GuidePedia

0

அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை !

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அற்புத அதிசயங்களை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மலைகளில் காணலாம். அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர், தேரையார் போன்ற சித்தர்கள் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக திருநெல்வேலி விளங்குகிறது. இதில், ஒன்று 'அத்ரிமலை' எனும் மூலிகை மலை. இதைத்தான், 'பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்' என பாடினர். 'இம்மூலிகை தென்றல் உடலில் பட்டாலே போதும் நோய்கள் விலகியோடும்,' என்பது நம்பிக்கை.
இம்மலையில் அத்ரிமகரிஷி வாசம் செய்தார். சீடர்கள் தியானம் செய்த இடம், மூலிகை மருந்து தயாரித்த இடம் போன்றவை காலத்தால் அழியாத காவியம் போல் இன்றளவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இயற்கை அன்னையையும் காக்கும் 'சித்து விளையாட்டு' சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம், என்பது அனுபவத்தால் வெளிப்பட்ட வார்த்தைகள்.
இம்மலைக்கு செல்வதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். கடனா அணை, முண்டந்துறை வன காப்பகம் என எண்ணற்ற ஸ்தலங்களை
உள்ளடக்கியது. பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை (85 அடி உயரம்) அடைய வேண்டும் (மினி பஸ் வசதி உள்ளது). அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீ., துாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த
அடிச்சுவடுகளை காணலாம். இப்படி... ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம்' (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) அமைந்துள்ளது.
கோரக்க சித்தருக்காக... அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு, 'சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது' என்பது நிதர்சனம்.

பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.
கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.
எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.
அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.
நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.
அப்படி ஒரு சிறப்பம்சம்.
சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.
ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.
இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.
இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.
அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [
அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.
அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.
அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.
பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.
ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது.
அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...