அழகர் விழாவுக்கு 1000 வயது!
அந்த மலை கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16,838 ஏக்கர் பரப்பளவில், பசுமை மிக்க சோலைகளாய் விரிந்து, ஆண்டு முழுவதும் ரம்யமாய் காட்சியளிக்கிறது. சங்க இலக்கியமான பரிபாடலில் இளம் பெருவழுதி, இத்தலத்தை " இருங்குன்றம்' என்றும், திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் "பழமுதிர்சோலை' என்றும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "திருமால் குன்றம்' என்றும், மகாபாரதத்தில் வியாசமுனிவர், "விருஷபாத்ரி' என்றும், ஆழ்வார்களின் பாசுரங்களில் "திருமாலிருஞ்சோலை' என்றும் வெவ்வேறு பெயர்களால் பாடி வைக்கப்பட்ட பெருமை இம்மலைக்கு உண்டு.
இதன் உச்சியில் "இராக்காயி அம்மன்' கோயில் உள்ளது. இங்கு உற்பத்தி ஆகும் நதி "சிலம்பாறு' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இதனை, "நூபுர கங்கை' என்று பாடி வைத்தார். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் சிறப்புமிக்க தலமாக இந்த அழகர்கோயில் திகழ்ந்துவருகிறது.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இம்மலையில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்ததற்குச் சான்றாக, இம்மலையின் கீழ்க்கோடியில் தெற்குச் சரிவில் இயற்கையாக அமைந்திருக்கும் குகை தளத்தில் கல் படுக்கைகளும், "தமிழ் பிராமி' எழுத்தில் அமைந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா ஒன்பது நாட்கள் "சித்ரா பௌர்ணமி விழா' எனக் கொண்டாடப்படுகிறது. ஊர் முழுக்க வேடிக்கை, பந்தல், ஆட்டம், பாட்டம் என இந்த விழாவையொட்டி ஊரே களைகட்டியிருக்கும். இதனை ராஜராஜ சோழன் (காலம் கி.பி. 1011) கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
அழகர் கோயில் ஏழு பிராகாரங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய அளவிலானது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள முதல் பிராகார மேற்குச் சுவரின் வெளிப்பக்கமாகக் காணப்படும் ஒரு பழைமையான கல்வெட்டு பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (காலம் கி.பி.1192) காலத்தைச் சேர்ந்ததாகும்.
ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சித்ரா பௌர்ணமி தினத்தன்று அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. மதுரையில் நாயக்க வம்ச ஆட்சி வரும் வரை அழகர் கோயிலிலிருந்து கிளம்பும் சுந்தர்ராஜப் பெருமாள் அலங்காநல்லூர், சம்பகுளம், வயலூர், விட்டங்குளம் வழியாக தேனூர் சென்று அங்குள்ள வைகையாற்றில் எழுந்தருள்வதும், பின்னர் அங்கிருந்து வண்டியூர் சென்று தங்கியிருந்து அழகர் மலைக்குத் திரும்புவதுமே தொன்று தொட்டு வரும் வழக்கமாக நீடித்திருந்தது.
மேலும், மதுரை மீனாட்சி- சொக்கநாதர் திருக்கல்யாண வைபவமும், அதனையடுத்து தேரோட்டமும் காலம் காலமாக மாசிமாதத்தில்தான் நடைபெற்று வந்தன. தைமாதம் மக நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி மாசி மகவிழா 48 நாட்கள் நடைபெறும். திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை இந்த விழாவின்போதுதான் மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நிகழ்ந்தன.
இந்த இருவிழாக்களும் முதன்முதலாக மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் (காலம் கி.பி.1623 - 1659) மாற்றி அமைக்கப்பட்டு சைவ, வைணவ விழாக்கள் ஒன்றாகச் சங்கமித்து ஒற்றுமை வேரூன்ற வழிவகுக்கப்பட்டது. அதன்படி தொன்றுதொட்டு மாசிமாதம் நடந்து வந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் சித்திரை மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. அதுபோல கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக தேனூர் செல்வதை மாற்றி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மூணுமாவடி,தல்லாகுளம், ஆழ்வார்புரம் வழியாக வைகையாற்றில் இறங்கும் விழாவாகப் பயணப்பாதை மாற்றியமைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இவ்விழாக்கள் ஒருங்கிணைந்த "சித்திரைத் திருவிழா'வாக மதுரை மாநகரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுந்தர்ராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படும் முன்னரே அழகர் கோயிலில் திருவிழா துவங்கிவிடும். அதன் தொடர்ச்சியாக, நான்காம் திருவிழா நாளான்று கொண்டப்ப நாயக்கன் மண்டபத்திலிருந்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்படுவார்.
வைகையில் இறங்குவதற்கு முன்பும், பின்பும் ஏராளமான திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து தரிசனம் தந்த பின் ஒன்பதாம் திருவிழா நாளான்று மறுபடியும் மலைக்கு அழகர் திரும்பி விடுவார்.
வழக்கம் போல், இந்த ஆண்டும் எதிர்வரும் 14.05.2014 ஆம் நாள் புதன்கிழமை சித்திரை பௌர்ணமி தினத்தில் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் காலை இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வரை வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று அழகரின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்ந்திருப்பர்.
இராஜகோபுர வாசலில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சந்நிதானம் உள்ளது. இவரே அழகரின் காவல் தெய்வம். இந்த சுவாமிக்கு உருவ வழிபாடு என தனியாக இல்லாமல், கோபுர வாசல் நிலைக்கதவுகளையே சந்தனம் சாத்தி வழிபட்டுவருகின்றனர். இந்த சந்நிதியில் பொய் சாட்சியம் சொல்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இதனால் இவ் வட்டாரத்தில் பல சிக்கலான வழக்குகளைக்கூட இந்த சந்நிதி முன்பு பேசித் தீர்த்துக் கொள்கின்றனர்.
கோயில் கருவறை பிரணவ வடிவில் வட்ட வடிவில் எழிலான கோலத்தில் அமைந்துள்ளதை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருவறையைச் சுற்றி ஏழு கல் சாளரங்கள் அமைத்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் அதி அற்புதமான சிற்ப வேலைப்பாடமைந்த கலைச்சின்னங்களாகக் காட்சி அளிக்கின்றன.
கருவறையை அடுத்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த மகா மண்டபம் ""முனையதரையன் மண்டபம்'' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இம் மண்டப சிற்ப வேலைப்பாடுகள் காலங்கள் கடந்தும் பேர் சொல்லி நிற்கும் நுட்பமானவை.
மூன்றாம் பிரகார திருப்பணிகள் திருமலை நாயக்கர் (காலம் கி.பி. 1623 - 1659) காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. அவரது காலத்தில் திருப்பணி நடைபெறும் இடங்களில் தவறாமல் அவரது முழு உருவச் சிலையை தமது தேவியருடன் அமைக்கிற வழக்கம் அவரால் கடைப்பிடிக்கப்பட்ட மரபாகும். அதன்படி இப்பிரகாரத்தில் நான்கு இடங்களில் அவரது உருவச் சிலைகள் அமைந்துள்ளன. அழகர் கோயிலின் கட்டடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் உலகத் தரத்தில் அமைந்தவை.
Post a Comment