GuidePedia

0
சித்தர் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் 
பாடகச்சேரி சுவாமிகள் என மக்களால் அழைக்கப்பட்ட பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் 1876 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பொள்ளாச்சி வட்டம் மஞ்சம்பாளையத்தில் கந்தசாமி - அர்த்தநாரி இணையர்க்கு மகவாகப் பிறந்தார். இவரது பெற்றோர் ஆந்திரத்தில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு வந்தேறியவர். அவர் சங்கம வீரசைவர் ஆதலின் இவரது தாய்மொழி தெலுங்கு. பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்து வீட்டைவிட்டு வெளியேறியவர். இவருக்கு கருநாடக மாநில பெல்லாரியைச் சேர்ந்த எரிதாதா சுவாமிகளோடு தொடர்பு ஏற்பட்டு அவரது மாணாக்கர் ஆயினார்
ஆன்மீக ஆசான் எரிதாதா பற்றிய சிறு குறிப்பு  
எரிதாதாவின் பெற்றோரும் பிறந்தகமும் யாதென்று தெரியவில்லை. அதை அவர் யாரிடமும் சொல்லியதில்லை. அவர் கன்னடத்தில் பேசுபவர். மக்கள் அவரை வீரசைவர் என்று கருதினர். காட்சிக்கு ஒரு பித்தரைப்போல் தோன்றும் இவர் ஆந்திராவின் சிற்றூர தோறும் திரிந்தபடி வழியே காணும் இறந்த பறவைகள், கன்றுகள் ஆகியனவற்றை உயிர்ப்பிப்பது, கொல்லும் காலரா நோயை கிராமம் முழுதிருந்தும் ஒழிப்பது ஆகிய இறும்பூதுகளைச் செய்துவந்தார். அப்போது அவருக்கு அகவை 70 இருக்கும். அவ்வாறு வருகின்ற வழியில் 1897 இல் செள்ளக்குறுக்கி கிராமத்திற்கு வந்து அங்கு 1922 இல் தமது 100ஆம் அகவையில் ஜீவசமாதி அடையும் வரையில் 25 ஆண்டுகள் தங்கி வாழ்ந்தார். குண்டக்கல்லில் இருந்து அரப்பள்ளி செல்லும் வழியில் வீராபுரம் இரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் கருநாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது தான் இந்த செள்ளக்குறுக்கி. இன்றும் மக்கள் இவர் தன்னை காட்டிக்கொள்ளாத வடிவில் உயிருடன் இருந்து விந்தைகள் புரிந்து தம் பக்தர்கள் குறைகளைத் தீர்ப்பதாக நம்புகின்றனர். எரிதாதா சுவாமிகளின் நினைவில் பெரிய மடம் ஒன்று அங்கு நிறுவப்பட்டுள்ளது. 
இராமலிங்கர் பாடகச்சேரி வருகை 
தன் குரு எரிதாதாவின் ஆணைக்கிணங்கி இளம் அகவையிலேயே இராமலிங்க சுவாமிகள் ஆந்திரத்தில் இருந்து தெற்கே வந்தார். கும்பகோணப் பகுதியில் உள்ள சில கிராமங்களில் ஆடையின்றி அம்மணராகவே திரிந்து வாழ்ந்தார். பாடகச்சேரிக்கு பக்கத்தில் அமைந்திருந்த பட்டம் என்ற சிற்றூரில் ஆழ்ந்த ஊழ்கத்தில் (தியானத்தில்) ஈடுபட்டார். அங்கு பெருநிலக்கிழார் கிளாக்குடையார் குடுமபத்தவரின் மாடுகளை மேய்க்கும் பொறுப்பினை ஏற்றார். 
தமது 12 ஆம் அகவையில் வடலூர் இராமலிங்க சுவாமிகளிடம் ஞான உபதேசம் பெற்றார் என்பது அவர் எழுது வைத்த உயில் ஒன்றில் இவரால் பதியப்பட்டுள்ளது. இவர் பட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது நவக்கண்ட யோகம் பழகினார். (நவக்கண்ட யோகம் என்பது உடலை ஒன்பது கூறுகளாகப் பகுத்து ஓகத்தில் ஈடுபடுவதாகும்). இதை ஒரு நாள் மாட்டின் உரிமையாளர் ஒருவர் பார்த்துப் பதறிப் போய் ஊராரிடம் தெரியப்படுத்தினார். அதன் பின் இவரை தொடர்ந்து கவனித்த ஊர் மக்கள் இவர் ஊழ்கத்தில் ஈடுபடுவதை பார்த்தனர். இவர் ஒரு சித்தர் என்பதை உணர்ந்து கொண்டனர். இதனால் பாடகச்சேரியைச் சேர்ந்த பெரியோர்கள் ஒரு கொட்டகை அமைத்து அதில் வந்து  தங்கும்படி அழைத்தனர். அதை ஏற்று இவர் மிகப்பல ஆண்டுகள் பாடகச்சேரியிலேயே  தங்கலானார்.      
தொடக்கத்தில் இவர் மூலிகை மருந்துகள் கொடுத்து நோயுற்ற ஏழைகளுக்கு பண்டுவம் செய்து அவர்களிடையே நன்கு அறிமுகமானார். செல்வர்களின் இன்னல்களைப் போக்கி அவர்களை கொரல்லும் நோயின் பிடியிலிருந்து மீட்டு அவர்களது அன்பிற்கு ஆட்பட்டார். இச்செல்வர்களின் வரையறை இல்லா நிதிக்கொடையாலும் ஒத்துழைப்பாலும் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தானச்சோறு (அன்னதானம்) வழங்கினார். கோவில்களைப் புதுப்பிக்கும் பணியையும் மேற்கொண்டார்.
கும்பகோண மகாமகத்தின் போது 1920 மற்றும் 1932 இல் ஒரு இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தானச்சோற்றுக்கு ஏற்பாடு செய்து அதை திட்டமிட்டபடியே மிக எளிதாக நிகழ்த்தினார். நூற்றுக்கணக்கான சமையலர்கள் ஒரு வாரகாலம் தங்குதடையின்றி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சோறு ஆக்கினர். இவர் 1933 வரை பாடகச்சேரியிலேயே தங்கியபடி பிற இடங்களில் அறப்பணியை மேற்கொண்டார். இவர் கும்பகோணம் திருநாகேச்சுவரம் கோயில் கோபுர புதுப்பிப்புப் பணியை ஒற்றை ஆளாக இருந்து மேற்பார்வையிட்டு தாமே முன்னின்று செய்து முடித்தார். பல சேதிகளில் இவருக்கும் வள்ளலாருக்கும் ஒற்றுமை இருப்பதை காணமுடிந்த போதிலும் சிலர் இவரை வள்ளலாரின் மறுஅவதாரம் என்றே கருதுகின்றனர்.
உருவ அமைப்பும் செயல்பாடும் 
இவர் 6 அடி உயரமும் கருத்த மேனியும் அகன்ற நெற்றியும் கூர்ந்த கண்களும் நீண்ட வீரல்களும் கொண்ட உடம்பினர். தாடி சிரைத்த முகம், கட்டிய ஐந்து முழ வேட்டி ஆகியவற்றுடன் நெற்றியில் திருநீறு பூசி மார்பிலும் தோட்கையிலும் சந்தனம் பூசி பொட்டிட்டு காணபடுவார். சிலபோது இவர் ஒரே நேரத்தில் ஈரிடங்களில் அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் தோன்றுயவர் என்பது இவரது பக்தர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் உணவின்றி மிகப்பல நாள்கள் இருப்பார். பக்தர்கள் வழங்கும் உணவை சிலபோது அளவுக்குமிஞ்சி உண்ணுவார். பக்தர்கள் இவருக்கு உணவளிக்கக்  காத்துநிற்பர். 
நிகழ்த்திய இறு ம்பூதுகளில் சில: 
இவரது வாணாளில் பல இறும்பூதுகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இரும்பை பொன்னாக மாற்றும் இதள்மாற்றியம் (ரசவாதம்) அறிந்தவர். ஒரு சிறுகல்லை கையிலெடுத்து கையை மூடி பொன்னாக ஒரு துண்டு, மணிக்கல்லாக ஒரு துண்டு என மாற்றியவர். தன் ஆற்றல் குறையும் என்பதால் இதைத் தான் வழக்கமாக கொள்வதில்லை என்று கூறியுள்ளார். இறந்தோர் இரண்டு அல்லது மூன்று பேரை இவர் உயிர்பிக்கச் செய்ததும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. நோய்க்கு ஆட்பட்டவரை திருநீறு கொடுத்து குணப்படுத்தி உள்ளார். 
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவரது சென்னை பக்தர் பி. இராமசாமியை இடத்தைவிட்டு கொஞ்சமும் நகரக் கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி கஞ்சி கொடுத்து குடிக்கச் செய்து நடமாடும்படி பணித்தார். இதனால் மாரடைப்பு நீங்கி அவர் நலம் பெற்றார். அறிவுறுத்திய மருத்துவர்களான குருசாமி முதலியாரும் N.S. நரசிம்ம ஐயரும் இதனால் வியப்புற்று அவரது பக்தர்களாயினார்கள்.
1925 க்கு முன்பு தொழுநோயால் பாதிக்கப்பட்ட காரைக்குடியைச் சேர்ந்த ஆதப்பச்செட்டியார் என்பவருக்கு திருநீறு கொடுத்து மெல்ல நோயும் நீங்கி குட்டையான விரல்கள் வளர்ந்து அவரது இயல்பான கைபோல் ஆனது.        
சுவாமிகள் எப்போதும் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து கொண்டிருப்பார். அவ்வூர் தொலைவிலும் இருக்கலாம் அருகேயும் இருக்கலாம் அது யாருக்கும் தெரியாது. அவர் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி அவரது தீவிர பக்தர் எவரேனும் உடனடியாக அவரைப் பார்க்க வேண்டியிருந்தால் அவர் சுவாமிகள் அறிவுறுத்தியிருந்தபடி  வழியில் போகும் தெரு நாயை விளித்து அதனிடம் சுவாமிகளை அழைத்து வரும்படி சொல்வார். சிறிது நேரத்தில் எங்கிருந்தாலும் அதே நாயுடன் அங்கு சுவாமிகள் திரும்பி வருவார்.  
ஒரு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் சுவாமிகள் 1920 இல் நேர்நிற்க வேண்டியிருந்தது. அப்போது கும்பகோணத்தில்  தன் பக்தர் நடேச கொத்தனார் வீட்டிற்கு சென்று தான் கூறும் வரை கதவைத் திறக்கக் கூடாது என்று கூறி அங்கிருந்த ஓர் அறையினுள் சென்று தாழிட்டுக் கொண்டார். அதேநேரம் அவர் தீர்ப்பு படிஒன்றுடன் உயர்நீதி மன்றத்திற்கு வெளியே வந்தார்.  
பெங்களுருவில் பெருவணிகராயும் செல்வராயும் இருந்த A.G. சாமண்ணா கொடிய நோயால் தாக்குண்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு தமது இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருந்தார். பாடகச்சேரி சுவாமிகள் சாமண்ணாவின் மனைக்கு திடீரென்று வருகை தந்து மருந்தோ மந்திரமோ இல்லாமல் தன் நாவால் அவரது உடலை வருடினார். இதனால் அவரது நோய் சிறிதுசிறிதா மறைந்து முழு நலம் பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது தீவிர பக்தர் ஆனார்.  
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் விந்தையான பைரவ பூசையை  நடத்துவார். நூற்றுக்கணக்கான இலைகளில் விருந்தைப் படைக்கச் செய்து வெளியே சென்று அவர் விளித்தவுடன் திடீரென்று நூற்றுக்கணக்கான நாய்கள் எங்கிருந்தோ மந்தையாக வரும். அவர் கட்டளைப்படி குளத்தில் மூழ்கி எழுந்து அமைதியாக தனித் தனி இலைகளில் விருந்து உண்டுவிட்டு வந்தவழியே மாயமாய் மறைந்து போய்விடும். போடப்பட்ட இலைக்கு கூடவோ குறையவோ இல்லாமல் நாய்கள் வந்து போவது தான் விந்தை.     
கட்டிய கோவில்களும் மடங்களும் 
பாடகச்சேரியில் தண்டாயுதபாணி கோவிலைக் கட்டினார். பெங்களுருவில் நகரத்துபேட்டையில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினார். பல கோவில்களை மீட்டுருவாக்கியத்தில் இவர் பங்கு பெற்றுள்ளார்.
கும்பகோணம் காரைக்கால் சாலையில் முத்துப்பிள்ளை மண்டபம் என்றொரு மண்டபம் கட்டி 1933 முதல் 1949 வரை 16 ஆண்டுகள் அங்கேயே தங்கி அங்கிருந்து பிற இடங்களுக்குச் சென்று வந்தார். அங்கு நாள்தோறும் ஏழைகளுக்கு கஞ்சி வழங்குவார். இங்கு சத்திய ஞான சபை என்றொரு கட்டிடத்தை வடலூர் மடத்திற்கு இணையாகக் கட்டினார். இங்கு இவரது உடைமைகள் இன்றளவும் காப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சென்னை திருவொற்றியூரிலும் பட்டினத்தார் சமாதி செல்லும் காய்கறிச் சந்தை சாலையில் அதைவிட ஒரு பெரிய சத்திய ஞான சபையைக் கட்டினார். இவர் பல ஊர்களுக்கு சென்று ஓயாமல் அறப்பணியும் ஆன்மீகப்பணியும் செய்து வந்ததால் அவரது உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. தம் இறுதி நாள்களில் இவரது தீவிர பக்தர் பெங்களூர் A.G. சாமண்ணாவின் மனையில் தங்கியிருந்தார். பின்பு சென்னை திருவொற்றியூருக்கு வந்து வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் நாளில் 29.07.1949  அன்று ஜீவசமாதி அடைந்தார். அங்கு பின்பு ஒரு பெருங் கோயில் கட்டப்பட்டது.  அக்கோவில் தேரடிக்கு எதிரே உள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் உள்ளது. இவரது சமாதிக்கு பக்கத்திலேயே இவரது மாணாக்கர் அப்புடு சுவாமி என்ற ஐகோர்டு சுவாமிகளின் சமாதி கோவிலும் உள்ளது.     
இணைய தள முகவரி : http://www.padagacheriswamigal.org

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...