GuidePedia
Latest News

0
                                           
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
சயம் என்றால் தேய்தல் என்று பொருள்.
அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.
சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.
அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.
மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.
பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது.
அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது.
அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அட்சய திருதியை நாளில் புதன்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு.
அப்படி வரும் நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் பலகோடி மடங்கு பலன் தரும்.
அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள்.
அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள்.
இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். (அதனுள் காசுகளைப் போடுவது, காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.)
கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள்.
கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள்.
லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள்.
பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள்.
விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும்.
அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள்.
அல்லது கேளுங்கள்.
குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.
பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள்.
அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.
உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி,
உடல்நலத்தைப் பொறுத்தது.
கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.
பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:
அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது,
தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்: இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.
ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது.
அதற்காக மனம் தளர வேண்டாம்.
நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே.
அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.
எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும்.
அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.
வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர்.
ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.
அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.
அட்சயதிருதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமன்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.
அட்சய தினத்தன்று ஆலிலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து, தலையணை அடியில் வைத்தால், நோய்களின் கடுமை குறையும்.
குழந்தைகளின் படுக்கை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும், பயங்கள் போகும். பூஜை அறையில் அல்லது வியாபார தலத்தில் வைத்திருந்தால் எதிரிபயம் விலகும்.
இந்த நாளில், குபேரபூஜை, லட்சுமி நாராயண பூஜை, சிவ பூஜை, மகாலட்சுமி பூஜை போன்றவற்றைச் செய்வது, நற்பலன்களைத் தரும்.
அட்சய திருதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிக மிகச் சிறந்தது.
இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பல மடங்கு அதிக நன்மை தரும்.
பித்ருகளை வணங்கவும், அவர்களுக்கு உரிய நீத்தார் கடன்களை செய்யவும் உரிய நாள் இது.
இதனால் கிட்டும் முன்னோரின் ஆசி மூவாயிரம் மடங்கு நற்பலனைத் தரும் என்பது ஐதிகம்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...