GuidePedia

0
கதை கதையாம்... கணபதியாம்!



நாயகர் என்றால் தலைவன் என்று பொருள். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத முதன்மை நிலையில் இருப்பவர் ஆதலால், பிள்ளையாரை 'விநாயகர்' என்று போற்றுகிறோம். திருப் பெயர் மட்டுமா? பிள்ளையாரைக் குறித்த புராணக் கதைகளும் அற்புதமானவை!

சகல பாவங்களையும் களைந்து, கோடானுகோடி புண்ணியத்தையும் சர்வ மங்கலங்களையும் அள்ளித் தரும் ஆனைமுகத்தானின் அருள்கதைகளை நாமும் படித்துப் பலன் பெறுவோமா?!

கச்சியப்ப சிவாச்சார்யரின்
கந்த புராணம் கூறும் கதை...

திருக்கயிலையில், பல்வேறு ஓவியங்கள் நிறைந்த அழகிய மண்டபம் ஒன்று இருந்தது. ஒருநாள் பரமசிவனும் பார்வதியும் அந்த மண்டபத்தைப் பார்வையிடச் சென்றனர். அங்கு சமஷ்டிப் பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரண்டு மந்திரங்களும் ஓவியமாக வரையப்பட்டிருந்தன. அவற்றை சிவனும், சக்தியும் தங்கள் அருட்கண்களால் நோக்கினர். அப்போது, நான்கு கரங்களுடனும் யானை முகத்துடனும் தோன்றிய குமாரன் ஒருவன் சிவ-சக்தியரை வணங்கி நின்றான். அவனை ஆசீர்வதித்து, சிவகணங்களுக்குத் தலைவராக இருக்கும்படி நியமித்தருளினார் ஈசன்.

சிவ குடும்பத்தில் எவரும் தாய் வயிற்றில் தோன்றிப் பிறப்பதில்லை. கணபதி, பிரணவத்திலிருந்து தோன்றினார்; முருகன், ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினார்; சிவசக்தி தம்பதியரின் சினத்திலிருந்து வீரபத்திரர் தோன்றினார் என்று விவரிக்கிறது கந்த புராணம்.

பிரும்மாண்ட புராணம் என்ன சொல்கிறது?

ஸ்ரீலலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர் புரியச் சென்றாள். அம்பிகையின் படைகளை வீரத்தால் வெல்வது அரிது என்று பண்டாசுரன் உணர்ந்தான். குறுக்கு வழியில் வெல்லத் தீர்மானித்தான்.

அசுரனின் தம்பியாகிய விசுக்கிரன் என்பவன், மாய மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவன். அவன், வெற்றிக்குத் தடை செய்யும் 'ஜயவிக்ன யந்த்ரம்' என்ற மந்திரத் தகட்டை உருவாக்கி, சக்தி சேனையின் முகாமில் தந்திரமாக ஒளித்து வைத்தான். இதனால், அம்பிகையின் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது; வெற்றி தடைப்பட்டது.

இந்த நிலையில் விசுக்கிரனின் சூழ்ச்சியை அறிந்த அம்பிகை, போர்ப் பாசறையில் காமேஸ்வரன் என்ற பெயருடன் எழுந்தருளியிருந்த சிவனாரை தன்னுடைய கண்களால் சற்றே நோக்கினாள். இறைவனும் தேவியை நோக்கினான். அந்த அருட்பார்வைகளின் சங்கமத்தால், 'மகா கணேசன்' தோன்றினார். யானை முகத்துடன் தோன்றிய மகா கணேசன், விசுக்கிரனின் மந்திரத் தகட்டைக் கண்டுபிடித்து, தனது துதிக்கையால் உடைத்துத் தூளாகச் செய்தார். பின்னர் அம்பிகைக்குத் தொடர்ந்து வெற்றிகள் கிட்டின.

சிவமகா புராணமோ, ஸ்ரீகணபதியை உமாதேவி படைத்தருளியதாகக் கூறுகிறது!

ஒருநாள்... ஜயை, விஜயை என்ற தன்னுடைய தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பார்வதிதேவி. அப்போது விஜயை, ''தேவி! சிவனாருக்குப் பணிவிடைகள் செய்திடப் பலரும் உள்ளனர். அதுபோல், தங்களுக்குப் பணிவிடை செய்ய... குறிப்பாக, காவல் பணியை மேற்கொள்ள ஒருவர் தேவை'' என்றாள். அப்போது, அந்தக் கருத்தைப் பார்வதிதேவி ஒரு பொருட்டாக எண்ணவில்லை. பிறிதொருநாள், பார்வதியாள் நீராடிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ஈசன் அங்கு வந்துவிட்டார். அதனால் பரபரப்பு அடைந்த பார்வதிதேவி, விஜயை கூறியபடி, தனக்கென ஒருவர் காவல் பணியில் இருத்தல் அவசியம் என்று உணர்ந்தாள்.

உடனே, சிவனாரைத் தியானித்து, தனது திருமேனியில் இருந்த நறுமணப் பொருட்களைத் திரட்டி ஒரு குமாரனைப் படைத்தாள். யானை முகத்துடன் தோன்றிய அந்தக் குமாரனுக்கு, 'கணன்' என்று பெயரிட்டாள். தேவியின் அந்தப்புரக் காவல் பணியில் இருந்த கணனின் ஆற்றலை அறிந்த ஈசன், அவரைக் கணங்களுக்குத் தலைவராக இருக்கச் செய்தார். அது முதல் கணர், கணபதி ஆனார் என்கிறது சிவமகாபுராணம்.

லிங்க புராணம் வேறு விதமாகச் சொல்கிறது!

தேவர்களின் உயர்வைக் கண்டு பொறாமை கொண்ட அசுரர்கள், தாங்களும் அத்தகைய உயர்வைப் பெற்று, தேவர்களை அடக்கியாள விரும்பினர். அதற்குரிய வரங்களைப் பெற, ஈசனை நோக்கித் தவமிருந்தனர். ஈசனும் அசுரர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்தருளினார். இதனால் ஆணவம் கொண்ட அசுரர்கள், தேவர்களைப் பலவாறு கொடுமைப்படுத்தினர். துன்பம் பொறுக்காத தேவர்கள் ஈசனைப் பணிந்து, அசுரர்கள் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகவும், அவர்களை அடக்கியாளவும் வல்லமை படைத்த ஒரு மகனைத் தோற்றுவிக்கும்படி வேண்டினர். அதன்படி, ஈசன் தனது ஓர் அம்சத்தை யானை முகமுடைய மகனாகப் படைத்தருளினான் என்று விவரிக்கிறது லிங்க புராணம்.

விக்னங்களைத் தடுத்தருள்பவர் விக்னேஸ்வரர் என்று சிறப்பிக்கிறது வராக புராணம்!

ஆதிகாலத்தில் முனிவர்களுக்குத் தக்க வழிகாட்டும் நூல்களோ ஆசான்களோ இல்லை. அவர்கள் நற்செயல்களை மட்டுமே செய்ய விரும்பினர். அப்போது, முனிவர்களின் செயல்களுக்கு வழிகாட்டத்தக்க ஒரு மகனைச் சிவபெருமான் தோற்றுவித்தார். ஈசனின் அருட் பார்வையிலிருந்து தோன்றிய மகன், முனிவர்கள் செய்த நற்செயல்கள் தொடரவும், தீய செயல்கள் தடைப்படவும் செய்தான். தீய செயல்களுக்குத் தடையை (விக்கினத்தை) ஏற்படுத்திய அந்தக் குமாரனே விக்னேஸ்வரன் ஆனார்.

ஈசன் தந்த காணிக்கை!


வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.

விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அருந்ததி படைத்த கொழுக்கட்டை

ஒருமுறை, வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவரது ஆஸ்ரமத்துக்கு எழுந்தருளினார் விநாயகர். அவருக்கு ஏற்ற புதிய நிவேதனம் ஒன்றைச் செய்ய விரும்பினாள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.அருந்ததி உருவாக்கிய புதிய, இனிய மோதகத்தை கணபதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...