத்தை (கோணல்களை) சரிபார்க்க வாங்கிய எத்து நூலுக்கே எட்டு லட்சம் பொன் செலவாகி யிருக்கிறது என்றால், நாம் நினைத்தபடியே கோயில், மிகச் சிறந்த முறையில் உருவாகி வருகிறது!'' என்றார்.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், ''ஆமாம் அமைச்சரே! எத்து நூல், எட்டு லட்சம் பொன் என்று மிகத் துல்லியமாக எப்படிக் கணக்கிட்டீர்கள்?'' என்று கேட்டார்.

ஒரு நிமிடம் மௌனமாக நின்ற அமைச்சர், 'மன்னரி டம் உண்மையை சொல்வதே நல்லது!' என்று தீர்மானித் தார். ஆரம்பம் முதற்கொண்டு கணக்கு- வழக்கு எதையும் எழுதி வைக்காத தனது செயல்பாட்டையும், கனக விநாயகர் கனவில் தோன்றி அருளியதையும் மன்னரிடம் விவரித்தார்.

இதைக் கேட்ட மன்னருக்கு ஆச்சரியம்! பரிவாரங்கள் சூழ, கனக விநாயகரின் சந்நிதிக்குச் சென்றவர் கண்ணீர் மல்க அவரை வணங்கி நின்றார். பிறகு அமைச்சரிடம், ''விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கெனில், அது சரியாகத்தான் இருக்கும். பிரகதீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பும் நமக்கு விநாயகரின் ஆசி கிடைத்து விட்டது. ஆம், நமது கனக பிள்ளையார் கணக்குப் பிள்ளையாராக அருள் பாலித்திருக்கிறார்!'' என்று பெருமிதம் பொங்கக் கூறியவர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டார். அன்று முதல் கனக விநாயகர், கணக்கு விநாயகர் ஆனார்!

அதுமட்டுமா? ராஜேந்திர சோழன் வேறொரு காரியமும் செய்தார்!

'பிற்காலத்தில், நான்கு அடி உயரம் மற்றும் மூன்றடி அகலம் கொண்ட இந்த விநாயகரை வேறு இடத்துக்கு எவரேனும் மாற்றி விடக் கூடாது!' என்பதற்காக மிகச் சிறிய நுழைவாயில் கொண்ட கருவறையுடன் தனிக் கோயில் கட்டினாராம்.

கால ஓட்டத்தில், அந்நியர்களின் ஆதிக்கம் வந்த போது கூட, கணக்கு விநாயகர் கோயிலுக்கும் பிரகதீஸ்வரர்

ஆலயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கைகொண்ட சோழபுரம்- பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை, உலக கலாசார சின்னமாக அறிவித்துள்ளது 'யுனெஸ்கோ' அமைப்பு. இத்தனை சிறப்புக்கும் அந்தக் கணக்கு விநாயகரே காரணமாகத் திகழ்ந்தார் என்றால் அவரது கீர்த்தியின் மகிமையை என்னவென்று சொல்வது?!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...