GuidePedia

0
வெற்றி தருவார் விஜய கணபதி!
கணபதியே சரணம்!


சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ள உள்ளகரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீவிஜய கணபதி ஆலயம். காஞ்சி மகா பெரியவாளின் அறிவுரைப்படி, சிறு குடிசையில் இருந்த கிழக்குப் பார்த்த விநாயகர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெற்குப் பார்த்த ஸ்ரீவிஜய கணபதியாக அருள்பாலிக்கத் துவங்கினார் என்கிறார்கள், பக்தர்கள்.

94-ம் வருடம் சாந்தானந்த சுவாமிகள் சொன்னதற்கு இணங்க, அன்று முதல் இன்றளவும் தினமும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது, இங்கே! ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, திருமால், ஸ்ரீஅனுமன் என அனைத்து தெய்வங்களின் பெயர்களுக்கு முன்னதாக 'விஜய’ எனும் திருநாமம் சூட்டியுள்ளனர்.

ஸ்ரீகணபதிக்கு சதுர்த்தி, ஸ்ரீகந்தக் கடவுளுக்கு கிருத்திகை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உத்திரம், ஸ்ரீவிஜயராகவ ஸ்வாமிக்கு புனர்வசு, ஸ்ரீதுர்காதேவிக்கு பௌர்ணமி, ஸ்ரீஅனுமனுக்கு மூலம் ஆகிய நட்சத்திர நாளில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீராம நவமி முடிந்த முதல் ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீராதா கல்யாணமும் சஷ்டி முடிந்த முதல் ஞாயிறு, ஸ்ரீவள்ளி கல்யாணமும் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது என்கிறார் கோயில் மேலாளர் சுப்ரமணியன்.

பெருமாள் சந்நிதி கொண்டிருக்கிற இந்த ஆலயத்தில், வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீவிஜய கணபதி எனும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை, ஸ்ரீவிசா கணபதி என்றே அழைக்கின்றனர், பக்தர்கள். கோயில் அமைந்து உள்ள தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர், வெளிநாட்டில் வேலை செய்பவராக இருப்பார். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகத்தை வழங்கக் கூடியவர் என்பதால் பிள்ளையாருக்கு, விசா கணபதி எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.

மாதத்தின் 4-ம் ஞாயிற்றுக்கிழமையில் ஏகாதச ருத்ர ஜபம் நடைபெறுகிறது. அதேபோல். ஸ்ரீகுமார கணபதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ரத்தினகிரி ஸ்ரீ பால முருகனடிமை, மகாதேவ மலை மகானந்த சித்தர், கி.வா.ஜ ஆகியோர், ஸ்ரீவிஜய கணபதியின் பேரருளைச் சிலாகித்துள்ளனர்.

விஜய கணபதியை கண்ணாரத் தரிசியுங்கள். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என நிம்மதியாக வாழ்வீர்கள்! ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!
கணபதியே சரணம்!


கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!

'முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!

வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள். 

'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.

'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.

விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!


விநாயகர் தரிசனம்! 
கோவை- புளியகுளத்தில் அருளும் ஸ்ரீமுந்தி விநாயகர், ஆசியாவிலேயே உயரமான பிள்ளையாராம். இவருடைய உயரம் சுமார் 19 அடி- 10 அங்குலம் (இதில் 3 அடி பீடமும் அடங்கும்); அகலம்- சுமார் 11 அடி. எடை சுமார் 190 டன். வலம்புரி விநாயகரான இவரைத் தரிசித்தால் திருமணத் தடைகள் நீங்குமாம்.

வேதாரண்யத்துக்கு மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் குரவப்புலம். இங்கே, லிங்க வடிவ ஆலயத்துக்குள் அருள்பாலிக்கும் ஸ்ரீசித்திஅரசு விநாயகர், நாம் சித்தத்தில் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றித் தரும் வள்ளலாம். இவரை பக்தர்களே பூஜிக்கலாம் என்பது சிறப்பு!

நாகப்பட்டினம்- ஸ்ரீகாக்கா பிள்ளையார் கோயில் (காக்கும் பிள்ளையார் என்பதே மருவி, காக்கா பிள்ளையார் என்றானதாம்!) சூரியன் வழிபட்டு புத்திரப் பேறு பெற்ற தலம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26-ஆம் தேதி, இங்கே ஸ்ரீவிநாயகருக்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.


மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஸ்ரீஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!

ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.

மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் ஸ்ரீபஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!

தாமரை மலரில் அமர்ந்த நிலையில்... வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் ஸ்ரீகற்பக விநாயகர்.

கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயி லில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, ஸ்ரீபச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

வெளிநாடுகளில் விநாயகர்...

ஜப்பானில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் தழுவிக் கொண்டிருப்பது போன்ற உருவில் உள்ள இரட்டை விநாயகர் சிலையை வணங்குகின்றனர். இந்த அபூர்வ சிலையை வழிபட்டால் நீண்ட காலம் வாழலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

கிரேக்க நாட்டுச் சாலைகளில் உள்ள கிலோமீட்டர் காட்டும் கற்கள், பிள்ளையார் வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டியாக இருந்து தங்களை விபத்தின்றிக் காப்பார் விநாயகர் என நம்புகிறார்கள் கிரேக்கர்கள்!

சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, 'ஸ்ரீவலஞ்சை விநாயகர்' என்கின்றனர்.

ஸ்ரீநவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.

விருத்தாசலம் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் கோயிலில், சுமார் 18 அடி ஆழத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்.

அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீவைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.

பாக்கு பிரசாதம்!

கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம்.

வழிபாடுகள் முடிந்ததும், பிரசாதமாக பாக்கு தரப்படுமாம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள், அடுத்த மூன்று வருடத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை. 

விநாயகரின் தேவியர்!

சித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

விநாயகரும் வழிபாடும்

ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரிபூரண பலன் தருவார் விநாயகர்.

மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும்.

புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.

வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார்.

உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார்.

வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார்.

கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.

மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

தத்துவ கணபதி!

கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் பொருள்கொள்ளலாம்!

பிள்ளையாரை அர்ச்சிக்க 21 இலைகள்!

விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலை) பிள்ளையாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள் ளருகம்புல், துளசி, வன்னி, நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்திக் கீரை.

திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஸ்ரீஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்!

திருவையாறு தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.

தஞ்சை- திருவையாறு சாலையில் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ளது திருவேதிக்குடி. இங்குள்ள ஸ்ரீவேத விநாயகர், வேதங்களை காதுகொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக் கிறார். இறைவன் அருளும் வேதங்களை இவர் செவி சாய்த்துக் கேட்பதாக ஐதீகம். எனவே இவரை, செவிசாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீமுக்குருணி விநாயகரின் விக்கிரகத் திருமேனி, திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது ஸ்ரீஅபிராமியம்மை சமேத ஸ்ரீஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது!

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.

திருவாரூர் கோயிலில் அருளும் ஸ்ரீஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.

விநாயகப்பெருமான் அம்மை-அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆந்திர மாநிலம்- ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் ஸ்ரீசைலத்துக்கு சென்றுவந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை 'ஸ்ரீசாட்சி கணபதி' என்கின்றனர்

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...