GuidePedia

0

சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும்

ஸ்ரீசரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம். ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். (விக்கிரகம் என்றால் அதற்கு அபிஷேகம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம்). சரஸ்வதிக்கு உகந்தவை என்று சொல்லப்பட்ட வெள்ளைத் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூ ஆகியவற்றை சரஸ்வதிக்கு அணிவிக்கலாம்.
 இந்தப் பூக்களையே அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம். பழ வகைகளுடன், அவல், பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வைக்கலாம். கடலை சுண்டல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், பால் சாதம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் வைத்து நிவேதனம் செய்யலாம்.

மேலும், புத்தகங்கள், எழுதுகோல்கள், இதர கல்வி உபகரணங்கள், பயிற்சிகளுக்கான சாதனங்கள், கலைப்படைப்புகள், கருவிகள், தொழிலுக்கு உரிய ஆயுதங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும். (கன ரகக் கருவிகளையும் இயந்திரங்களையும் அவை இருக்குமிடத்திலேயே சுத்தப்படுத்தி, சந்தனம் தெளித்து, மஞ்சள், குங்குமம் வைத்துத் தூப தீபம் காட்டலாம்.) ஜீவனத்துக்கு ஆதாரமான எந்தப் பொருட்களையும் படையலில் வைத்து ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபடலாம். பூஜை முடியும் போது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் எலுமிச்சம் பழங்களைச் சுற்றி அறுத்துக் குங்குமம் தடவிப் பிழிவது, கற்பூரம் ஏற்றப்பட்ட தேங்காயையும் குங்குமம் திணிக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயையும் சுற்றி வாயிலில் போட்டு உடைப்பது போன்ற திருஷ்டிக் கழிப்புகளையும் தவறாமல் செய்ய வேண்டும்.
 ஆயுத பூஜை செய்ய உகந்த நேரங்கள்………
 1. அதிகாலை 5.03 மணி முதல் 6.02 வரை.
 2. காலை 10.34 மணி முதல் 11.03 வரை.
 3. மாலை 4.34 மணி முதல் 6.03 வரை.
 4. இரவு 7.33 மணி முதல் 8.03 வரை.
 மேலே குறிப்பிட்டபடி சரஸ்வதி பூஜை வழிபாடுகளை நடத்தலாம். காய்கறிகளின் கூட்டு, பொரியல், வறுவல், சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயாசம் என்று உணவு தயாரித்துப் படையல் இட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள், அவ்விதமே உணவுகளை படைத்து நிவேதனம் செய்து வழிபடலாம். நவராத்திரி விரதத்தை முறையாக ஒன்பது நாட்களின் இரவிலும் கடைப்பிடித்து வருபவர்கள், சரஸ்வதி பூஜை தினத்தில் நவமி திதி உள்ள இரவு வேலையிலும் பூஜை செய்து நவராத்திரி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
 சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி ஏதாவது ஒருவேளை பூஜையை விரிவாகவும், ஏதாவது ஒருவேளை பூஜையைச் சுருக்கமாகவும் செய்து கொள்ளலாம். அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து, காலை அல்லது மாலையில் ஒரே படையலாக இட்டுப் பூஜை செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒன்பது நாட்களிலும் வீட்டில் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை தினத்தின் மாலையிலோ, இரவிலோ வழிபாடு நடத்தாமல் விடக்கூடாது! கட்டாயமாக மாலை அல்லது இரவில் வழிபாடுகள் நடத்தி, ஒன்பதாம் நாள் இரவோடு நவராத்திரி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
 கொலுவுக்கு வருகை தரும் பெண்மணிகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வாழைப்பழம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்குவது உகந்தது. வசதி படைத்தவர்கள், பிளாஸ்டிக், மரம் அல்லது வெள்ளியால் செய்த குங்குமச் சிமிழ்கள், ரவிக்கைத் துணிகள், சேலைகள், கலைப் பொருட்கள், தெய்வீகப் படங்கள், சிறிய விக்கிரகங்கள், இறைவழிபாட்டுப் பாடல்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக கொடுக்கலாம்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...