GuidePedia

0

திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள்.

சோமவார விரதம் : 

கார்த்திகை மாத முதல் சோமவாம் தொடங்கிச் சோமவாரம் தோறும் சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம் அது கூடாதவர் ஒரு பொழுது சாப்பிடலாம். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் சாப்பிடலாம். இவ்விரதம் வாழ்நாள் முழுவதும் அல்லது பன்னிரண்டு வருஷகாலமாயினும் மூன்று வருஷ காலமாயினும் ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இருக்க வேண்டும். 

திருவாதிரை விரதம் : 

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சிவனை குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது மிகவும் நல்லது. 

உமாமகேஸ்வர விரதம் :  

கார்த்திகை மாதத்து பவுர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிடலாம். இரவிலே பணியாரம் பழம் உட்கொள்ளலாம். 

சிவராத்திரி விரதம் : 

மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசம் செய்து நான்கு ஜமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் பூசையும் அவ்வக் காலத்தில் செய்வது நல்லது. சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். 

சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் செய்தல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் சாப்பிடுவது மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பலகாரம் உண்பது அதர்மம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும். 

நான்கு யாமமும் நித்திரையொழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் தூங்காமல் இருத்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதம் அனைவராலும் அவசியம் இருக்க வேண்டும். 

கேதார கவுரி விரதம் : 

புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். 

இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு வகை சாப்பாடு செய்து சாப்பிட்டு இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பலகாரம் உட்கொள்ள வேண்டும். 

பிரதோஷ விரதம் : 

சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். 

இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும். பகலிலே சாப்பிடக்கூடாது. சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே குறித்து சிவபூசை பண்ணித் திருக்கோயில் சென்று சிவதரிசனம் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் சாப்பிட வேண்டும். 

பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இந்த எட்டும் செய்ய கூடாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து வந்தால் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு சிறந்த காலம். 

தேவி விரதம் சுக்கிரவார விரதம் : 

சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் தொடங்கிச் சுக்கிர வாரம் தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிட வேண்டும். 

நவராத்திரி விரதம் : 

புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பலகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசம் செய்தல் வேண்டும். 

விநாயக சதுர்த்தி :  

ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனம் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்க கூடாது. 

விநாயக சஷ்டி விரதம் :  

கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டி வரை இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனம் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசம் செய்தல் வேண்டும். 

கார்த்திகை விரதம் :  

கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளலாம். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் இருத்தல் வேண்டும். க

ந்த சஷ்டி விரதம் : 

ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது முடியாதவர் முதல் 5 நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசம் செய்ய வேண்டும். 

இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுட்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் ஏதாவது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம். 

பிரதோஷ விரத நாட்கள் : 

ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசி திதி 26 நாழிகைகளுக்கு மேல் 32 நாழிகை வரை வியாபித்திருக்கும் நாளே பிரதோஷ நாள் ஆகும் என்பதை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம்.சதுர்த்தசி வியாபித்திருந்தால், கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி தினத்திலும், சுக்கில பட்சத்தில் துவாதசி தினத்திலும் பிரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...