திண்டுக்கல்லில் அதிசய விநாயகர்: பக்தர்கள் வழிபாடு
திண்டுக்கல்லில் இன்று பப்பாளி மரத்தில் அதிசய விநாயகர் தென்பட்டதால் பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் செபஸ்டின் என்ற மணி. இவரது வீட்டிற்கு அருகே சொந்த தேவைக்காக பப்பாளி மற்றும் முருங்கை மரம் வைத்துள்ளார்.
இன்று காலை பப்பாளி மரத்தில் வீட்டு தேவைக்காக பப்பாளி ஒன்றை பறிக்க முயன்றார். அது சாதாரண பப்பாளியை போல் இல்லாமல் மாறுபட்ட வடிவத்தில் இருந்தது. பறித்து கையில் எடுத்து பார்த்த மணி அந்த பழம் விநாயகர் வடிவத்தில் 2 பெரிய காதுகள், நீள தும்பிக்கை, 2 கண் போன்ற தோற்றத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தெரிய வரவே அப்பகுதி மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் இது விநாயகர் வடிவமேதான். இப்பகுதிக்கு ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது.
அதனால்தான் விநாயகர் இங்கு தோற்றி உள்ளார் என கூறி அந்த மரத்தின் அருகிலேயே சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு அதன்மேல் பூக்களை பரப்பினர். மேலும் ஒரு தட்டில் அரிசியை கொட்டி அதன்மீது அந்த அதிசய விநாயகரை வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, முத்தழகுபட்டியில் பிரசித்திபெற்ற செபஸ்தியார் கோவில் இருந்தாலும் இங்கு அனைத்து தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது இப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவோம். பின்னர் 3–வது நாளில் அந்த சிலை கோட்டை குளத்தில் கரைக்கப்படும். ஆனால் இந்த வருடம் விநாயகர் சிலை வைக்க வில்லை. அதனை எங்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த அதிசய விநாயகர் தோன்றி உள்ளதாக நினைக்கிறோம்.
இந்த விநாயகரை இன்று மாலை இங்கு வைத்து வழிபாடு நடத்திவிட்டு மாலையில் 108 விநாயகர் கோவிலில் விநாயகருக்கே காணிக்கையாக வழங்க உள்ளோம் என்று தெரிவித்தனர். அதிசய விநாயகரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment