GuidePedia

0
சுரைக்காய் சித்தர் வரலாறு
    சித்தர் என்போர் யாவர் என்ற கேள்விக்கு சித்து ஆற்றல் பெற்றோர் எனவும், சித்தி பெற்றோர் எனவும், மீஇயற்கை (super natural) ஆற்றல் பெற்றோர் எனவும், சித் என்றால் அறிவு ஆதலால் அறிஞர் எனவும் பலரும் பலவாறாக விளக்கம் தருகின்றனர். ஆனால் சித்தர்கள் இப்படிப்பட்டவர் என வரையறுப்பதோ, அடையாளப்படுத்துவதோ மிகக் கடினம்.
    'பேறாம் பிரமானந்த மடைந்தோன் சித்தன்' என்பார் கோரக்கர்.
    பந்தங் கடந்தவனே சித்தன் - பாரில்
    பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்
    இந்த விதஞ் தெரிந்தவனே சித்தன்
    அதிலென் நிலைமை கண்டவனே சீவமுத்தன் 
என்கிறார் கல்லுளிச் சித்தர்.
    சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் எனச் சொல்வதற்கு இல்லாமல் எல்லாக் காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் காயகல்பம், மருத்துவம், கணிதம், இதள் மாற்றியம் (இரசவாதம்), மெய்யியல், ஆன்மீகம், கணியம் (சோதிடம்) என பல துறைகளில் வல்லவர்களாக இருந்துள்ளனர். 
    சித்தர்கள் நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்க நிறைமாந்தர் எனப்படுகின்றனர். தமிழகத்தின் நெடிய வரலாற்றில் புகழ்மிக்க பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு சித்தர்நாடு என்றே கூட  ஒரு பெயர் உண்டு. இவர்களில் சிலரைப் பற்றியாவது நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். அந்த வகையில் மிக அண்மையில் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கதில் வாழ்வு நீத்தவரான ஒரு பெரும் பெரியார் (மகான்) தான் சுரைக்காய் சித்தர் என்பவர். அவரைப் பற்றிய வரலாற்றையே இம்முழுக் கட்டுரையும் விளக்குவது. 

சுரைக்காய் சித்தரோடு உடனிருந்து அனுபவம் பெற்ற 75 அகவையாளர் திரு. செங்கல்வராய முதலியாரின் அனுபவங்கள் முதல் பகுதியாகவும், சுரைக்காய் சித்தரை சந்தித்து அருள் பெற்ற அவரது பக்தர்கள் சிலரது அனுபவப் பதிவுகள் இரண்டாம் பகுதியாகவும் இடம் பெறும்படியாக ஒரு நூலை தெலுங்குல் எழுதி முதன்முதலாக திரு. R. கிருஷ்ணசாமி நாயுடு B.A. 1911 இல் வெளியிட்டார். பின்பு இந்நூலை திரு. N . ராஜு நாயுடு MBPI  தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். அந்த ஆங்கில நூலை 'சுரைக்காய் சுவாமிகள் வரலாறு - அற்புதச் செயல்கள் வருமுன்னுரைத்தல்' என்ற தலைப்பில் திரு. தி. பக்தவத்சலம் பிள்ளை B.A. தமிழில் மொழிபெயர்த்து 1929 இல் வெளியான நூலை மேற்கோளாகக்  கொண்டு சுறுக்கமாக எழுதப்பட்டது இக்கட்டுரை.
    தமிழ்நாட்டின் வடக்கே திருத்தணிக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்த புத்தூருக்குக் கிழக்கே  4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய ஊர்தான் நாராயணவரம் அல்லது நாராயணவனம் என்பது. தம் இறுதிக் காலத்தே இங்கு தங்கி வாழ்ந்தவர் தாம் சுரைக்காய்ச் சித்தர் என்னும் தவப்பெரியார். நூலில் இவர் பெயர் சுரைக்காய் இராமசாமி என்று பதிவாகி உள்ளது. இரு பெரிய சுரைக் குடுக்கைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை இவர் எப்போதும் தம்முடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய்ச் சித்தர் என்று அடையாளப்படுத்தப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்த இவருக்கு குடும்பம் என்று ஒன்று இருந்ததாகத தெரியவில்லை.  
    உருவத்தில் இவர் சற்றே குட்டையானவர், மாநிறத்தவர். கிழிந்த உடையும், பெரிய தலைப்பாகையும் அணிந்திருப்பார். இதுவே இவருடைய அடையாளம். இவர் பேசும் சொற்களிலிருந்து நேரான பொருளை அறிய இயலாது. எதையும் மறைபொருளாகவே பேசுவார். சிலபோது தம்மிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறுவோருக்கு ஆறுதல் சொல்லுவார்; நோயுற்று நலிந்தவருக்கு நோயைப் போக்கி அருளுவார்; இடருற்றவருக்கு இடர்களைக் களைவார். கெடுதிவருமுன்னே குறிப்பாய் எச்சரித்துத் துன்புற வேண்டியவர் நெஞ்சைத் திடப்படுத்துவார். இவர் எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார் என்று எவராலும் திட்டமாகக் கூற இயலவில்லை. இவர் இடையர் குலத்தில் பிறந்து ஆடுமாடு மேய்க்குங்கால் ஒரு ஓகி(யோகி)யரிடம் ஓகப்பயிற்சி கற்றார் என்பர். இவர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து சமாதி அடைந்தார் என்பர் சிலர். இன்னும் சிலர் இவர் திருப்பதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து திருவள்ளூரில் ஒரு கையில் கருடனை ஏந்திக் கொண்டு நெடுங்காலம் பிச்சையெடுத்து நாளடைவில் விந்தையான மன ஆற்றலை வளர்த்துக் கொண்டார் என்பர். இவற்றுக்கெல்லாம் உறுதியான, கண்கூடான சான்றுகள் ஒன்றுமே  கூட இல்லை.
    இவரது சமயம் வைணவம் என்றோ சைவம் என்றோ பாகுபடுத்த இயலாது. குறுகிய நெறிகளைப் பின்பற்றும் சமயங்களைக் கடந்து நின்றவர் அவர். சமயக்குறிகளை அணிவது இவர் வழக்கமன்று ஆனால் எவரேனும் திருநீறோ திருமண்ணோ அவர் நெற்றியில் சாற்றினால் அதற்கு அவர் முகஞ்சுளிப்பதில்லை. அவர்கள் மகிழட்டும் என்று அவர் சும்மா இருந்துவிடுவார்.
    சித்தர் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவார் என்பதற்கு ஒரு நிகழ்வு:
    ஓரிரவு 12.30 மணிக்கு சுரைக்காயார், பாவம்! ஓர் ஏழைப்பெண் இறக்கப் போகிறாள்! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்! உடனே விரைந்து சென்று அவளைக் காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே சொன்னார். உடனே அவரது பக்தர்கள் அங்கிருந்த தோட்டத்தின்   தொலைவான மூலையில் இருந்த ஒரு குளத்தில் சென்று தேடியபோது அங்கே எவரும் இருக்கவில்லை. இதை ஓடிச் சென்று சித்தரிடம் தெரிவித்தபோது தவறான இடத்தில் தேடிப்பார்த்துள்ளீர்கள் என்று கடிந்துகொண்டு அவர்களிடம் தொலைவிலுள்ள குளத்தைப் பற்றிய விவரங்களைக் கூறினார். மறுபடியும் சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று தேடியபோது ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியாக குளத்தின் ஆழமான பகுதியில் அந்த நள்ளிரவில் குளத்தில் மூழ்கிவிட முயல்வதை பார்த்த அவர்கள் அவளிடம் அறிவுரை கூறி அவளது முயற்சியைக் கைவிடச் செய்தனர். அவள் தன் நோயின் துன்பம் காரணமாக அவ்வாறு தற்கொலையில் ஈடுபடத் துணிந்தாள்.    
    சித்தர் தாம் பிறப்பெடுத்ததன் குறிக்கோள் முடிவுற்றதால் இவ்வுலகை விட்டு நீங்க உறுதிபூண்டார். அவர் சமாதி அடைவதற்கு சில மாதங்கள் முன்பாக அவரது பக்தர் திரு. N. இரத்தினசபாபதி பிள்ளை தம் பணியிடம் செல்லவேண்டி இருந்ததால் சுரைக்காய் சித்தரிடம் விடை பெறச் சென்றபோது மறுபடியும் இவரை சந்திக்கும் பேறு எப்போது கிட்டுமோ என்று எண்ணினார். அப்போது சித்தர் ''சித்திரத்தே குத்தி அப்புறத்தே வைத்திருக்கிறதே! அதைப் பார்த்துக் கொள்வது தானே என்று அங்கே மாட்டியிருந்த தம் புகைப்படத்தைக் காட்டினார். இதுவே இரத்தின சபாபதியுடனான இறுதிச் சந்திப்பு என்பதைத் தான் அவர் மறைமுகமாகச் சுட்டினார்.        .        
     இவரது இறும்பூதுச் செயல்கள் (Miracle Deeds):
    ஒருபோது ஒரு கிழவி தன் பேத்தியை அழைத்து வந்து சித்தரிடம் காண்பித்தாள். நெடுநாள் காய்ச்சலால் அப்பேத்தி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆகிப்போயிருந்தாள். மருத்துவர் நோய் இன்னது என்று அறியாதவராக கைவிட்டிருந்தனர். சுரைக்காய்ச் சித்தர் அந்நோயாளி மேல் இரக்கங்கொண்டு அவளை ஆசிர்வதித்துத் தரையில் இருந்த மண்ணை எடுத்துக் கொடுத்து அப்பெண்ணுக்கு மருந்தாக அளிக்கச் செய்தார். அவ்வாறு செய்த சின்னாட்களிலேயே அந்நோய் அகன்றது. ஒரே மாதத்தில் அவள் நல்ல உடல்நிலையைப் பெற்றாள்.
     ஒருபோது வண்ணான் ஒருவன் ராசபிளவை நோயினால் அளவிலாத் துன்பமுற்று சுரைக்காய்ச் சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். சித்தர் அவனை ஆசிர்வதித்துக் கழுத்திலும் முதுகிலும் உள்ள பிளவையில் புளியை அரைத்து தடவினால் ஆறிவிடும் என்று சொல்லி அனுப்பினார். அவர் மேல் நம்பிக்கைகொண்டு அவ்வாறே செய்த வண்ணான் இரு வாரங்களில் அந்நோயிலிருந்து விடுபாடு கண்டான்.
     1902 இல் ஆகத்து மாதத்தில் சுரைக்கைச் சித்தர் கடைசி முறையாகச் சென்னை வந்தார். ஒரு வாரம் அங்கு தங்கிவிட்டு 'வெற்றி கண்டாகிவிட்டது' இனி ஒரு நொடியும் தாழ்த்தக் கூடாது என்று சொல்லி வழக்கமாக அவருடன் இருப்போரை எல்லாம் சென்னையிலேயே விட்டுவிட்டு திரு. புருசோத்தம நாயுடுவுடன் நாராயணவரத்திற்கு புறப்பட்டு இரவே புத்தூர் சென்றடைந்து அங்கு இரவு தங்கினார். அடுத்தநாள் சித்தர் அங்கிருந்து ஒரு பசனை கூட்டத்துடன் புறப்பட்டார். உள்ளத்தை உருக்கும் பாடலைப் பாடிக்கொண்டும், இறைவனை நெஞ்சார வழிபட்டு கொண்டும், இறைவனுக்கு நன்றி தெரிவித்தும் அவர் எழுப்பிய இன்னிசை கேட்பவர்கள் காதில் தேனாய் ஒலித்தது. நாராயணவரம் சென்றடைந்ததும் புருசோத்தம நாயுடு, பாப்பைய்ய செட்டி ஆகியோரிடம் 'நான் நாளை மறுநாள் என்னுடைய ஊருக்குப் போகிறேன்' என்றார்.  அன்று இரவு தம் தாகத்தைத் தணிக்க 10 படி தண்ணீர் குடித்தார். ஆனாலும் மலம் ஏதும் கழிக்கவில்லை. 
     மறுநாள் அவரது வேண்டுகோளின்படி புருசோத்தம நாயுடு 150 குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து அவர்மேல் ஊற்றினார். அப்போது நள்ளிரவு 12 மணி. சித்தர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புருசோத்தம நாயுடுவிடம் தேங்காயும் கற்பூரமும் இல்லையா? என்று கேட்டார். நாயுடு பாப்பய்யச் செட்டியிடம் சென்று சித்தர் விரைந்து உலக வாழ்வைவிட்டு நீங்கிவிடுவார் என்று தாம் அஞ்சுவதாக சொல்லி தேங்காயும் கற்பூரமும் கொடுக்கும்படி வேண்டினார். செட்டியும் அவற்றைக் கொடுத்தார். ஆனால் சித்தர் நாயுடுவிடம் தாம் மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு உயிர் நீப்பதாக சைகை காட்டினார். சித்தர் வாய்திறவாது அனைப்புக்கை (அபயஸ்தம்) காட்டி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றுமாறு குறிப்பிட்டார். அவ்வாறு செய்ததும் சித்தர் புருசோத்தம நாயுடுவின் மேல் மெதுவாகச் சாய்ந்தார். அப்படியே இறைவனோடு ஒன்றிவிட்டார். அடுத்தநாள் அவர் ஏற்கெனவே வழியில் வளர்ந்து இருந்த நாகதாளிச் செடிகளை அகற்றி அங்கிருந்த குழிகளில் குழாங்கற்களையும் மணலையும் நிரப்பிச் சீர்திருத்தி வைத்திருந்த நிலவெளியில் அவரது மெய்யுடல் சமாதி வைக்கப்பட்டது. இச்செய்தி கேட்டு அவரது அடியார்கள் பெருந்துயர் எய்தினர். பின்பு சமாதி வைக்கப்பட்ட இடம் கோவிலாக கட்டி எழுப்பப்பட்டது. மேற்சொன்ன யாவும் செங்கல்வராய முதலியார் நினைவுகளின் பதிவுகள். 
    நூலில் சுரைக்கைச் சித்தரது அடியார்கள் பதிந்த தம் அனுபவங்களில் சில:
திரு M. குப்புசாமி செட்டி M.A. கூறியது (பக்கம் - 236): சுரைக்கைச் சித்தர் N. இரத்தின சபாபதி பிள்ளையின் மகள் திருமணத்தின்போது சென்னை வந்திருந்தார். அவருடன் கண்ணுக்குட்டி சாமி என்ற வேறொரு சாமியார் வந்திருந்தார். இருவரும் வியப்புறும் வகையில் நோய்களைப் போக்கினர். இதில் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், சுரைக்காய்ச் சித்தர் தம்மிடம் வந்தவர்களின் பெயரைச் சொல்லி அவரவர் துன்பங்களைப் போக்கி அவர்க்கு ஏற்ற வழியை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளும்படிச் சொன்னார்.
(பக்கம் - 240) ஏழாம் எட்டுவர்டு மன்னர் (9th August 1902) முடிசூட்டிய நாளில் சுரைக்காய் சித்தர் சமாதி வைக்கப்பட்டார். அதற்கு முந்தைய நாள் அவர் உயிர் நீத்தார்.
பொதுவாக அவர் பேச்சு உலகில் நடக்கவேண்டிய முறை பற்றியும், ஓகம், மெய்யியல் இவற்றைப் பற்றியுமாகவே இருந்தது.அவர் இயற்கை சக்திகளை அடக்குவதும், நோய்களை நீக்குவதும் வியக்கத்தக்கனவாய்  இருந்தன. வயிற்றுவலிக்கு ஒருமுறை அவர் தம் உள்ளங்கையில் ஒரு சிறு குச்சியை சிறிது நேரம் வைத்திருக்க அது ஒருவித பழுப்புத் தூளாக மாறிவிட்டது. அதை நோயாளியிடம் கொடுத்து சிறிதளவு காதில் போட்டுச் சில துளி தண்ணீர் விட்டால் நோய் நீங்கும் என்றார். அவ்வாறே நோயாளியின் நோய் நீங்கியது. அன்றாடம் வருபவர்கள் எண்ணிக்கையையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் சித்தர் முன்னதாகவே உணர்ந்து தெரிவிப்பார். மக்கள் அவரிடம் வருவதற்கு முன்பே அவர்கள் வருகையைப் பற்றி முன்னதாகவேக் கூறுவார். பேய் பிசாசு பிடித்தவர்கள், உணர்வு (மனநலம்) கெட்டவர்கள் ஆகியோர்களை நலமுறச் செய்வது அவரது அன்றாட நிகழ்ச்சியாயிருந்தது.
திரு. V.நாதமுனி முதலியார் கூறியது (பக்கம் - 166): சுரைக்காய் சித்தர் செங்கற்பட்டு வட்டத்தில் வண்டலூரில் பிறந்தவர் என்றும் இடையர் குலத்தவர் என்றும் அவரது உறவினர் சிலர் இன்றும் அங்கிருப்பது தெரியா வந்துள்ளது. அவர் தொழில் மாடு மேய்ப்பது சிறப்பாக, ஆடு மேய்ப்பது. அவர் பெயர் இராமசாமி. தொண்ணூறு அகவையாளர் போல் காணப்பட்டாலும் அவர் வயது என்னென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. சென்னை சட்டசபை உறுப்பினர் திரு. சீனிவாசப் பிள்ளை, புத்தூரில் நூற்றுநாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டிய சத்திரத்தைப் பற்றிய செலவுக் கணக்கில் எழுதியுள்ள பதிவு ஒன்று சித்தரின் அகவையை உணர்ந்துகொள்ள உதவுகிறது என்கிறார். இந்த பகுதி கணக்கில் முதலாக உள்ளது அதன்படி சத்திரம் கட்டுவதற்கு சுரைக்காய் சித்தரைக் கருத்து கேட்டதாக இருக்கிறது.
(பக்கம் - 213) V. எத்திராசுலு நாயுடு என்பவருடைய வீட்டில் சித்தர் தங்கியிருந்த போது அவரது பெரிய அக்காள் சுப்பராவ் அம்மா சித்தரின் அகவை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுள்ளவராய் யாரிடமேனும் கேட்கலாம் என்று இருந்த போது இதைத் தம் ஓக ஆற்றலால் உணர்ந்த சித்தர் ''எனக்கு இப்போது அகவை 500. நான் இங்கேயே இருந்தால் மற்ற இடங்களுக்கு எப்போது போவது?'' என்று சொன்னார். இதன் பின் 1902 இல் மறைந்தார்.    
திரு. C. விஜயராகவலு நாயுடு கூறியது (பக்கம்-115): பலமுறை அவர் தம் உடலை விட்டுவிட்டுச் சென்று சிலருக்குத் தம் அடையாளம் தெரியாமலேயே உதவிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
திரு. வேணுகோபால் நாயுடு கூறியது (பக்கம் - 127): சமாதி அடைவதற்கு முன்பு 1902 ஆம் ஆண்டு சூலை மாதம் கடைசியில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டபோது வண்டியில் உட்கார்ந்ததும் தம் வழக்கத்திற்கு மாறாகத் தம் கைத்தடியை நிற்கவைத்துக் கொண்டிருந்தார். சுரைக்காய் சித்தர் எங்கு உட்கார்ந்தாலும் தம் கைத்தடியைப் பக்கத்தில் தான் வைப்பது வழக்கம். அப்போது மும்பை மெயில் மாலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது வழமை. மணி ஆறுக்கு காப்பாளர் பச்சைக் கொடி காட்டினார். ஆனால் வண்டி புறப்படவேயில்லை. ஏதோ எஞ்சின் கோளாறு என நினைத்து ஆங்கில இரயில் அதிகாரிகள் வேறு எஞ்சினைப் பூட்டினர். அப்போதும் வண்டி புறப்படவில்லை. மணி 6.15 கடந்துவிட்டது. சுரைக்காயார் தடியைப் பக்கத்தில் வைத்தார் வண்டி உடனே புறப்பட்டது. இதுவே கடைசி முறையாகத் தம் சீடர்களைப் பார்ப்பது என்பதை உணர்த்தத் தம் ஆற்றலைக் காட்டினார் போலும். இந்த நிகழ்விற்கு ஒரு வாரத்தில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். நிலைய அதிகாரியும் மற்றவர்களும் எஞ்சின் செல்லாத உண்மைக் காரணத்தை அறிந்ததும் சித்தரின் சித்தாற்றலை எண்ணி வியப்புற்றனர்.
திரு. C. வீரராகவராவ் கூறியது (பக்கம் - 221): அடிக்கடி அவர் என் கனவில் தோன்றி வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னதாகத் தெரிவித்தார் . கடல் பொங்கி சென்னை மூழ்கிவிடப்போகிறது என்ற புரளி கேட்டு நான் அச்சம் கொண்டபோது அவர் என் மனதைத் தேற்றினார். வேறொரு முறை என் மகனுக்குக் காய்ச்சல் போக அவர்  சொற்படி தண்ணீர் கொடுத்தேன். மருந்தில்லாமல் அவன் நலமானான்.                                                                          
                          
சுரைக்காய் சித்தர் ஜீவசமாதி கோவில் 
அவருடைய சமாதியில் அன்றாடம் பூசனை நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கினர் நாள்தோறும் பல தொலைவிடங்களில் இருந்து வந்து வழிபட்டு அவர் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த இடத்தில் ஊழ்கம் (தியானம்) செய்கிறபோது பிற இடங்களில் ஏற்படாத ஒருமுனைப்பட்ட ஒருமுகப்பாடு கைகூடுகிறது. மக்கள் சிலர் சித்தரின் நினைவாக சுரைக்காய்களை கட்டுகின்றனர். சித்தர் வாழ்ந்திருந்த காலத்தில் காட்டுமரங்களை வெட்டிவந்து கொளுத்தி குளிர்காய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது மக்களும் தீயைச் சூழ்ந்து உட்காருவர். அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பமர விறகுகள் கொளுத்தப்படுகின்றன. மக்கள் உடல் நோயை தீர்க்கும் வெற்றியைத் தந்திடும் என்ற நம்பிக்கையில் அதன் சாம்பலை உடலில் தடவிக் கொள்கின்றனர். பிள்ளை இல்லாதோர் வேண்டி பிள்ளை பிறந்தால் பிள்ளையின் எடைக்கு எடை காசு தருகின்றனர். பேய்பிசாசு பிடித்தோர் பில்லிசூனிய பாதிப்புடையோர் அதிலிருந்து விடுபட இங்குவருகின்றனர். திருமணத் தடை, குடும்பச்சிக்கல் நீங்க வேண்டியும் மக்கள் சித்தர் சமாதிக்கு வருகின்றனர். இக்கோவில் தனியாரால் பேணப்படுகிறது. காலை 6 முதல்12 மணி வரையும், மாலை 3.30 முதல் 8.30 வரையும் கோவில் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதால் நாள் முழுதும் கோவில் திறந்திருக்கும். அன்று பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நண்பகலிலும் இரவிலும் தானமாக சோறு போடப்படுகிறது. கோவில் தொலைபேசி 08577 224877. இங்கிருந்து 8 கி.மீ.தொலைவில் கைலாச கோனை அருவி உள்ளது. இங்கு செல்ல ஊத்துக்கோட்டை வழியாக பேருந்து போக்குவரத்து உள்ளது.                        
1951 இல் வெளியான மேற்சொன்ன நூலின் இரண்டாம் பதிப்பைத் தந்து உதவிய 'ஸ்ரீ சுரைக்காய் சித்தர் கைங்கர்ய சமாஜ' துணைத் தலைவர் திரு. M. குப்புசாமி என்பவர் மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டு சுரை மாமுனியை வேண்டுவோர்க்கு அவர்கள் குறைகள் அத்தனையும் அறவே நீக்கி நிறைவான மனதை இன்றும் தருகிறார் சித்தர் என்கிறார். அவருடைய எண் 93608 40453.   

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...