GuidePedia

0
வார நாட்களில் 5-ம் நாள் வியாழன் ஆகும். வடமொழியில் குருவாரம் எனப்படும். தமிழில் `பொன்னன்' என்றழைக்கப்படும் தேவகுருவான வியாழன், மஞ்சள் நிறமான தோற்றத்தை உடையது. ஜோதிட ரீதியில் `குரு பார்க்க கோடி நன்மை' என்ற வழக்கு மிகவும் பிரபலமானது. 
குரு பகவானுக்கு உகந்த மவுன விரதம்
குரு, முதல் தர சுபக்கிரகமாக போற்றப்படக் காரணம், ஜாதக ரீதியான பல்வேறு தோஷ அமைப்புகளை ஏற்படுத்தும் கிரகங்கள், ராசிகள், கிரகக் கூட்டணிகள், அசுப ஸ்தானங்கள் ஆகியவற்றை தமது பார்வை பலத்தால் நன்மை தரும்படி செய்து விடுவதேயாகும்.

ஆங்கிலத்தில் இது ஜுபிடர் (JUPITER) எனப்படும். மனித முயற்சிகள் தத்தமது பயன்பாட்டு அளவு முறைகளுக்கேற்ற விளைவுகளை நிச்சயம் உண்டாக்கும். இருப்பினும் முயற்சிக்கும் அனைவருக்கும் வெற்றிமாலை கிடைப்பது இல்லை. 

சுய முயற்சிக்கும், வெற்றிக்கும் உள்ள இடைவெளி அல்லது இரண்டையும் இணைக்கும் ஒரு மையப்புள்ளி எது என்ற வினாவிற்கு `அதிர்ஷ்டம்` என்ற விடை வருகிறது. ஒருவருக்கு அந்த அதிர்ஷ்ட நிலையின் அளவீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்வது பிர கஸ்பதியான குருவே. 

சர்வ சாஸ்த்ர ஞானம், பொருளாதார விருத்தி, ஒருவருக்கு அமையும் சந்தான பாக்கியங்கள், குருவின் ஆசீர்வாதங்கள் (அதாவது ஆன்மிக குரு) தான தர்மங்கள், தியானம், யோகம், வழிபாடுகள், அரசியல் தலைவர்கள், அமைப்பு ரீதியான தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், ஆன்மிகம் சார்ந்த அமைப்புகளை வழிநடத்தும் துறவியர் பெருமக்கள் ஆகிய பல்வேறு விஷயங்களை தேவ குருவான வியாழ பகவான் தமது நிலைக்கேற்ப வெளிப்படுத்துவார். 

கபம் சம்பந்தப்பட்ட நோய்களையும், வயிறு சம்பந்தமான நோய்களையும் குரு குறிப்பிடுவார். ஒருவரது குழந்தைப்பேறு தாமதமான காரணங்களையும் குருவே குறிப்பிடுவார். பொருளாதார உயர்வு, பிறர் நம்மை மதிக்கும் நிலை, புத்தியின் தெளிவு ஆகிய பல்வேறு விஷயங்களில் அவரது பங்களிப்பு பெருமளவு உண்டு. 

குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும். 

தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள், அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம். 

ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம். 

அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில் மவுன விரதம் இருப்பது மிகவும் சிறந்ததாகும். 

குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின் ஆசிகள் ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம். 

முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும். அதன்மூலம் கிடைக்கும் ஆசீர்வாத பலம் விலைமதிப்பற்ற சொத்தாகும். 

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...