GuidePedia

0


ஜீவாத்மாவுக்கு அறிவு உண்டா ? 


அறிவு வேறு ஆத்மா வேறு அல்ல. பரமாத்மா என்பது பேரறிவு. நாம் பெற்றிருப்பது சிற்றறிவு. பரமாத்மாவே நாம் என்கிற பொழுது, நாம் பெற்றிருப்பது எப்படி சிற்றறிவு என்கிறீர்கள் ? என்று கேட்டால், எல்லையற்ற அகண்டாகரமெங்கும் நீக்கமற நிறைந்து நிற்கிற அந்தப் பேரறிவின் மிக நுண்ணிய பகுதியாகவே நம் அறிவு விளங்குகிறது எனவே அது சிற்றறிவு. மேலும், இந்த உடல் எடுத்த காரணத்தால், இந்திரியங்கள் வசப்பட்ட மனதின் காரணமாக வினைகளைப் புரிந்து தன்னறிவு நிலையை இழந்து நிற்பதாலும் இது சிற்றறிவு என்று இயம்பப்படுகிறது. நம் யதார்த்த சொரூபம் என்பது பேரறிவு நிலை என்றாலும், ஜீவபோதம் காரணமாக நாம் நம் யதார்த்தத்தை மறந்து நிற்பதால், நம் அறிவு சிற்றறிவு என்று சொல்லப்படுகிறது. எந்த விதப் வினைப் பதிவுகளும் அற்றது பேரறிவு. அதுவே நம் உயிராக, சித்தமாக விளங்குகிறது. நாம் புரிகின்ற வினைப் பதிவுகள் நிமித்தம் அது பேரறிவில் நின்று மாறுபட்டுத் திகழ்கிறது. வினைப் பதிவுகள் இருக்கும் வரை ஜீவபோதமும் இருக்கும். ஜீவ போதம் இருக்கும் வரை அஞ்ஞானமும் இருக்கும். அஞ்ஞானம் இருக்கும் வரை ஜீவாத்மா என்கிற சுய அறிவற்ற நிலையும் இருக்கும்.

எனவேதான் பரமாத்மாவை சூரியன் என்றும், ஜீவாத்மாவை சந்திரன் என்றும் சொல்வார்கள். அதாவது சூரியன் ஆத்மகாரகன். சந்திரன் மனோகாரகன்(மதி) என்பார்கள். சந்திரனுக்குச் சுய ஒளி கிடையாது. அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுதான் பிரகாசிக்கிறது. அது போலவே ஜீவாத்மாக்களும் ஆத்மாவிடமிருந்து ஒளியை கிரகிக்கிற அளவு பிரகாசிக்கின்றன. சந்திரன் ஒருபுறம் பிரகாசத்தைப் பெற்றுப் பிரகாசிப்பதும், மறுபுறம் ஒளியை இழப்பதுமாக இருப்பது போல ஜீவர்களும் ஜீவபோதம் இருக்கும் வரை அறிவு நிலையிலும், அஞ்ஞான நிலையிலும் மாறி மாறி விளங்குகிறார்கள். இதனால், மீண்டும் மீண்டும் ஜீவர்கள் தவறு செய்யும் நிலை வாய்த்து விடுகிறது. அதன் விளைவாகத் துன்பம் ஏற்படுகிறது. எனவேதான் நாம் படுகின்ற துன்பங்களுக்கான காரணம் என்ன கேள்வியை இடை விடாமல் மனிதன் கேட்டுக் கொண்டே இருப்பதோடு, அதிலிருந்து விடுபட ஏதாவது ஒரு உத்தியைக் கண்டுபிடிக்கிறான். அந்த யுக்தி தற்காலிகமாகத் துன்பத்திலிருந்து விடுபட உபயோகமாக இருந்தாலும், வேறு விதமானத் துன்பத்தைத் தந்து விடுகிறது. எல்லோரும் சொல்வார்கள் உயிர்கள் அனைத்தும் ஆனந்தத்தைத் தேடுகின்றன என்று. கூர்ந்து கவனித்தால் அவை ஆனந்தத்தைத் தேடுவதை விடத் துன்பங்களில் இருந்து விடுபடவே விரும்புகின்றன என்பது விளங்கும்.

துன்பம் எதனால் வருகின்றது ? என்ற கேள்வி மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. இன்றும் அந்தக் கேள்வி இருக்கின்றது. இனியும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் இருக்கும். இது என்ன இப்படிப் பேசுகிறீர்கள் ? துன்பங்களில் இருந்து விடுபடவே முடியாதா ? ஏன் முடியாது ? நாம் நம் யதார்த்த சொரூபத்தை அறிவை அடைந்து விட்டால், துன்பங்களில் இருந்து விடுபட முடியும். அப்படி விடுபடுவதையே விடுதலை, வீடுபேறு, முக்தி என்றெல்லாம் சொல்கிறார்கள். மாறாக அஞ்ஞானத்தில் திகழும் வரை மனிதன் குற்றங்களைச் செய்வதும், அதன் விளைவாகத் துன்பங்களை அனுபவிப்பதுமாகவே இருப்பான். இதைத்தான் அறிவை அறிவால் அறிவதே ஞானம் என்றும், தன்னை அறிவது என்றும் சொல்கிறார்கள். எனவே ஜீவ போதம் இருக்கும் வரை அஞ்ஞானம் இருக்கும். அது இருக்கும் வரை ஜீவன் எல்லா கர்மாவுக்கும் தன்னைக் கர்த்தாவாக எண்ணும். இதனால் வினைகள் பெருகும். மாறாக அறிவு சொரூபமான ஆத்மாவை நெருங்கும் அளவு அஞ்ஞானம் விலகும். குற்றங்கள் குறையும். துன்பங்கள் அற்றுப் போகும். தூய நீரானது மண்ணில் விழுந்து மாசுபடுகின்றது. பிறகு ஆறாக ஓடிக் கடலில் கலந்து விடுகின்றது. அதன் பிறகு ஆவியாகி மீண்டும் தூய நீராவியாகி மேகமாக வானத்தில் மிதக்கிறது. அது போலவே ஜீவனும் பரம்பொருளின் பேரறிவு நிலையில் இருந்து சிற்றறிவு நிலைக்கு வந்து, வாழ்க்கை எனும் ஆற்றில் ஓடி, ஞானம் எனும் கடலில் கலந்து, தன் ஜீவபோதத்தை களைந்து மீண்டும் பரம்பொருள் நிலையை, பேரறிவு நிலையை அடைகின்றது. எனவே அறிவு வேறு ஆத்மா வேறு அல்ல. இதை அறிந்தவர்களுக்குத் துன்பமேயில்லை.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...