இந்தியாவின் Nostradamus என அறியப்படும் திரு வீரபிரம்மங்காரு எனும் போத்தலூரி திரு வீர பிரம்மேந்திர சுவாமிகள் ஆந்திர நாட்டில் புகழ்மிக்க தவப் பெரியாராய் அறியப்படுபவர். இவர் தம் வாணாள் முழுதும் அரிய பல சித்துகளை செய்து மக்கள் நடுவேயும் ஆட்சியாளர் நடுவேயும் மதிப்பும், பெருமையும், மங்காப் புகழும் பெற்று உயர்ந்தார். இவர் காலத்தே நடப்பில்இல்லாத குமுகத்தால் கண்டிக்கப்பட்ட வழக்கங்களும் நெறிகளும் எதிர்காலத்தில் நடந்தேறும் எனும் முன்னறிவிப்பாக தமது காலஞானம் என்னும் நூலுள் ஆருடம் உரைத்துள்ளார். அக் காலஞானத்தில் இவர் என்ன உரைத்துள்ளார் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டவே இக்கட்டுரை எழுந்தது என்றாலும் அவர் எந்தெந்த சூழலில் தம் ஆருடங்களை வெளிப்பட உரைத்தார் என்பதை அறிவதோடு அவரைப் பற்றியும் சில குறிப்புகளை ஈண்டு அறிவது நிறைவாக இருக்கும்; வெறுமனே காலஞானத்தை மட்டுமே படிக்க நேர்ந்தால் சலிப்பு தட்டும். இங்கு இடம் பெறும் செய்திகள் யாவும் 2011 இல் மறுபதிப்பாக வெளியான கால ஞான தத்துவம் என்ற நூலுள் இடம்பெற்றுள்ளவை.
திரு வீர பிரம்மேந்திரர் பிறப்பும் வளர்ப்பும்
பொற்கொல்லர் குடியில் பரிபூரண ஆச்சாரி பிரக்நதாம்பா என்ற இணையருக்கு கி.பி.1604 இல் மகவாகப் பிறந்தார். பிறந்த பொழுதே தந்தையை இழந்தார். அதனால் பிரக்நதாம்பா அத்திரி என்ற முனிவரிடம் குழந்தையை விட்டுவிட்டு தானும் இறக்கிறாள். பின்பு பாபாக்னி மடத்தை சேர்ந்த வீரபோஜர், வீரபாப்பமாம்பா இணையர் முனிவரிடம் இருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டு வீர பொட்டலய்ய என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். சிறு அகவையிலேயே இவரிடம் சில சிறப்புத் தன்மைகள் இயற்கையாய் அமையப் பெற்றிருந்தன.
அவர்தம் 14 ஆம் அகவையில் திரு வீரபோஜர் இறக்கின்றார். இதன் பின் வீரபொட்டலய்யா வளர்ப்புத் தாயைப் பிரிந்து பல ஊர்களுக்கு திருச்செலவுக்கு செல்கிறார். அங்கெல்லாம் தியானத்தில் ஈடுபடுகின்றார். ஒருநாள் இரவில் பனகானபள்ளி என்ற குக்கிராமத்திற்கு வந்து அச்சம்மா என்பாளது வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குகிறார். காலையில் அச்சம்மா அப்பையனை எழுப்பி அவனிடம் அவனைப் பற்றி உசாவுகிறாள். தான் ஊர்ஊராய்ச் சுற்றி அலையும் ஏதிலி என்கிறான் சிறுவனான திரு. வீரபிரம்மம். அதற்கு அச்சம்மா, "என்னிடம் பசுக்கள் உள்ளன அவற்றை மேய்த்தால் மூன்றுபொழுதும் சோறு இடுகிறேன்" என்கிறாள். திரு. வீரப்பிரம்மம் அதற்கு ஒப்புக்கொண்டு நாடோறும் பசுக்களை அருகில் உள்ள காட்டிற்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்கிறார். காட்டை அடைந்ததும் அங்கு கோலால் சில இடங்களில் கோடு போட்டு விட்டு மாடுகளை அதனுள் விட்டுவிட்டு தான் ஒரு வசதியான இடம் பார்த்து அமர்ந்து பனையோலையில் முட்களால் எழுதுவார். அவ்வாறு அவர் எழுதியனவே காலஞானம் என்ற நூல்.
ஒருபோது புலி ஒன்று பசுவைக் கொன்று திண்ண வந்தது. ஆனால் அதனால் திரு வீரபிரம்மத்தால் கிழித்த கோட்டுக்குள் நுழைய முடியாமல் போவதை வேறு சில இடையர்கள் பார்த்துவிட்டு அச்சம்மாவிடம் வீரபிரம்மம் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லி விடுகின்றனர். அச்சம்மா ஒரு முறை காட்டிற்கே வந்து திரு. வீரபிம்மம் ஏதோ எழுதுவதைப் பார்த்துவிட்டு அவரிடம் ஏதும் பேசாமல் இடையர் சொல்லவது உண்மை என அறிந்து வீடு வந்து சேர்கிறாள். மாலையில் வீடு திரும்பிய வீரபிரம்மத்தின் காலில் வீழ்ந்து ஐயா! நீவீர் தெய்வத்திற்கு ஒப்பானவர், உமது அருமை பெருமை அறியாது உம்மை மாடு மேய்ப்பில் ஈடுபடுத்திவிட்டேன் என்னை மன்னீர்ப்பீராக என்று அச்சம்மா வேண்டினாள்.
அம்மா! " நான் ஒரு சிறுவன்; எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏன் உம்மை மன்னிக்க வேண்டும்" எனக் கேட்டார். அதற்கு அச்சம்மா உமது ஒவ்வொரு செயலும் உம்மை ஒரு பெரியோர் என்று காட்டுகின்றது ஆதலால் என்னை உமது பின்பற்றியாக ஏற்று எனக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றாள். அப்படியானால் நீ முக்தி கதி அடைய, "ஓம், ஹ்ரீம்,க்லீம், ஸ்ரீம் சிவாய பிரம்மனே நம:" என்ற பன்னிரு எழுத்து மந்திரத்தை சொல்லி வந்தால் நீ முக்தி அடைந்து பிறப்பு எனும் மாயை உன்னை விட்டு விலகும் என்று கூறினார்.
அப்போது அச்சம்மா , "காட்டினுள்ளே நீங்கள் ஏதோ எழுத்திக் கொண்டிருந்தீரே அது யாது என நான் அறிந்துகொள்ளலாமோ" என வினாவினாள். அதற்கு அவர் கலியுகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் எழுதும் காலஞானம் எனும் நூல் அது என்றார். அதில் எழுதி இருப்பது என்ன என்பதை அச்சம்மாவுக்கு அவர் சொன்னார்.
ஒரு நாள் இந்த ஐம்பூத உடல் எப்படி அழியக்கூடியதோ அதுபோல் இந்த மாபெரும் பூவுலகும் அழியப்போகின்றது. அப்போது உலகில் பொய்மை (அசத்தியம்) வளர்ச்சி அடையும். வாய்மை (சத்தியம்) முற்றாக மறைந்துவிடும். மக்களிடையே பக்கச்சார்பு அதிகரித்து அதன்படி நடப்பார்கள். துரோகிகள் அதிகமாகப் பிறப்பார்கள். ஐந்து பெரும் பாவங்கள் மேலோங்கும் ஒழுக்கம் மறையும். மக்களிடையே கலகங்கள் தோன்றி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாளுவர். மக்கள் பரமாத்மாக்களை குறைகூறுவர். பெண்கள் இரண்டாம் மணம் செய்துகொள்வர்.
தெய்வ சக்தி, மத்திர சக்தி ஆகியன நசிந்து விடும். பிராமணராய்ப் பிறந்தோர் கடற்பயணம் மேற்கொள்வர். புலால் உணவு உண்பார்கள். கரும செயல்களில் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.
கலப்பு சாதிகள் தோன்றும். உலகில் கடுமையான வறட்சி ஏற்படும். பெண்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள். முறை தவறிய திருமணங்கள் நடைபெறும். நடு இரவில் ஞாயிறு தோன்றும். கெட்ட தேவதைகள் தோன்றி கிராமங்களை அழிக்கும்
அக்கால மக்களுக்கு இது மிக இயல்பு நிகழ்ச்சியாகத் தோன்றும் இவை குறித்து எவரும் கவலையோ அச்சமோ கொள்ளமாட்டார்கள். அன்றைய மக்களுக்கு இச்செயல்கள் அனைத்தும் நேர்மையானது போலத் தோன்றும் இதனால் ஏற்பட இருக்கும் கேடு குறித்து தவறாகவோ குற்றமாகவோ கருதமாட்டார்கள். இப்படியாக உலகின் போக்குகள் மாற்றம் அடைந்துவிடும். (பக்கம் 22 - 23)
இதைக் கேட்டு அச்சம்மா இல்லற வாழ்வு துறந்து துறவியனாள். தன் சொத்துகளை எல்லாம் செலவிட்டு 'ஏகாந்த மடம்' என்றொரு மடத்தை கட்டித் தந்தாள். அம்மடத்தில் திரு. வீரப்பிரம்மம் தங்கி இருந்து பக்தியையும் தமது கருத்துகளையும் பரப்பி வந்தார்.
ஏகாந்த மடத்திற்கு அண்ணாஜெயா என்ற பிரம்மானந்தன் வீரபிரம்மத்தை சந்தித்து அறிவுரை பெறவந்தார். அவருக்கும் கால ஞானத்தை பற்றி உரைத்தார்.
உலகில் கிலியூட்டும் மதக் கலகம் தோன்றும். அதில் நிறைய மக்கள் மாண்டுவிடுவர். ஆட்டின் விதையில் இருந்து பால் வடியும். சில இடங்களில் நெருப்பு மழை பெய்யும், பெரும் போர் மூளும். அதில் அதிக அளவான மக்கள் இறந்து போவார்கள். இறந்தவருக்காக அழக்கூட மக்கள் இல்லாமல் போகும்.
உலகில் 360 வகைத்தான புதுப்புது நோய்கள் தோன்றும் அவற்றைத் தீர்க்க மருத்துவ வசதி இல்லாமற் போகும். மருத்துவம் தன் ஆற்றலை இழந்துவிடும்.
பஞ்சாங்கத்தில் குறித்துள்ளபடி உலக நிகழ்ச்சி ஏதும் நடைபெறாது. ஆதலால் பஞ்சாங்கம் பொய்த்துப் போகும். கோள்களின் செயல்கள் மாறிவிடும்.
நாத்திகர்கள் அதிக அளவில் தோன்றுவர். அதனால் பல இடங்களில் நாத்திகவாதம் நிகழும். அதனால் இறைவன் தூற்றப்படுவான்.
பல இடங்களில் அடிக்கடி பனிக்கட்டி மழை பெய்யும். அதனால் பல இடங்கள் சேதமடையும். மூன்று வால் கொண்ட நட்சத்திரம் கிழக்கு திசையில் தோன்றும் அதுபோது பல கோள்கள் அழிந்து போகும்.
இழிகுலத்தில் பிறந்தோர் உயர் பதவிகளை ஏற்றிருப்பர். புதிய முறையில் திருடுகள் நடக்கும். திருடர்களை தண்டிக்க முடியாமல் நீதி செயலிழந்து போகும்.
நடு இரவில் ஆடுகள் மந்தை மந்தையாக கத்தி மக்களை அச்சப்பட வைக்கும். உலகில் பெண்கள் ஓர் அணுக்கு ஏழுவர் என்ற கணக்கில் பிறப்பார்கள். இலட்சுமி தேவி அழுவாள். திருப்பதி மலைமேல் வால்நட்சத்திரம் போன்ற ஒன்று தோன்றும். அதைப் பார்த்து மக்கள் அதிக அளவில் மடிவார்கள். இவை எல்லாம் உலகில் மிக இயல்பாக நடக்கும் (பக்கம் 26 - 27). என் காலஞானத்தை யார் நித்தமும் படிக்கின்றார்களோ யார் கேட்கின்றார்களோ அவர்களுக்கு கெடுதல் ஏதும் ஏற்படாது.
ஒரு நாள் அச்சம்மா திரு. வீரபிரம்ம சுவாமிகளிடம், "உங்களது அளவிலா தெய்வீக ஆற்றலினால் கண்ணிழந்து தவிக்கும் என் மகன் பிரம்மானந்த ரெட்டியின் கண்களுக்கு காட்சி காணும் திறன் ஏற்படச் செய்ய வேண்டும்" என்று கோரினாள். மறுநாள் திரு. வீரபிரம்மம் பிரம்மானந்த ரெட்டியின் கண்களை மூன்று முறை தடவிக் கொடுத்து, "கண்களை மெல்லத் திறந்து பார்" என்றார். சில நிமிடங்களில் பிரம்மானந்த ரெட்டிக்கு முழுப் பார்வையும் கிட்டியது. வீரபிரம்மம், நான் பல இடங்களுக்குச் சென்று மக்களுக்கு ஞானஉபதேசம் செய்ய வேண்டி உள்ளது ஆதலால் ஏகாந்த மடப் பொறுப்பை அச்சம்மாவும் பிரம்மானந்த ரெட்டியும் கவனித்து வரும்படி சொல்லி அங்கு ஒரு சிவலிங்கத்தை பதித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.
பனகானபள்ளி நவாபு அழைப்பு
பிரம்மானந்த ரெட்டிக்கு பார்வை கிடைத்த செய்தி ஊரெங்கும் காட்டுத் தீயாய் பரவி பனகானபள்ளி நவாபின் காதுகளுக்கு எட்டியது. அதனால் திரு. வீரபிரம்மத்தை காண ஆசை கொண்டு அவரை தன்னிடம் அழைத்து வர ஆட்களை அனுப்பினான். திரு. வீரபிரம்மம் அந்த அழைப்பை ஏற்று பல்லக்கில் ஏறி நவாப்பின் கோட்டைக்கு வந்தடைந்தார். அவரை வரவேற்று முகமன் செய்த நவாபு தன் அரண்மனையில் ஒரு நாள் தங்கி உணவு அருந்திவிட்டுப் போக வேண்டும் என்று வேண்டினான். அதை திரு. வீரபிரம்மம் ஏற்றுக் கொண்டார்.
நவாபு அவரது ஆற்றலை நோட்டம் பார்க்க வேண்டி தன் பணி ஆள்களுக்கு அவரது உணவில் அசைவ உருப்படிகளைச் சேர்த்து பரிமாறக் கட்டளை இட்டிருந்தான். ஏவலர்களும் அன்றைய பகல் உணவில் அசைவ உருப்படிகளை ஆக்கி ஒரு தங்கத் தட்டில் வைத்து சீலையால் மூடி திரு. வீரபிரம்மத்தின் முன்னே வைத்தனர்.
தன் ஞானப் பார்வையால் மூடி வைக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பதை அறிந்த வீரபிரம்மம் நகைத்தவாறே மூடியிருந்த சீலையை மெல்ல அகற்றினார். அவ்வாறு சீலையை அகற்றியதும் தட்டில் இருந்த அசைவ உருப்படிகள் பூ, பழங்களாக மாறி இருந்தன. இதனால் நடுக்குற்ற நவாபும் ஏவலர்களும் அவர் காலில் வீழந்து தம் செயலுக்கு மன்னிப்பு கோரினர். அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து பல ஊர்தொறும் சுற்றி அலைந்து இறுதியாக கந்திமல்லைய்ய பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு போலேரம்மா யாத்திரைக்காக திரு. வீரபிரம்மமிடம் அவ்வூர் மக்கள் நன்கொடை கேட்டனர். அதற்கு அவர், "ஐயா! நான் ஏழை, பணம் ஏதும் இல்லை. நாளை வாருங்கள் தருகிறேன்" என்றார். பின்னர் தன் சுருட்டை பற்றவைக்க அவர்களிடம் நெருப்பு கேட்டார். அவரை கீழ்ச் சாதிக்காரர் என்று நினைத்து சுருட்டுக்கு நெருப்பு தர மறுத்தனர். உடனே அவர்கள் கண்முன்னேயே போலேரம்மா கோவில் அருகே வந்து நின்று சிறிது நேரம் மேலும் கீழும் கருவறையைப் பார்த்து "போலேரம்மா! போலேரம்மா!! என் சுருட்டுக்கு கொஞ்சம் நெருப்பு கொடு" என்று கேட்டார்.
உடனே கருவறையில் இருந்து உருவம் ஏதும் இல்லாமல் வட்டியில் நெருப்பு மட்டும் சுவாமியின் அருகில் வந்து நின்றது. அந் நெருப்பால் தன் சுருட்டை பற்றவைத்துக் கொண்டு போலேரம்மா கருவறைக்கு செல் என்றார். அவர் கட்டளைப்படி போலோரம்மா கருவறைக்கு சென்று மறைந்தது. இதைக் கண்டோர் அவர் காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரினர்.
திரு. வீரபிரம்மம் பெதகொமர்லா கிராமத்தை சேர்ந்த் பொற்கொல்லர் சிவ கோட்டையாவின் மகள் கோவிந்தம்மாவை மணந்தார். பின் கந்திமல்லைய்ய பள்ளிக்கு திரும்பி அங்கு மக்கள் கட்டிக் கொடுத்த மடத்திலேயே தம் ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் தங்கி மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றி வந்தார்.
கந்திமல்லைய்ய பள்ளிக்கு 15 கி.மீ. தொலைவில் அமைந்த மடுமாலா கிராமத்தில் பிறந்த இசுலாமியர் பீர்சாகிப் சித்தைய்யா தம் 14 ஆம் அகவையில் திரு. வீரபிரம்மத்தின் பெருமைகளைக் கேள்வியுற்று அவரது முதன்மை மாணாக்கர் ஆனார்.
ஐதராபாத்து பயணம்
திரு. வீரபிரம்மம் ஓருசமயம் தம் மாணாக்கர்களை அழைத்துக் கொண்டு ஐதராபாத் சென்றார். அங்கத்து நவாபு சுவாமியை தன் அரண்மனைக்கு வருமாறு மடல் எழுதி பல்லக்கையும் ஏவலரையும் அனுப்பினான். அதை ஏற்று நவாபின் கோட்டைக்குச் சென்றார். அங்கு அவருக்கு நவாபு சிறந்த வரவேற்பைக் நல்கி அவரை அரண்மனைக்கு அழைத்துச் சொன்றான். சுவாமிகள் அப்போது நவாபிடம் தனது பூசைக்கு தக்க வசதி செய்து தருமாறு வேண்டினார்.
அதைக் கேட்டு நவாபு அவரது ஆற்றலை நோட்டமிட எண்ணினான். அவரது பூசைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விளக்குகளில் எரிக்க எண்ணெய் ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி வைத்தான். பூசைவேளையின் போது இதை அறிந்த சுவாமிகள் "அரசே! இசுலாமியரான தாங்கள் இந்து பூசை முறைகளை அறிந்து அதற்கு தக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்தமை கண்டு மிக்க மகிழ்ந்தேன். நீங்களே விளக்குகளையும் ஏற்றி வைக்க வேண்டும் அப்படி ஏற்றி வைத்தால் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதனால் நவாபு திடுக்கிட்டுப் போனான். தண்ணீர் விளக்கு எப்படி எரியும்? எனவே தன் தவற்றை பணியாளர்கள் மீது போட்டுவிட எண்ணி அங்கிருந்த எல்லா விளக்குகளிலும் தண்ணீர் விட்டு திரிபோடச் சொல்லி விட்டான். பின் விளக்குத் திரிகளை நெருப்பிட்டு ஏற்றினான். என்னே வியப்பு எண்ணெய் விளக்குகள் போல் எல்லா தண்ணீர் விளக்குகளும் சுடர்ந்து எரிந்தன. இதைப் பார்த்த நவாபு அதிர்ச்சி வியப்பும் அடைந்தான். தன் தவற்றுக்கு மன்னிப்பு வேண்டினான். பின் நவாபு அவரிடம் காலஞானம் என்ற நூலைப் பற்றி சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
நவாபுக்கு காலஞானம் பற்றி சொல்லுதல்
உலகில் ஞாயச் செயல்கள் குறைந்து அஞ்ஞாயச் செயல்கள் மலிந்து போகும். உண்மையானது பொய்யாகவும் பொய்யானது உண்மையாகவும் செயல்படும். நல்லனவற்றுக்கு நாட்டில் பெருமை இல்லாது போகும். உலகில் தீமை பளிச்சிட்டு ஒளிரும் அதையே மக்கள் அனைவரும் நாடுவர்.
வேதாந்தம் சாரமில்லாமல் போகும். பிரமணர்கள் தந்நலத்தின் பொருட்டு சாத்திரங்களையும் வேதங்களையும் பயன்படுத்துவர். வேதசாத்திரங்கள் பொய் என்ற பேச்சாடல் உலகின் பல பகுதிகளில் நடைபெறும். உலக வாழ்க்கையில் தந்தை மகனையும் மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள்.
பருவ கால மழைகள் உரிய காலத்தில் பெய்யாமல் போகும். விளையும் விளைச்சலில் சத்து குறையும்.
பிராமணர்கள் வேத சாத்திரத்திலிருந்து விலகி சூத்திரர்களைப் போல புலால் உணவு புசிப்பர். தாய்தந்தையர் தம் மகன்களை நம்பாமல் தம் மகள்களையே நம்புவர்.
அரசர்கள் ஆட்சி நடத்துவதற்கு மாறாக மக்களே வன்முறையான அல்லரசகம் (anarchy) நடத்துவர். கோவில்களில் பிராமணப் பூசகருக்குப் பகரமாக சூத்திரர்களே பூசகராகத் திகழ்வார்கள்.
குதிரை, மாடு போன்ற நாற்கால் விலங்குகளின் உதவியின்றி புதிய எந்திர ஊர்திகள் தோன்றும். நாட்டில் உணவு விளைச்சல் குன்றி வற்கடம் (பஞ்சம்) ஏற்படும். ஒருவர் பொருளை மற்றவர் கவர்ந்து செல்வார். மக்களிடம் அமைதி குறைந்து கோவம் அதிகரிக்கும்.
தெய்வ வழிபாடும் நோன்பும் கொள்வோர் வாழ்வில் இடுக்கண்ணும் வறுமையும் உறுவர். வேப்பமரத்தின் இலை இனிப்பாக மாறும். காஞ்சி காமாட்சி கிறுகிறுவென்று சுற்றுவாள். ஒருவனது மனைவி மற்றவனுக்கும் மனைவியாய் இருப்பாள். பகலில் நட்சத்திரம் தோன்றும் அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும். குருவாயூரில் உள்ள கண்ணன் மனிதரிடையே பேசுவான். காசியில் உள்ள கங்கை காணாமல் மறைந்துவிடும். திருப்பதிக்கு போகும் வழியில் தடங்கல் ஏற்படும். திருப்பதி வேங்கடேசன் சொத்துக்கள் மற்றவர்களால் திருடிச் செல்லப்படும்.
இசுலாமியர் அரசும் ஆதிக்கமும் அடியோடு அழிந்து போகும். ஒன்றும் அறியா அப்பாவி மக்கள் பிறவோரால் வஞ்சிக்கப்படுவர். வேதங்களும் புராணங்களும் சரியான முறையில் விளக்கங்கள் கூறப்படாமல் நகைப்பிற்குரிய முறையில் அவற்றுக்கு விளக்கங்கள் சொல்லப்படும். தம் நெஞ்சிலே அறச்சிந்தனையே இல்லார், பகை மனப்பான்மை உள்ளோர், அஞ்ஞாயம், அறப்பிறழ்வு, முறைகேடு செய்வோரின் வல்லாதிக்கம் அதிகரிக்கும்.
உண்மைகளை மறைத்து பொய்களை அதிகரித்து கரவான முறையில் ஏமாற்றுவோர் அதிகமாவார்கள். தாய், தந்தை, உடன்பிறந்தார், உற்றார் உறவினர், நண்பர்கள் என்ற ஆசை பாச உணர்வுகள் மழுங்கிப் போய்விடும். போதைப் பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையராகி போதையிலேயே மூழ்கிக் கிடப்பர்.
தேசத்தில் புதுவகையான அரசியல் அமைப்பு உருவாகி அல்லரசக (anarchy) முறையில் மக்கள் நடத்தப்படுவார்கள். மேலும் நாடும் நாட்டு மக்களும் கேவலமான நிலையை அடைவார்கள். விக்கமேநாம ஆண்டு உலகின் பல பகுதிகளில் கேடான நிலைமைகள் உண்டாகி செல்வர்கள் பெரும்பாலார் ஏழ்மை நிலை அடைவார்கள். தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள மிதவைகள் தண்ணீரில் மூழ்கிப்போகும், நீரில் மூழ்கும் தன்மையுள்ள உலோகப் பொருள்கள் தண்ணீரில் மிதக்கும் தன்மை பெறும். இந்த மாறுதலின் விளைவாக 17% மக்கள் தொகையர் இந்நிலைகளினால் மாண்டு போவார்கள்.
இராத்தாட்சரிநாம ஆண்டு மார்க்க சிரசுத்த சப்தமி அன்று சென்னைப் பட்டினத்தில் ஏழு அகவை பட்டிக்காட்டுப் பெண் ஒருத்திக்கு நான்கு கைகளும், மூன்று கண்களும், மூன்று கால்களும் தலையில் கொம்பும் உடைய ஒரு குழந்தை பிறக்கும். அக்குழ்தை 22 நாள்கள் உயிர் வாழ்ந்து 23 ஆம் நாள் வீரபோக வசந்தராயன் என்பவர் கயவர்களை தண்டிக்கவும் நிகழ்ந்து வரும் அஞ்ஞாயங்களை அழித்து ஈக(தியாக)த்தை நிலைநாட்டவும் மண்ணுலகல் தோன்றப் போகின்றார் என்று சொல்லிவிட்டு உயிரைவிடும்.
அரசாங்கமே பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்வதை ஆதரிக்கும். சத்திரியர்கள் வம்சமே உலகில் இல்லாதவாறு அழிந்து போகும். மூன்று அகவைச் சிறுவன் பெரியோர்களிடம் தருக்கம் செய்வான். சிறியோரின் கருத்துகளும் பெரியோரின் கருத்துகளும் வேறுபடும்.
தான் பெற்ற மகனையே வஞ்சித்துத் தூற்றும் தந்தையும், கணவனை மோசம் செய்து அவனொடு சண்டை பிடித்து அவமானப்படுத்தும் மனைவியும், பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்தந்தையரைப் பேணிக் காக்காத மகன்களும், தாம் மணந்த பத்தினிப் தன்மை கொண்ட மனைவியை துன்புறுத்தும் கணவன்மார்களும் ஆக உலகில் இது போல் தீக்குணம் கொண்டோர் அதிக அளவில் இருப்பர்.
பசுவின் கருவில் மனிதன் பிறப்பான். அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி தருக்கம் செய்வான். மூன்று தலைஉடைய பசுங்கன்று பிறக்கும் அதற்கு இரு விண்டைகள் இருக்கும். அதில் ஒரு விண்டை (யோனி) மனிதத் தன்மை கொண்டதாய் இருக்கும்.
செம்பு பித்தளை ஆகிய மாழைகள் தங்கத்தோடு கலப்படம் செய்யப்பட்டு தூயதங்கம் என்று ஏமாற்றப்பட்டு பத்தரைமாற்று தங்கமாக மக்களிடம் விற்பனைக்கு வரும். பிராமணர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதனால்அவரது மதச்சடங்குகளுக்கு மதிப்பின்றிப் போகும். வேதத்திற்குரியோர் என்று கருதப்பட்டு வந்த மேல் இனத்தவராக விளங்கி வரும் பிராமணர்கள் தம் தந்நலத்திற்காகவும், பணத்தாசைக்காகவும் வேதத்திற்க்கும், பிராமணருக்கும், இதிகாசங்களுக்கும், முன்னோர் கருமங்களுக்கும், தெய்வ பூசனைமுறைக்கும் பிறழானதும் தனக்கு சாதகமானதும் ஆன தவறான விளக்கவிரிவுகளைக் கூடுவார்கள். மேலும் ஒழுக்கம் (ஆசாரம்) தவறி அநாச்சாரங்கள் (ஒழுக்க்க்கேடுகள்) செய்வதில் விருப்பப்படுவதினாலும் மக்கள் நடுவே இவர்களுடைய ஆதிக்கமும், மதிப்பும் நாள்படக் குறையும், சூத்திர்ர்கள் ஆதிக்கம் வளரும். தன்னுடைய நடைமுறையில் நேர்மை தவறி நடப்பதால் இவர்கள் சூத்திரர்களுக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றும் காலம் வரும்.
தாயும் தந்தையும் உலக ஞாயத்தைத் துறந்துவயிற்றுப் பிழைப்பிற்காக தாம் பெற்ற மகனையே விலைக்கு விற்பார்கள். தவிர, வறுமையின் காரணமாக பெண்களே மற்றவர்களுக்கு விலைக்கு விற்கும் விற்பனைப் பொருளாக ஆகுவார்கள்.
கணவன்மனைவி, அண்ணன்தம்பி, மாணாக்கன் குரு, அரசன் மக்கள், ஆகிய இவர்கள் தம் அறமுறைகளைத் துறந்து ஒருவருக்கொருவர் முரண்பட நடந்துகொண்டு துரோகிகளாகத் திகழ்வார்கள். வணிகர்கள் உணவுப்பொருள்களை குறைவான எடைக்கு அதிகமான விலைக்கு விற்பார்கள்.
பணத்திற்காக மக்கள் ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டு அதன் மூலம் சண்டைகள் செய்து ஒருவர்க்கு ஒருவர் உயிரை போக்கிக் கொள்வர். உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் பொருள் சேதமும் உயிர் சேதமும் உண்டாகும். நான் எழுதிய காலஞானத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தில் வளர்ந்திருக்கும் புறியமரத்தில் மணம்மிக்க சாதிப்பூ பூக்கும்.
இதைப் போன்ற முறைதவறிய நடக்கைகள் அனைத்தும் கலிமுற்றி உலகம் அழிவுறுவதற்கான அறிகுறிகள் ஆகும் எனக் கூறி மக்கள் அனைவரும் முக்தி அடைவதற்கான ஞான உபதேசங்களைச் செய்தார்.(பக்கம்: 45 - 51)
திரு. வீரபிரம்மம் கடப்பை வருகை
சுவாமிகள் தம்முடைய அகோபில பயணத்தை அடுத்து கடப்பைக்கு வந்து சேர்ந்தார். இதை அறிந்த கடப்பை நவாபு தன் அரண்மனைக்கு அவரை பகட்டாரமாக வரவேற்க ஆசைப்பட்டான். அதனால் அவர் இருக்கும இடம் தேடி வந்து சுவாமிகள் எங்கள் இடத்திலும் உங்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று கோரினான். அதை ஏற்று திரு. வீரபிரம்மம் நான் உங்கள் இடத்திற்கு வருகிறேன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றார் மறுமொழி தந்தார்.
பின்பு நவாபு சுவாமிகள் உபசேதம் செய்யவதற்காக ஒரு திடலில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். திடல் நடுவே அவர் அமர்வதற்காகப் பெரிய மேடையை அமைத்தான். பறைஅரைந்து நாட்டு மக்கள் பலரையும் அங்கு வரவழைத்திருந்தான். திரு. வீரபிரம்மம் அங்கு பரப்பிரம்மத்தைப் பற்றியும், வேதாந்த ரகசியம் பற்றியும், முக்திக்கான வழியை மக்கள் அறிந்து கொள்வது பற்றியும் சொற்பொழிவு ஆற்றினார். இதைக் கேட்ட நவாபும் மக்களும் மகிழ்ந்தனர்.
சொற்பொழிவு முடிந்ததும் நவாபு சுவாமிகளிடம் வந்து "நானும் என் நாட்டு மக்களும் உங்கள் சொற்பொழிவால் அகம் மகிழ்ந்தோம். எனக்கு ஒரு சேதியில் ஐயம் உள்ளது அதைத் தாங்கள் தாம் தீர்த்து வைக்க வேண்டும்" என்று வேண்டினான். உங்கள் ஐயம் என்ன என்று சொல்லுங்கள் அதைத் தீர்த்து வைக்க முயலுகிறேன் என்றார் சுவாமிகள்.
நவாபு, " என் குதிரை லாயத்தில் ஒரு பெண் குதிரை சினையுற்று உள்ளது. அது ஈனப்போகும் குட்டி எந்த நிறத்தில் இருக்கும்? குட்டி ஆணா? பெண்ணா? என்பதை அறியும் ஆவலுள்ளவனாக இருக்கிறேன். முக்காலமும் உணர்ந்த தங்களுக்கு இதை தெரியப்படுத்துவதில் இடர் ஏதும் இருக்காது என எண்ணுகிறேன்" என்று கூறினான். அதற்கு மெல்ல நகைத்த சுவாமிகள் நவாபிடம் கருவுற்றுள்ள அந்த குதிரையை அவையில் கொண்டு வந்து கட்டுமாறு கேட்டுக் கொண்டார். அவையோர் இச்சேதியை அறிய ஆவல் கொண்டவராக அங்கேயே காத்து இருந்தனர். நவாபின் ஏவலர்கள் உடனே அக்குதிரையை திடல் நடுவே சுவாமிகளின் எதிரே கட்டினர்.
சுவாமிகள் சற்று நேரம் குதிரையை சில இடங்களில் தொட்டுப் பார்த்துவிட்டு பின் நவாபிடம், "இந்த குதிரைக்கு பிறக்கப் போகும் குட்டி சாம்பல் நிறத்ததாய் இருக்கும். அதன் முதுகின் மேல் ஒரு வெண் புள்ளி காணப்படும். அது ஆண் குட்டி" எனக் கூறினார். இதை ஐயமின்றி நீங்கள் எல்லோரும் நம்பலாம் என்றார். அதற்கு நவாபு, சுவாமி! நாங்கள் அஞ்ஞானிகள். நீங்கள் சொல்வதை ஏற்கும் மனப் பக்குவம் எமக்கு இல்லை. மேலும் இம்மண்ணுலகில் வாழும் எங்களுக்கு குதிரையின் பேறு காலம் வரை வாழ்ந்திருக்கும் பேறு உண்டு என்பது உறுதியில்லை. எனவே எங்கள் ஐயம் இப்போதே தீர்த்து வைக்கப்பட வேண்டும்.என்றான். அப்படியானால் உங்கள் அனைவருக்கும் குதிரையின் வயற்றில் வளரும் குட்டியை எடுத்துக் காட்டுகிறேன். குதிரை இருக்கும் நான்கு பக்கங்களையும் திரை இட்டு மூடி மறையுங்கள் என்றார் திரு. வீரபிரம்மம். அப்போது நவாபு, "நீங்கள் உயிர் மேல் இரக்கம் உள்ள ஓகசித்தர். ஆதலால் குதிரையை வெட்டி குட்டியை எடுத்து எங்களுக்கு காட்டினால் உயிர் கொலை செய்த பாவத்திற்கு ஆளாகுவீர். அதே நேரம் எங்களால் அக்குதிரையும் துன்பம் அனுபவிக்க வேண்டாம்" என்றான்.
அதற்கு சுவாமிகள், அரசே! என்னை நீங்கள் தவறாக எண்ணுகிறீர்கள். நாம் கடைபிடிப்பது துன்பமிழையாமைக் கொள்கை. ஆதலால் குதிரைக்கும் குட்டிக்கும் எந்த துன்பமும் நேராமல் குட்டியை எடுத்துக் காட்டுகிறேன்" என்றார். நவாபின் ஆள்கள் குதிரையை சுற்றி நாற்புறமும் திரையிட்டு மூடினர். வீரபிரம்மம் தன் கையில் இருந்த வெள்ளிப் பிரம்பால் குதிரையைத் தடவிக் கொடுத்து பின்னர் குதிரை அருகே நின்று, "குழந்தாய்! வெளியே வா" என்று கூறினார். உடனே குதிரைக் குட்டி வயிற்றை நீங்கி வெளியே வந்தது. சுவாமி குட்டியைத் தன் கையில் ஏந்தி திரைக்கு வெளியே கொண்டு வந்து காட்டினார். அவர் முன்னம் சொன்னபடியே அந்த ஆண் குட்டி சாம்பல் நிறமும், முதுகில் வெண் புள்ளியும் கொண்டிருந்தது கண்டு நவாபு முதல் அனைவரும் வியப்புற்றனர். பின்னர் குட்டியை திரை மறைவினுள் கொண்டு போய் மறுபடியும் தாய் குதிரையின் கருப்பையில் அனுப்பிவிட்டார் திரு வீரபிரம்மம். பின்பு குதிரை லாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நவாபு, "சுவாமி! உங்கள் பெருமையை உணராது நான் உம்மை ஆய்ந்து பார்த்து விட்டேன். என்னை மன்னித்து ஆசி வழங்குங்கள்" என்று வேண்டினான். மறுநாள் சுவாமி மக்களுக்கும் நவாபுக்கும் காலஞான நூலிலிருந்து சில பகுதிகளை படித்துக் காட்டிவிட்டு ஞானஉபதேசம் வழங்கி அங்கிருந்து புறப்பட்டார்.
பிராமணர்களுடன் சுவாமிகள் வாதம்
கடப்பாவிலிருந்து புறப்பட்ட சுவாமி பிரதட்டூர், அல்லாட்டபள்ளி ஆகிய ஊர்களில் தங்கி பின் புஷ்பகிரி என்னும் அக்கிரகாரத்தின் வழியே மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரது மாணாக்கர்கள் வேதபாராயணம் செய்து கொண்டே சென்றனர். இதனால் பிராமணர் சினம் கொண்டு வேதபாராயணம் செய்து கொண்டு வண்டியில் செல்வது யார்? என்று சித்தைய்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், திரு வீரபிரம்மம் செல்கிறார் என்று சொன்னார். இதைக் கேட்ட அக்கிரகார பிராமணர்கள், "வேதபாராயணம் செய்து கொண்டு இவ்வழியே நீங்கள் செல்வது வேதம் அறிந்த எங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது" என்றனர். உங்களுக்கு வேதாந்தம் படிக்கும் அதிகாரம் கிடையாது. அதை உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? என வினாவினர். அதற்கு சித்தைய்யா, "எங்கள் குரு வீரபிரம்மம்" என்றார்.
வேதபாராயணம் செய்வதற்கு பிராமணர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு. உங்களுக்கு அந்த உரிமை கிடையாது. உங்களுக்கு வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் தகுதி பொற்கொல்லர் குடியில் பிறந்த வீரபிரம்மத்திற்கு கிடையாது. எனவே உங்கள் குருவை எங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் வண்டியை மேலும் செல்ல அனுமதிப்போம் என்றனர் பிராமணர். சுவாமி அவர்களிடம் விவாதம் செய்தும் அதை பிராமணர்கள் ஏற்கவில்லை. இதனால் இவர்களுக்கு பாடம் புகட்டினால் தான் திருந்துவார்கள் என்று எண்ணிய வீரபிரம்மம் அக்கிரகாரப் பகுதியை நிமிர்ந்து தம் கண்களால் பார்ந்தார். உடனே அக்கிரகாரப் பகுதி பற்றி எரிவது போல் காணப்பட்டது. இதனால் அவர்கள் பதைபதைத்து அங்கும் இங்கும் ஓடினர்.
அவர்களைப் பார்த்து வீரபிரம்மம், "பிரம்ம ஞானம் அறிந்தவர்கள் என கூறிக் கொள்ளும் பிராமணர்களே! உங்கள் சாதி தான் சிறந்தது என்று கூறும் நீங்கள் ஆற்றல் இருந்தால் தீயினைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார். உடனே அவர்கள் அனைவரும் சுவிமியின் காலில் விழுந்துதம்மை மன்னிக்க வேண்டினர். நீங்கள் நினைத்தால் குடுமி அல்லாக்கால் காலைப் பிடிப்பவர்கள், இருந்தாலும் உங்களை மன்னித்தேன் என்றார். தீ உடனே நின்றது.
திருச்செலாவிகளுக்கு அறிவுரை
ஒரு சமயம் வட நாட்டிலிருந்து புறப்பட்ட திருச்செலாவிகள் (யாத்திரிகள்) கந்திமல்லைய்ய பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்கள் சுவாமியைக் கண்டு ஆசியும் நல்வாழ்த்தும் பெறவிரும்பினர். எனவே திருச்செலாவிகள் வீரபிரம்ம சுவாமியை மடத்தில் வந்து சந்தித்தனர். "ஐயா! ஓகசித்தில் வல்லாளரே! நாங்கள் உமது பெருமைகளை கேள்வியுற்றோம். உங்களைக் கண்டதனால் மகிழ்வுற்றோம். எங்களை ஆசிர்வதித்து எங்களுக்கு ஞானவழியினையும் கலஞானத்தின் சில பகுதிகளையும் சொல்ல வேண்டுகின்றோம்" என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களை ஆசிர்வதித்த சுவாமி, "நான் எழுதிய காலஞானம் ஒரு புரியாத புதிராக இருந்தாலும் வரப்போகும் காலத்தில் என்ன நிகழும் என்பதை உங்களுக்குச் சொல்லுங்கிறேன் எல்லோரும் கேளுங்கள்" என்றார்.
புண்ணிய ஆறுகள் எல்லாம் ஒரு சமயம் பொங்கி அதனால் மக்கள் பெரும் துயர் எய்துவார்கள். கடலில் அமிர்தம் தோன்றும். திருக்காளத்தியில் இருக்கும் சுவர்ணமுகி ஆற்றில் பத்து மாபுருஷர்கள் தோன்றுவார்கள். அச்சமயம் நாயுடுபேட்டை எனும் ஊரில் உள்ள செல்வர்கள் யாவரும் மடிந்து போவார்கள்.
மேலை நாடுகளில் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது செயல்கள் தோன்றும். இந்தியா இரண்டாகவும் பின் மூன்றாகவும் பிரியும். வங்காளதேசம் எனும் நகரம் புயலுக்கு இரையாகி மக்கள் சேதமடைவார்கள். இந்தியாவில் மக்கட்பெருக்கம் ஏற்பட்டு நெருக்கடி அதிகமாகி குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். திருமணங்கள் குலம் கோத்திரம் பாராமல் நடந்தேறும். யானையின் வயிற்றில் பன்றி பிறப்பதும் பன்றி வயிற்றில் குரங்கு பிறப்பதும் போன்ற விந்தை நிகழ்வுகள் நடக்கும்.
வேதங்கள் அயலவர் வசமாகும். ஆதலால் வேதத்தின் மதிப்பு குன்றும். உத்தம பிராமணர்கள் கீழோரிடம் வேலை செய்வார்கள். அதனால் உத்தம குலத்தின் மதிப்பு குறையும். கொச்சர்ல கோட்டை என்னும் ஊரில் இருக்கும் செல்லப்பிள்ளை நாயுடு என்று தேவதை மனிதர்களுடன் பேசும்.
உயர்சாதிப் பெண்கள் நடனம், பாட்டு. நிழற்படம், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மீதான நாட்டம் காரணமாக கெட்டுப் போவார்கள். சிறியோர் பெரியோர்க்கு அஞ்சி நடக்க வேண்டும் என்ற நிலை மாறி பெரியோர் சிரியோர்க்கு அஞ்சி நடக்கும் காலம் வரும். அரசாங்கத்தில் பேரரசன் என்ற நிலை மாறி மக்கள், தலைவர்கள் என்று தேர்ந்தெடுத்து (கட்சி அரசியல்) அவர்களை உத்தமர்கள் என்று நம்ப வைத்து அவர்களால் மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டு அறம் ஒதுங்கி நிற்க அறப்பிறழ்ச்சி மேல் ஓங்கிநிற்கும்.
புண்ணிய தலங்கள், ஆறுகள், ஆகிய இடங்களில் உள்ள வணிகர்களும் பூசை செய்பவர்களும் ஊழியர்களும் ஆண்டவனுக்கு அஞ்சி நடவாமல் அவன் பெயரால் ஏமாற்றி வஞ்சித்துப் பிழைப்பார்கள். அதனால் பக்தி குறைந்து நாத்திகம் பேசவும் கேட்டகவும் ஆவல் ஏற்படும்.
மக்கள் நேர்மையாக நடந்து உழைத்து சம்பாதித்து உண்டு மற்றவர்களை நன்முறையில் முகமன் (உபசரித்து) செய்து நீதிச் சொற்களைக் கேட்டி அதன்படி நடந்து பெரியோர்களை நேசித்து சண்டை இல்லாமல் அமைதியாக தீர்த்துக் கொள்ளும் நிலைமை மாறி நேர்மாறாக நடந்து, தான்தோன்றித்தனமாக நடந்து ஒருவரை நம்பாமல் அமைதி கெட்டு, தனி மனிதனுக்கு ஊட்டச் சத்துக் குறைந்து அதனால் சிறு அகவையிலேயே வலிமை குன்றி கண்பார்வை குறைந்து கோவம் அதிகரித்து ஒருவருக்குஒருவர் பொறாமையும் பொச்சரிப்பும் ஏற்பட்டு துன்புறுவார்கள்.
நல்ல ஒழுக்கமுள்ள குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணமில்லாமல் சோம்பேறிகளாக
ஊர் சுற்றுவார்கள். அவர்ளுக்கு பெற்றோர்கள் அஞ்சி நடப்பார்கள். கைம்பெண்கள் (விதவைகள்) உலகில் அதிகமாவார்கள். கைம்பெண்கள் மறுமணம் புரிந்துகொண்டு மங்கலிகளாகத் திகழ்வார்கள். பத்தினிப் பெண்கள் உலகில் அபூர்வமாக இருப்பார்கள். பெண்கள் நாகரிகம் என்ற பெயரால் கெட்ட வழிகளிலும் கெட்ட செயல்களிலும் ஈடுபடுவார்கள். மக்களின் சராசரி அகவை குறையும். மக்களுக்கு சிற்றின்பங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெள்ளைக் காக்கைகள் காணப்படும். அவை ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும். என் மடத்தை ஏழுதடவை திருடர்கள் சூரையாடுவார்கள். வயிற்றுப் பிழைப்பிற்கான கலைகளையே மக்கள் கற்பார்கள். நான் அப்போது ராசயோகிகளுக்கு மட்டுமே காட்சி தருவேன். (பக்கம் 85 - 87)
இவற்றை கேட்ட திருச்செலாவிகள் விந்தையும் வியப்பும் அடைந்தனர். அவரக்ள் சின்னாட்கள் தங்கி சுவாமியிடம் அறிவுரை (உபதேசம்)பெற்று தம் ஊர் சென்றனர்.
வீரபிரம்மம் தம் முடிவு காலத்தை குடும்பத்தவருக்கு தெரிவித்தல்:
வீரபிரம்மம் ஜீவ சமாதி அடைய திட்டமிட்டு தன் மனைவி கோவிந்தம்மாள், ஐந்து மகன்கள் ஒரு மகள் ஆகியோரை அருகில் அழைத்து நான் இந்த உலகில் நீண்ட நாள் இருக்க விரும்பவில்லை ஆதலால் மூத்த மகன் கோவிந்த ஆச்சாரியை மடத்தின் அதிபனாக பொறுப்பில் ஏற்றலாம் என்று இருக்கிறேன் என்று கூறினார். அதற்கு அவரது மகன் அப்பொறுப்பிற்கு உமது மாணாக்கன் சித்தைய்யாவே ஏற்றவன் என்று கூறினார். அதை மறுத்து கோவிந்த ஆச்சாரிக்கே மட அதிபன் பொறுப்பை தந்தார்.
சுவாமிகள் வைகாசி மாதமே தசமி கூடிய ஞாயிற்றுக் கிழமையில் சமாதி நிலையை எய்த திட்டமிட்டார். நவமி அன்று சமாதிக்கு தேவையான மலர்களைக் கொய்துவர சித்தைய்யா அனுப்பப்பட்டார். சமாதியில் நுழைவதற்கான சரியான நேரம் வந்ததும் வெற்றிப் பேரிகை, கொம்பு, தாளம் போன்ற மங்கள இசைக் கருவிகள் முழங்க 1693 ஆம் ஆண்டு தமது 90 ஆம் அகவையில் கந்திமல்லைய்ய பள்ளியில் சமாதியில் இறங்கி ஊழ்கத்தில் (நிஷ்டையில்) அமர்ந்தார். குறித்த நேரத்தில் சமாதிக் கதவு மூடப்பட்டு மணலால் நிரப்பப்பட்டு செங்கற்களால் கட்டி மூடப்பட்டது. வழியில் வந்து கொண்டிருந்த சித்தைய்யா சுவாமி அதற்குள் சமாதி ஆகிவிட்டதை எண்ணி வருந்தினார். சுவாமியைக் காண சமாதியில் கோர தவம் புரிந்தார். அவருக்கு சுவாமி காட்சி தந்து நல்லறிவுரை வழங்கினார்..
ஒரு சமயம் வீரபிரம்மம் அவர்களின் மகன் போத்தலூரய்யா வனிபென்டா என்ற கிராமத்திற்கு உபதேசம் செய்யச் சென்றார். அங்கிருந்த பொற்கொல்ல இனத்தார் அவர் எதிரே வந்து, "ஐயா! உமது தந்தை சமாதி எய்தி பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இது வரை உயிருடன் இருப்பாரா? அவர் மண்ணில் புதையுண்டு இறந்து தானே இருக்க வேண்டும். அப்படியானால் கணவனை இழந்த பெண் என்ற வகையில் உமது தாய் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து எப்படி மங்கலிப் பெண் போல் வாழ்கிறார்?" என்று கேட்டனர். இதனால் மனக் குழப்பம் அடைந்த போத்தலூரைய்யா இது பற்றி தன் உடன்பிறந்தாரிடமும் தாயிடமும் சொன்னார். அதற்கு கோவிந்தம்மா "அந்த கிராம மக்களுக்கு அறிவு இல்லை, அழிவு காலம் அவர்களுக்கு நெருங்கி விட்டதால் இவ்வாறு பேசுகிறார்கள். நீங்கள் யாரும் இது பற்றி கவலைப்பட வேண்டாம். நான் என் கணவனின் அறிவுறுத்தலின்படியே இவ்வாறு இருக்கிறேன்' என்று கூறினாள். தாயின் பேச்சில் நம்பிக்கை இல்லாத போத்தலூரைய்யா அன்றிரவு கையில் கடப்பாரையை எடுத்துச் சொன்று சமாதியை இடித்துத் பார்த்தார். சமாதியினுள் சுவாமி ஊழ்கத்தில் இருந்பதைக் கண்டு அப்பா! அப்பா!! என்று விளித்தார். கண் விழித்துப் பார்த்த சுவாமி என் அனுமதி இல்லாமல் நீ சமாதியை இடித்து பெரும் பாவச் செயல் செய்துவிட்டாய் என்று கண்டித்து அதற்கான கழுவாயும் (பரிகாரம்) சொல்லி மீண்டும் ஊழ்கத்தில் அமர்ந்தார்.
மடத்தின் அதிபர்களாக மகன்கள் பொறுப்பேற்ற பின்பு மகள் வழிப் பேரன்மார் வழியினர் மடஅதிபர்களாக இன்றளவும் பொறுப்பேற்று வருகின்றனர். கந்திமல்லைய்ய பள்ளி கடப்பை இரயில் நிலையத்தில் இருத்மு 60 கி. மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
இவரப்பற்றிய மேலும் தகவல்கள்
இந்த தளத்தில் காணக்கிடைக்கின்றன