நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக?
''நாமெல்லாம் சந்தோஷமும் நிம்மதியும் வேண்டும் என்றுதான் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஏதேனும் நோய்வாய்ப் பட்டாலோ, காரியங்கள் தடைப்பட்டாலோ ஆயுஷ்ஹோமம் என்கிற பரிகார பூஜையைச் செய்வோம். நம்மைப் படைத்த கடவுளுக்கே அப்படியொரு பரிகார நிவர்த்தி தேவைப்படும் சூழலை சில தருணங்களில் நாமே உருவாக்கி விடுகிறோம். அப்போது செய்யப்படுவதே நீலகண்ட ஹோமம்' என்கிறார் காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தின் நடராஜ சாஸ்திரிகள்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோயிலில் கும்பாபி ஷேகப் பணிகள் துவங்கப்பட்டு, திருப்பணிகள் நடந்துவரும் வேளையில், அந்தக் கோயிலின் இரண்டு கோபுரங்களிலும் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவத்தை அறிந்திருப்போம்.
''பொதுவாக, பேராபத்து நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பித்த காரியம் தடங்கலின்றி முடிய வேண்டும் என்பதற்காகவும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. கடந்த வருடம் ஆந்திராவின் புகழ்பெற்ற ஓர் ஆலயத்திலும் இந்த ஹோமம் செய்யப்பட்டது. ரக்ஷோத்தன ஹோமம், நீலகண்ட ஹோமம் எனச் செய்யும்போது, அது சிறந்த பிராயச்சித்தமாகவும் பரிகாரமாகவும் இருந்து, காரியத் தடைகளைத் தகர்த்துவிடும்' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.
''கொடிய ஆபத்தினின்று மீட்டெடுக்கும் வல்லமை கொண்டது நீலகண்ட மந்த்ரம். பழைய சாந்நித்தியத்துடன் திகழச் செய்யும் குணமும் இந்த மந்திரத்துக்கு உண்டு. மஹா நீலகண்ட மந்த்ரம் என்பது பூதப் பிரேத பிசாச உபத்திரவங்கள் வராமல் இருப்பதற்காகச் சொல்லப்படுகிறது.
ஓம் ஹ்ரீம் நமசிவாய : நமஸ்தே அஸ்து பகவன், விஸ்வேஸ்வராய, மகாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாக்னி காலாய, காலாக்னி ருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, சர்வேஸ் வராய, சதாசிவாய, ஸ்ரீமன் மகாதேவாய, ஓம் ஹ்ரீம் நமசிவாய ஸ்வாஹா... ஸ்வாஹா..! என்று மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்ய, ஆலயத்துக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகிவிடும். சமித்து, அன்னம், நெய், நவதானியங்கள், நெல் பொரி, மூலிகைப் பொருட்கள், பழங்கள் மற்றும் பட்டு வஸ்திரம் ஆகியவற்றை பூர்ணாஹுதியாக ஹோமத்தில் இடுவார்கள்' என்கிறார் சிதம்பரம் கோயில் வெங்கடேச தீட்சிதர்.
''இந்த தீவிபத்து, துரதிருஷ்டவசமானது. அதேநேரம், ஸ்வாமியின் திருமேனிகளுக்கு பாலாலயம் செய்து, கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடந்து வரும் வேளையில், இப்படியொரு தீ விபத்து நடந்திருப்பது எந்தவித பாதிப்பையும் தந்து விடாது. பாலாலயம் செய்ததே, கோயிலையும் சாந்நித்தியத்தையும் அரணெனக் காக்கும்'' என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
அத்துடன், நீலகண்ட ஹோமமும் சேர, நூறு மடங்கு பலனும் பலமும் கிடைக்கும் என்பது உறுதி.
ஆர்.கே.பாலா,
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்